25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Daily News 6494213342667
ஆரோக்கியம் குறிப்புகள்

மண்பானை தண்ணீர் ஏன்? ஜில்லென்று இருப்பது ஏன்?

செல்ஃபி வித் சயின்ஸ் 25

ஜிலீரிடுகிற தென்றல் காற்று, வழிந்து ஓடும் நதி, வெண் பஞ்சு மேகமாய் கொட்டுகிற அருவி, கால்களில் மிதிபடும் பனித்துளி… என்பது போல கோடைக்கு இதமாய் ஒரு தகவல்.கொளுத்துகிற வெயிலில் வெளியில் சுற்றிவிட்டு வந்தவுடன் ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஃபிரிட்ஜைத் திறந்து ‘கோக்’ சாப்பிடுகிறோம்.

இப்போது காலம் மாறி, விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. வெயிலுக்கு ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு டம்ளர் மோர், கொஞ்சம் எலுமிச்சை பழச்சாறு அல்லது இரண்டு கீற்று நுங்கு என்று இயற்கை உணவுக்கு மாறிக் கொண்டே வருகிறோம்.

குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரைவிட மண்பானையில் வைத்திருக்கும் நீரை விரும்பி அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ‘இயற்கையோடு இணைந்திருப்பதே இன்பம்’ என்ற முடிவுக்கு நாம் கொஞ்சம் கொஞ்சமாய் திரும்பிக் கொண்டிருக்கிறோம்.

விஷயத்திற்கு வந்துவிடுவோம். விஞ்ஞானிகள் பல வோல்ட் மின்சாரத்தை காலி செய்து தண்ணீரைக் குளிர வைப்பதற்குக் கண்டுபிடித்த ஃபிரிட்ஜ் தொழில்நுட்பத்தை, ஆடம்பரமே இல்லாமல் அசால்ட்டாக நம்மூர் கிராமத்து விஞ்ஞானிகள், வெறும் மண்பானையை வைத்தே செய்து காட்டிவிட்டார்கள்.

மின்சாரம் இல்லாமல், கரன்ட் ‘ஷாக்’ அடித்துவிடுமே என்ற பயம் இல்லாமல், தன்னுள் கொட்டிய நீரை மண்பானை குளிர்வித்து விடுகிறதே எப்படி? ‘குளிர்வித்து விடுகிறது என்பது தெரியும். ஆனால், அது எப்படி நடக்கிறது என்று யோசிக்கவே இல்லையே!’ என ஃபீல் பண்ண வேண்டாம்.பல வருடங்களுக்கு முன்பே இது பற்றி நிறைய யோசித்தார்கள்.

பல மேலை நாடுகளில் நாகரிகம் தொடங்கிய காலத்திலேயே இது பற்றி யோசித்தார்கள். ஆனால் இது பற்றிய அறிவியல் உண்மையை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே இதனை ‘மந்திரப் பானைகள்’ என்று சொல்லி வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

இதில் வளர்ந்த நாடு, தாழ்ந்த நாடு என்ற வித்தியாசம் இல்லை; படித்தவர்கள் – படிக்காதவர்கள் என்ற வேறுபாடும் இல்லை. மூட நம்பிக்கைக்கு பெயர் போன சில ஆப்ரிக்க நாடுகளிலும், ஸ்பெயின் போன்ற முன்னேறிய ஐரோப்பிய நாடுகளிலும், மண்பானைகளை மந்திரப்பானைகள் என்று சொல்லி ‘கல்லா’ கட்டினார்கள்.அது ஒரு பக்கம் இருக்கட்டும்… வரலாற்றைத் தாண்டி அறிவியலுக்கு நாம் வருவோம்!

மண்பானையின் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், வெளியில் வெயில் பட்டையைக் கிளப்பும்போது மண்பானை தன்னுள் இருக்கிற நீரை அதிக அளவு குளிரச் செய்யும். வெளிப்புறத்தில் வெயில் குறைவாக இருந்தால் மண்பானையில் உள்ள நீரும் குறைந்த அளவே குளிர்ந்து இருக்கும்.

