30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
p42a
ஆரோக்கிய உணவு

கசப்பே இனிப்பு! வேப்பம்பூ ரெசிப்பி!

சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள 108 தலைசிறந்த (காயகல்பம்) மூலிகைகளில் வேம்பும் ஒன்று. இதன் பூ, இலை முதல் அடிவேர் வரை மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. வேம்பு, மிகச் சிறந்த கிருமிநாசினி. உடலில் எந்த நோய்களையும் அண்டவிடாமல் செய்வதில், வேம்புக்கு நிகர் இல்லை.

கசக்கும் வேப்பம்பூவை உணவில் சேர்ப்பதன் மூலம், வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும். வயிற்றுவலி சரியாகும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். மயக்கம், வாந்தி மற்றும் பித்தம் தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். உடல் வலுப்பெறும். சர்க்கரை நோயாளிகள், வயிறு, தோல் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள், தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். உடல் உஷ்ணத்தைப் போக்கும் சக்தி, வேப்பம்பூவுக்கு உண்டு என்பதால், இந்தக் கோடை காலத்துக்குச் சரியான தேர்வாக இருக்கும்.

வேப்பம்பூவைப் பயன்படுத்தி, சில ரெசிப்பிகளைச் செய்துகாட்டியிருக்கிறார் திருச்சி ஆப்பிள் மில்லட் உணவகத்தின் செஃப் கணேசன்.

வேப்பம்பூ ரசம்

p42a

தேவையானவை: வேப்பம்பூ – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, புளி, துவரம் பருப்பு – தலா 100 கிராம், கடுகு, மஞ்சள் தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். மஞ்சள்தூள் மற்றும் வேப்பம்பூவைச் சேர்த்து வறுக்கவும். இதில், புளியைக் கரைத்து ஊற்றி, கொதிக்கவிடவும். வேகவைத்த துவரம்பருப்பில், தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும். பொங்கி வரும்போது, பெருங்காயத்தூளைச் சேர்த்து இறக்கவும். கடைசியில், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவவும்.

பலன்கள்: குமட்டல், வாந்தி, சோர்வு, மயக்கத்தைப் போக்கும். பசியைத் தூண்டும். சருமத்தைப் பொலிவாக்கும். உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.

குதிரைவாலி வேப்பம்பூ சாதம்

p42b

தேவையானவை: குதிரைவாலி அரிசி – ஒரு கப், வேப்பம் பூ, மாங்காய்ப் பொடி – 2 டீஸ்பூன், முந்திரி – 25 கிராம், கடலைப் பருப்பு – 10 கிராம், காய்ந்த மிளகாய் – 4, மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு, நெய் – 200 கிராம், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குதிரைவாலி அரிசியைச் சாதமாக வடித்துக்கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, கடுகு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாயைத் தாளித்து, முந்திரி, வேப்பம்பூவைச் சேர்த்து வறுக்கவும். குதிரைவாலி சாதத்தைப் போட்டுக் கிளறி, மிளகுத்தூள், மாங்காய்த் தூள், உப்பு சேர்த்து, நன்றாகக் கிளறவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கவும்.

பலன்கள்: சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்கும். சிறுநீரைப் பெருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வயிற்றைக் குளுமையாக்கும்.

வேப்பம்பூப் பொடி

p42c

தேவையானவை: வேப்பம்பூ – 10 கிராம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 25 கிராம், மிளகு, கொத்தவரை வத்தல் – தலா 20 கிராம், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத் தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் கடாயில் நன்கு வறுத்து எடுத்து, கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும். இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம். நல்லெண்ணெய் சேர்த்து, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

பலன்கள்: ஏப்பம், வாயுத் தொல்லையைப் போக்கும். பித்தத்தைக் கட்டுப்படுத்தும்.

வேப்பம்பூ சூப்

p42d

தேவையானவை: வேப்பம்பூ – 4 டீஸ்பூன், கொள்ளு – 50 கிராம், மிளகு – 2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 2, அன்னாசிப் பூ – 5 கிராம், நல்லெண்ணெய் – 25 மி.லி, கடுகு, மஞ்சள் தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, பூண்டு – 50 கிராம்.

