25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
hair oil 002
தலைமுடி சிகிச்சை

கூந்தலுக்கு எண்ணெய் அவசியமா?

அரோமா தெரபிஸ்ட் கீதா அஷோக்

தினமும் கூந்தலுக்கு எண்ணெய் தடவ வேண்டுமா? எண்ணெய் தடவினால்தான் முடி வளருமா?எந்த எண்ணெய் நல்லஎண்ணெய்? எண்ணெய் குளியல் அவசியம்தானா? இப்படி எண்ணெய் தொடர்பாக ஏராளம் சந்தேகங்கள் உண்டு எல்லோருக்கும். எது சரி, எது தவறு என்கிற தெளிவின்றி, தினம் ஒரு எண்ணெயைப் பயன்படுத்துவது, எண்ணெயே இல்லாமல் விடுவது என எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்க்கிறவர்களே பெரும்பான்மை. எண்ணெய் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அஷோக்.

தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பது தேவையற்றது. ஆனால், தினசரி தலைக்குக் குளிக்க வேண்டியது கட்டாயம். இன்றைக்கு சுற்றுப்புறச் சூழல் அளவுக்கதிகமாக மாசடைந்துள்ள காரணத்தினால், தினமும் தலைக்குக் குளிப்பதன் மூலம்தான் அந்த மாசிலிருந்து கூந்தலைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைக்க முடியும். தினம் தலைக்குக் குளித்தால் கூந்தல் வறண்டு விடுமே என நினைப்பவர்கள், இரவு தூங்கச் செல்வதற்கு முன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்து தலையில் தடவி, மறுநாள் காலையில் அலசி விடலாம்.

ஐந்தெண்ணெய் கலவையும் மிகவும் அற்புதமானது. நல்லெண்ணெய்,கடுகெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகிய ஐந்தையும் சம அளவு எடுத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த எண்ணெயை முதல் நாள் இரவு தலையில் தடவிக் கொண்டு, காலையில் கூந்தலை அலசலாம். கூந்தல் ஆரோக்கியத்துக்கு இது மிகச் சிறந்த எண்ணெய்.காதி கடைகளில் குளிர்தாமரை தைலம் எனக் கிடைக்கும். அது 30 மி.லி. அளவு எடுத்து அதில் 10 மி.லி. விளக்கெண்ணெயும், 10 மி.லி. நல்லெண்ணெயும் கலந்து வார இறுதி நாட்களில் தலையிலும், உடலிலும் தடவி ஊறிக் குளிக்கலாம்.

இது உடல் சூட்டைத் தணிக்கக் கூடியது. வார இறுதி நாட்களில் நிதானமான எண்ணெய் குளியல் எடுப்பது மிகவும் அவசியமானது. அப்படி எடுக்கும்போது அந்த எண்ணெய் கலவையில் ஒரு வாரம் விளக்கெண்ணெய், இன்னொரு வாரம் கடுகெண்ணெய், பிறகு ஐந்தெண்ணெய் இப்படி இருக்கும்படி மாற்றிக் கொள்ளலாம். பொதுவாக விளக்கெண்ணெய் உபயோகிப்பவர்களது கூந்தல் அதிகம் உதிராமலும் நரைக்காமலும் இருக்கும்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன் படுத்துவார்கள். தேங்காய் எண்ணெய்க்கு பொடுகை வளர்க்கக்கூடிய தன்மை உண்டு. அதன் அந்த குணத்தைக் குறைக்க அத்துடன் சிறிது கடுகெண்ணெயோ, நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ சேர்த்துக் கொள்ளலாம்.

எண்ணெய்க்கும் முடி வளர்ச்சிக்கும் தொடர்புண்டா?

இந்தக் கேள்விக்கு இல்லை என்பதுதான் நிச்சயமான பதில். எந்த எண்ணெயையாவது பயன்படுத்தினால் முழங்கால் வரை முடி வளரும் என யாருமே உத்தரவாதம் தர முடியாது. ஏனென்றால், முடியின் நீளம், அடர்த்தி என எல்லாவற்றையும் நிர்ணயம் செய்வது நம் ஜீன்கள். பாரம்பரியமாக உள்ளதுதான் தொடருமே தவிர, எண்ணெயால் முடியை வளரச் செய்யவே முடியாது. முடி என்பது தானாக வளரக்கூடியது. அது ஏன் வளரவில்லை… ஏன் கொட்டுகிறது என்பதற்கான மூல காரணத்தைக் கண்டுபிடித்து சரி செய்தாலே எந்த வயதிலும் முடிநன்றாகவே வளரும். எனவே, முடி வளர ஒரு தைலமோ, எண்ணெயோ எந்தவகையிலும் உதவுவதில்லை.

எண்ணெய் குளியல் ஏன் அவசியம்?

