இறுதி மாதவிடாய் வாழ்க்கையின் முக்கிய திருப்புக் கட்டமாகும் (Climacteric). இந்த வாழ்க்கை மாற்றம் பெண்களுக்கு வயது நாற்பதுக்குப் பிறகு ஐம்பத்துக்கு முன்பு ஏதாவது ஒரு காலகட்டத்தில ஏற்படும். ஆனால் சாதாரணமாக இந்த மாதவிடாய் இறுதி, சற்றேறக்குறைய நாற்பத்தைந்தாவது வயதில் நிகழ்வது வழக்கம்.
இந்த இறுதி மாதவிடாய் ஒரு பெண்ணுக்கு குழந்தைகள் பிறப்பிக்கும் நிலை முடிவாகிவிட்டதைக் காட்டும் அடையாளமாகும். பெண் சூலகங்கள் (Female Ovaries) முட்டைகளை (Eggs) அல்லது இயக்குநீர் (Hormones)களை இனிமேல் உற்பத்தி செய்ய இயலாது. ஆகையால் மாதவிடாய் இதோடு அற்று விடுகிறது. ஒரு பெண் முறையாக மாதவிடாய் தொடங்கிய காலமுதல் மாதந்தோறும் கருவகத்தில் ஒரே ஒரு முட்டை தோன்றிப் பழுத்த நிலையில் அமையும். இந்த முட்டை அங்கிருந்து அகற்றப்பட்டு முட்டை அண்ட நாளம் (Oviduct) வழியாக கருப்பைக்கு (Uterus) வருகிறது.
இந்த முட்டை சினைப்படாதிருந்தால் இறந்துவிடும். கருப்பையின் உள்வரி (Lining of the Womb) சிறிது குருதியுடன் அகற்றப்பட்டு யோனிக்குழாய் வழியாக வெளிவருகிறது. அதன்பின் கருப்பையின் உள்வரி மீண்டும் வளரும். அந்த வளர்ச்சி அடுத்த முட்டைகளை எதிர்பார்த்து நிற்கும். சில பெண்கள் நலங்குன்றிச் சோர்வுற்றவராய் (depressed) மாதவிடாய் காலத்தில் இருப்பர். அவர்கள் அடுத்த கட்ட வாழ்க்கைக்குத் தயாராவதற்கேற்ப அவர்களுடைய உடல்கள் சரிப் படுத்திக் கொள்ள வேண்டிய நிலையினாலேயே அவ்வாறு கிளர்ச்சியுற்றவராய் உள்ளனர்.
ஆனால் இந்த அறிகுறிகள் (Symptoms) மிகக் குறுகிய காலத்தில் மறைந்துவிடும். மாத விடாய் நாள் அளவு எல்லார்க்கும் ஒன்றுபோல் இருப்பதில்லை. இந்தக் கால எல்லைகள் வேறுபாடு கொண்டவை. ஆண்களும் விந்துகள் உற்பத்தி குறிப்பிட்ட அளவு குறையத் தொடங்கும்போது இறுதி மாதவிடாய்க் காலம் உடையவராகின்றனர். ஆனால் இதற்கான வெளிப்படையான குறியீடுகள் சாதாரணமாகத் தெரிவதில்லை. ஆனால் இந்த மாற்றம் ஆண்களுக்கு வழக்கமாக ஐம்பத்தைந்துக்கும் அறுபதுக்கும் இடையில் நிகழும்.