பெண்கள் எப்போதும் கர்ப்பிணிப் போல் தோற்றம் தரும் பெருத்த வயிறை வெறுக்கவே செய்கிறார்கள்.
பெண்களின் வயிற்று கொழுப்பு காரணம்
பருவ வயதிலும் திருமணத்துக்கு முன்பும் சிற்றிடையோடும், ஒட்டிய வயிறுமாக வலம் வரும் இளம் பெண்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை பெற்றபின் இடையும், வயிறும் பெருத்து அழகு காணாமல் போய்விடுகிறது. உடல்பருமனைப் பற்றி கண்டுகொள்ளாத பெண்கள் கூட எப்போதும் கர்ப்பிணிப் போல் தோற்றம் தரும் பெருத்த வயிறை வெறுக்கவே செய்கிறார்கள்.
1989-ல் தேசிய குடும்பநல மற்றும் சுகாதார ஆய்வில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 11 சதவீதம் பேர் உடல் பருமனாவது தெரியவந்துள்ளது. இதுவே 2005-ல் 15 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 5.8 கோடி பெண்கள் உடல் பருமனாக இருக்கிறார்கள்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் 2009-ல் நடத்திய ஆய்வில் 12.3 சதவீத நகர்ப்புற பெண்கள் குண்டாக உள்ளனர். இதற்கு காரணம் வீட்டு வேலை குறைவு, முறையற்ற உணவு ஆகியவைதான் என்கிறார்கள், நிபுணர்கள்.
மெனோபாஸ் பருவத்தை அடையும் 40 முதல் 60 வயதில் உடல் பருமனான நிலை மாறி தற்போது 20 முதல் 30 வயதில் பெண்கள் குண்டாக ஆரம்பித்து விட்டார்கள். உடல் பருமனாகும்போது அதிகப்படியான கொழுப்பு தோலுக்கு அடியில் படிகிறது. மிகவும் ஆபத்தானது வயிற்றில் சேரும் கொழுப்பு.
அடிவயிற்று கொழுப்பினால் நீரிழிவு, இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. பாலுணர்வு குறைபாடும் தோன்றுகிறது. இதை தடுக்க சில பழக்க வழக்கங்களை மேற்கொண்டாலே போதும். அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் சேரும் நச்சுக்கள் சிறுநீர் மூலம் வெளியேறும்.
தூங்கி எழுந்த ஒரு மணி நேரத்திற்குள் காலை உணவை தொடங்கி விட வேண்டும். முழு தானியங்கள், புரோட்டின் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இரவில் சீக்கிரமே உணவை முடித்துக் கொண்டு படுக்கைக்கு செல்ல வேண்டும். கேழ்வரகில் கால்சியம் அதிகம் உள்ளது. ஓட்ஸ் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. பெண்களின் ஹார்மோன் செயல்பாட்டுக்கு சோயா நல்லது. இவற்றை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற சிறுசிறு தொந்தரவுகளில் இருந்து விழிப்புடன் இருக்க வேண்டும். ஓட்டல் உணவுக்கு எப்போதும் குட்பை சொல்லிவிடுங்கள். முறையாக உடற்பயிற்சி செய்து, வயிற்றுக் கொழுப்பைக் குறையுங்கள். இவற்றை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மெலிந்து சிக்கென சிட்டுப்போல் பருவப் பெண் அழகிற்கு வந்துவிடுவீர்கள்.