அந்தக் காலத்தில் அவசியமான பழக்கமாக இருந்த எண்ணெய் குளியல், முடி வளர்ச்சிக்காக செய்யப்படவில்லை. உடல் சூடு தணிந்து, நரம்புத் தளர்ச்சி மறையவும், மன அழுத்தம் மாயமாகவும்தான் வாரம் ஒரு நாள் எண்ணெய் மசாஜ் செய்து குளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். முடி வளரச் செய்ய வாரம் ஒரு முறை குளிப்பது போதாது. நமது சருமத்தில் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய துவாரங்கள் இருக்கும். அவை சருமத்தின் மேலுள்ள எபிடெர்மிஸ் (Epidermis) லேயரில்தான் இருக்கும். சருமத்தில் எண்ணெயை அரக்கத் தேய்க்கிற போது இந்த துவாரங்கள் வழியே சருமத்தின் உள்ளே இறங்கும். அதன் மூலம் உடல் சூடு குறையும். அசதி மாறும். களைப்பு நீங்கும்.

சைனஸ் உள்ளவர்கள் எண்ணெய் குளியல் எடுக்கலாமா?

அரோமா தெரபியில் சைனஸ் உள்ளவர்களுக்கு பிரத்யேகமான ஆயில்கள் உண்டு. பொதுவாக சைனஸ் உள்ளவர்கள் நீர் கோர்த்துக் கொள்ளும் என பயந்து எண்ணெய் குளியலையே தவிர்ப்பார்கள். ஆனால், சைனஸ் உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு டீஸ்பூன் கடுகு எண்ணெய் எடுத்து, அதில் தலா 3 சொட்டு Tea tree oil, Camphor oil, Black pepper oil கலந்து லேசாக சூடு செய்து, தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கும் போது சைனஸின் வலி மற்றும் தலை பாரம் குறைவதை உணரலாம். இதைத்தான் அரோமா தெரபியில் Lymphatic drainage treatment என்று சொல்கிறோம்.

இதில் சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும்.

1. குளித்த பின்பு தலையில் உள்ள ஈரம் முழுவதும் உலர வேண்டும். தலையில் ஈரப்பதம் இருப்பதால்தான் சைனஸ் வலியை அதிகமாக உணர்கிறார்கள்.

2. சூடான உடல் வாகு உள்ளவர்களுக்கு எண்ணெய் குளியல் மிக அவசியமான ஒன்று. எந்த எண்ணெய் எடுத்தாலும் அதில் விளக்கெண்ணெய் கலந்து தேய்க்க வேண்டும். சூடு குறையும். அரோமா தெரபியில் Lavender, Rose, Cypress, Frankinsense, Geranium oils கலந்து குளித்தால் சூடு குறையும்.

3. எண்ணெயை சூடு செய்து குளிப்பது மிகவும் சிறந்தது. சூடு படுத்தும் போது தலையில் வியர்ப்பதால் துவாரங்கள் திறந்து எண்ணெய் உள்ளே சென்று வேர்க்கால்களை திடப்படுத்தும்.

4.. எண்ணெய் குளியலுக்குப் பிறகு மிதமான ஷாம்பு உபயோகிக்கலாம். ஷாம்பு வேண்டாம் என நினைப்பவர்களுக்கு ஒரு எளிமையான ஹேர் வாஷ்

செய்முறை…

சீயக்காய் 1/4 கிலோ
பார்லி பவுடர் 200 கிராம்
உலர்ந்த ரோஜா இதழ்கள்
பவுடர் 100 கிராம்
விளாமிச்சை வேர் பவுடர் 100 கிராம்
பொடுதலைப்பொடி 100 கிராம்
தவனம் பவுடர் 100 கிராம்.
எல்லாவற்றையும் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகருடன் கலந்து தலையை அலசஉபயோகிக்கலாம்.hair oil 002

Related posts

உங்கள் தலைமுடியை நீளமாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் மாற்ற எலுமிச்சை சாற்றை பயன்படுத்த 5 வழிகள் உள்ளன.

nathan

வழுக்கைத் தலையில் முடி வளர பூண்டுகளை எப்படி பயன்படுத்துவது?

nathan

அடிக்கடி தலையை சொறிய தோணுதா? அப்ப இத படிங்க!

nathan

பொடுகை நீக்கி, மேனியை பலபலக்கவைக்கும் ஆலிவ் ஆயில்!

nathan

முடி வளர்ச்சியை பாதிக்கும் காரணங்கள் மற்றும் நீங்கள் செய்ய வேண்டியவை !!

nathan

தலைமுடியில் கலரிங் செய்ததை பேக்கிங் சோடா மூலம் எவ்வாறு நீக்குவது?சூப்பர் டிப்ஸ்…

nathan

தல… குட்டும் பிரச்னைகள்… எட்டுத் தீர்வுகள்!

nathan

சூப்பர் டிப்ஸ்! வெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.

nathan

கற்றாழை முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியமாக வைக்கிறது!

nathan