கடும் கோடையில் உடலுக்கு இதமாக, ஒரு மண்பானை நீரை நன்றாகக் குளிரச் செய்து கொடுக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்!? மண்பானை சீக்ரெட்டின் எனர்ஜி ரொம்பவே சிம்பிள்தான்.

மண்பானைகளில் நுண்துளைகள் நிறையவே இருக்கின்றன. நீர் வைக்கப்பட்டிருக்கும் மண்பானைகளின் வெளியே முத்து முத்தாய் வியர்த்திருப்பது ேபான்று நீர்த்திவலைகள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

மண்பானையில் உள்ள சிறிய நுண் துளைகள் வழியேதான் இப்படி நீர் கசிகிறது. இந்த நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. இப்படி பானையின் வெப்பமும், பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுகிறது. எனவே நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கிறது.

வெளிப்புறக் காற்றின் தன்மையைப் பொறுத்தும், நீர் குளிர்ச்சி அடையும் தன்மை மாறும். பானையைச் சுற்றிலும், அதாவது வெளிப்புற வெப்பம் அதிகமாக இருந்தால், அதிக வெப்பத்தின் காரணமாக நீர் ஆவியாவதும் அதிக அளவில் நடைபெறுகிறது. ஆவியாதல் மூலமாக வெப்பம் வெளியேற்றப்படுவதால் பானைக்குள் இருக்கும் நீர் மிகவும் குளிர்ச்சியாக மாறுகிறது.

பனிக் காலத்திலும், மேலைக்காற்று வீசும் காலத்திலும் காற்றில் ‘ஈரப்பதம்’ அதிகம் கலந்து இருக்கும். காற்று ஜில்லென்று வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகரித்திருக்கும் இந்தப் பருவ காலத்தில் நீர் ஆவியாகும் அளவு குறைகிறது. எனவே பானையில் இருக்கும் நீரும் குறைந்த அளவே குளிர்ச்சி அடைகிறது.

ஆனால், இதற்காக மண்பானையில் நீண்ட நேரம் நீரை வைத்து குளிரச் செய்தால், அது அப்படியே ஐஸ் கட்டி ஆகிவிடும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. நவீன கால ஃபிரிட்ஜ்கள் போல ஒரேயடியாகப் பற்களை நடுநடுங்கச் செய்யும் அளவுக்கு மண்பானை தண்ணீரை குளிர்விக்காது.

ஒரு மண்பானை எந்த அளவுக்கு நீரை குளிர்விக்கும் என்று கேட்டால், அறை வெப்பநிலையைவிட வெறும் 5 டிகிரி செல்சியஸ் குறையும் அளவுக்குத்தான் குளிர்விக்கும். வெளிப்புறத்தில் வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் என்றால் மண்பானையில் உள்ள நீரின் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.

இப்போது புரிகிறதா! பண்டைக்கால மக்கள் நம்பியதுபோல, மந்திரம் எதுவும் மண்பானையில் இல்லை.
Daily News 6494213342667

Related posts

உங்களுக்கு தெரியுமா இவையெல்லாம் தான் பெண்களால் அடக்கி கொள்ளவே முடியாத ஆசையாம்.. என்னென்ன தெரியுமா?..

nathan

டீ குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது தானா?

sangika

மசாலாக்களை பாலில் கலந்து குடித்தால் போதும்! சர்க்கரை நோய் கிட்டயே வராதாம்!

nathan

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்! மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளை தூங்க வைக்கும் வழிகள்!!!

nathan

ஆண், பெண் உறவில் வயது வித்தியாசம் அவசியமா?

nathan

பெண்களே காலையில் டென்ஷன் இல்லாமல் வேலையை தொடர வேண்டுமா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

உங்கள் பின்புறம் அழகாக அமைய சில ஆலோசனைகள்.!

nathan

டயட்டில் இருக்கும்போது தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்!

nathan