விளாம் இலையில் இருக்கிறது இதற்கான தீர்வு! விளாம் மர இலை. செம்பருத்தி இலை தலா 5, கொட்டை நீக்கி பூந்தித் தோல் 4. இவற்றைச் சேர்த்து, தண்ணீர் விட்டு, நன்றாக அரையுங்கள். இதைத் தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்துக் குளியுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வர, கேசத்தின் அடர்த்தி அதிகரிக்கும்.
வறண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு அருமருந்து விளாம்பழத்தின் ஓடு! காய வைத்து உடைத்த விளாம்பழ ஓட்டின் தூள் – 100 கிராம், சீயக்காய், வெந்தயம் – தலா கால் கிலோ., இவற்றை அரைத்து, தலையில் தேய்த்துக் குளித்து வர, பஞ்சாகப் பறந்த கூந்தல் படிந்து பட்டாகப் பளபளக்கும்.
முடி கொட்டும் பிரச்சினையா? அதைத் தடுப்பதில் விளாம் மர இலைக்கு தனிப்பங்கு உண்டு. சுருள் பட்டை 100 கிராம், வெந்தயம் 2 டீஸ்பூன், வெட்டிவேர் 10 கிராம். விளாம் மர இலை 50 கிராம். இவற்றை கால் லீட்டர் தேங்காய் எண் ணெயில் போட்டு, ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில் வைத்து, வடிகட்டிக் கொள்ளுங்கள். தினமும் இந்தத் தைலத்துடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து, தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் அடிமுடி வரை தடவுங்கள். முடி கொட்டுவது நிற்பதுடன் கருகருவென வளரவும் தொடங்கும்.
வெயிலிலும் தூசியிலும் அலைவதால் கூந்தல் அழுக்கடைந்து பிசு பிசு வென்று இருக்கிறதா? செம்பருத்தி இலை, விளாம் இலை சம அளவு எடுத்து அரைத்துத் தலைக்குக் குளிக்க, மூலிகை குளியல் போல அற்புத வாசனையுடன் இருக்கும். எண்ணெய் எதுவும் தேவையில்லை.