செய்முறை: கொள்ளை நன்றாக வறுத்துப் பொடிக்கவும். நல்லெண்ணெயில் வேப்பம்பூவை வறுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீரை, நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் மஞ்சள் தூள் சேர்த்து, கொள்ளுப் பொடியைக் கட்டி இல்லாமல் கரைத்துச் சேர்க்கவும். இதில், வறுத்த வேப்பம்பூ, உப்பு சேர்க்க வேண்டும். மிளகு, பிரிஞ்சி இலை, அன்னாசிப் பூ இவற்றை நன்றாக அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பூண்டு, அரைத்த மிளகுக் கலவையைச் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையைக் கொதிக்கும் சூப்பில் கொட்டி, கலக்கி இறக்கவும்.

பலன்கள்: குடல் புழுக்கள் நீங்கும். வயிற்றில் புண், கிருமித் தொற்று இருந்தால் சரியாகும். பசியைத் தூண்டி, செரிமான ஆற்றலைக் கொடுக்கும். உடலுக்கு புத்துணர்வைத் தரும்.

வேப்பம்பூ துவையல்

p42e

தேவையானவை: வேப்பம்பூ – ஒரு கப், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 2 டீஸ்பூன், வேர்க்கடலை – 80 கிராம், கடுகு, பெருங்காயம் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, உப்பு, புளி, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அதில் வேப்பம்பூவைச் சேர்த்து, நன்கு சிவக்க வறுத்து, தனியாக வைக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, பெருங்காயத் தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து, சிவக்க வறுத்து இறக்கவும். இதனுடன் வறுத்த வேப்பம்பூவைச் சேர்த்து, தண்ணீர் தெளித்து அரைக்கவும். அருமையான துவையல் ரெடி.

பலன்கள்: சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். எளிதில் செரிமானம் ஆகும். வாய்க் கசப்பைப் போக்கும்.

வேப்பம்பூ கார குழம்பு

p42f

தேவையானவை: சின்ன வெங்காயம் – 2 கப், வேப்பம்பூ – அரை டேபிள்ஸ்பூன், பூண்டு – 4 பல், புளி – தேவையான அளவு, மிளகாய் தூள், சாம்பார் பொடி – தலா ஒரு டீஸ்பூன், கடுகு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், தனியா தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வேப்பம்பூவைப் போட்டு வறுத்துக்கொள்ளவும். புளியைக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் பூண்டு, கறிவேப்பிலை போட்டு, மிளகாய் தூள், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் தனியாத் தூள் சேர்க்கவும். பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேவைப்பட்டால், சிறிது எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். இதில், புளிக் கரைசலையும் சேர்த்து, நன்றாகக் கொதித்துவந்ததும், வறுத்த வேப்பம்பூவைச் சேர்த்துக் கலக்கி, ஒரு கொதிவந்ததும் இறக்கவும்.

பலன்கள்: காய்ச்சல் வந்தவர்களுக்கு இந்த குழம்பை செய்து கொடுக்கலாம். உடலுக்குத் தெம்பு கூடும். வயிற்றுப் புண்னை ஆற்றும்.

Related posts

அடேங்கப்பா! இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுங்க..! உடலில் என்னென்ன அற்புதங்கள் நிகழும் தெரியுமா?

nathan

உடல் எடையைக் குறைக்கணுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

பெண்களே மசாலா மீன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்கள்…

nathan

தொப்பை வர காரணமே காலையில் செய்யும் இந்த விஷயங்களால் தான் தெரியுமா?

nathan

தண்ணீரில் ஊறவைத்த பயறை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாமா?

nathan

காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்துகொள்வோமா?

nathan

இந்த 10 அற்புதமான ஜூஸ்களை கொண்டு எப்படி உடல் எடையை குறைக்கலாம் தெரியுமா?

nathan

நீரில் இதை 2 சொட்டு கலந்து பாதங்களை ஊற வையுங்கள்….சூப்பர் டிப்ஸ்

nathan

அமிலத்தை நீக்கும் 7 ஆல்கலைன் உணவுகள்!

nathan