தேவையானவை: ஆரஞ்சு ஜூஸ் – 20 மி.லி, எலுமிச்சம்பழ ஜூஸ் – 20 மி.லி, சர்க்கரை – 20 கிராம், ஆரஞ்சு, புதினா – தலா 5 கிராம், நறுக்கிய அன்னாசி, பப்பாளி, தர்பூசணி, வாழைப்பழத் துண்டுகள் – தலா 100 கிராம், கறுப்பு திராட்சை – 50 கிராம்.
செய்முறை: ஆரஞ்சு, எலுமிச்சை ஜூஸ், சர்க்கரை, புதினா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக் கலக்கவும். இந்த ஜூஸ் கலவையில், அன்னாசி, பப்பாளி, தர்பூசணி, வாழைப்பழத் துண்டுகளைச் சேர்த்துக் கலக்கவும். கடைசியாக, திராட்சையையும் சேர்த்துக் கிளறினால், சாலட் தயார்.
பலன்கள்: வைட்டமின் ஏ, சி, இ, ஐசோபீன், ஃப்ளேவனாய்டு, கால்சியம், நார்ச்சத்து போன்ற, உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. இதயநோய், கொலஸ்ட்ரால், அத்ரோஸ்கலீரோசிஸ், ஆர்த்ரைடிஸ், உடல்பருமன் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். உடலின் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். சளிப் பிரச்னை உள்ளவர்கள், தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சளித்தொல்லை நீங்கும். சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம், சர்க்கரையைத் தவிர்க்கவும். அலர்ஜி காரணமாக சைனஸ் உள்ளவர்கள், அலர்ஜி தரும் பழத்தைத் தவிர்க்கலாம்.
அன்னாசிப்பழம் ஜீரணசக்தியைத் தரும். தர்பூசணி, உடலின் நீர்ச்சத்து வற்றிப்போகாமல் காக்கும். பப்பாளி, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னையைப் போக்கும். ஜீரணக் கோளாறு வராமல் தடுக்க, கண் பார்வை தெளிவடைய, நெஞ்சு எரிச்சல் குணமாக, உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க, உடல் எடை குறைய, தோல் மினுமினுப்பு அடைய, ஃப்ரூட் சாலட் ஏற்றது.