சேலைக்கு செலவழிப்பதைவிட பத்து மடங்கு அதிகமாக ஜாக்கெட்டுக்கு செலவழிக்கிற காலம் இது. சாதாரண எம்பிராய்டரியில் தொடங்கி, ஆரி, ஸர்தோசி என ஏதேதோ வேலைப்பாடுகளை எல்லாம் பார்த்து விட்டோம். புதுசா என்ன இருக்கு?’ எனக் கேட்பவர்களுக்கு லேட்டஸ்ட்டாக ஒரு விஷயம் வைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த உமா மகேஸ்வரி. தையல் கலைஞரான இவர், விதம் விதமான ஜாக்கெட் வடிவமைப்பிலும் நிபுணி!
சாதாரண பிளவுஸ்லேருந்து, டிசைனர் பிளவுஸ் வரைக்கும் எல்லாம் தைக்கத் தெரியும். இப்பல்லாம் சாதாரண பிளவுஸ் தைக்கச் சொல்லிக் கேட்கறவங்களே அபூர்வமாயிட்டாங்க. புடவை சிம்பிளா இருந்தாலும் பரவாயில்லை… பிளவுஸ் ஆடம்பரமா இருக்கணும்னு நினைக்கிறதோட, அதுக்காக செலவு
பண்ணத் தயாராகவும் இருக்காங்க. பேட்ச் ஒர்க்னு சொல்லக்கூடிய வேலைப்பாடு சமீப காலமா பிரபலமாயிட்டு வருது. அதுலயே கொஞ்சம் புதுமையான வடிவம்தான் இந்த பிளவுஸ் டிசைனிங் ஒர்க். சேலைக்கு மேட்ச்சா பிளவுஸ் போடணும்னு நினைக்கிறவங்களைவிட, சேலையில உள்ள அதே டிசைன் பிளவுஸ்லயும் வரணும்னு நினைக்கிறவங்கதான் அதிகம்.
அப்படிக் கேட்கறவங்கக்கிட்ட சேலையைக் கொண்டு வரச் சொல்லி, அதுலேருந்தே நாலஞ்சு கலர் துணியை வெட்டி, சேர்த்து, பிளவுஸ்ல வச்சு பண்ற ஒர்க் இது. அப்படி புடவையிலேருந்து வெட்டினா, புடவையோட நீளம் குறைஞ்சிடும்னு சிலர் நினைப்பாங்க. அவங்களுக்கு அதே கலர்ல தனியா துணி வாங்கி, விருப்பமான டிசைன்ல பிளவுஸ் தச்சுக் கொடுக்கலாம். இந்த முறையில ஜாக்கெட்டோட பின் பக்கம் சூரியகாந்தி பூ டிசைன், V, Uனு என்ன வேணா டிசைன் பண்ணித் தர முடியும்.
ஜாக்கெட்டோட முன் பகுதியிலயும், ரெண்டு கைகள்லயும்கூட டிசைன் வரும். இன்னும் ஆடம்பரமா கேட்கறவங்களுக்கு இதுலயே சமிக்கி, மணி, முத்து வச்சுத் தச்சுத் தரலாம். 500 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினா, ரெண்டு பிளவுஸுக்கு ஒர்க் பண்ணிடலாம். ஒரு பிளவுஸுக்கு 1,500 ரூபாய் கட்டணம் வாங்கலாம். ரெண்டே நாள்ல முடிக்கிற வேலை இது…” என்கிற உமா மகேஸ்வரியிடம் 5 நாட்கள் பயிற்சியில் இந்த வேலைப்பாட்டை கற்றுக் கொள்ளலாம். 8 மாடல் பிளவுஸ் டிசைன் கற்றுக் கொள்ள கட்டணம் 1,500 ரூபாய்.