‘கர்ப்ப காலத்தில் பெண்கள் எது சாப்பிடுவது நல்லதோ, இல்லையோ போதுமான பால் குடிப்பது ரொம்ப நல்லது’. இதை தனி நபர்கள் சொல்லவில்லை. மருத்துவர்கள் சொல்லவில்லை. நிபுணர்கள் சொல்லவில்லை. முக்கியமான ஓர் ஆய்வு சொல்லியிருக்கிறது. கருவுற்ற காலத்தில் பெண்கள் சுத்தமான பாலை, தேவையான அளவு சாப்பிடுவதால் குழந்தையின் இளமைப் பருவம் வளமாக இருக்கும். முக்கியமாக, பிறக்கும் குழந்தை உயரமாக வளரும். என்கிறார்கள். ‘க்ளினிக்கல் நியூட்ரிஷன்’ என்ற ஐரோப்பியப் பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.
கர்ப்ப காலத்தில் பெண்கள் 150 லிட்டருக்கும் அதிகமான பாலைக் குடித்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை வளர் இளம் பருவத்தில் (டீன் ஏஜ்), உயரமாக வளர்வார்களாம். இது, ஆண், பெண் இரு பாலினக் குழந்தைகளுக்கும் பொருந்தும். அதே நேரம், 150 லிட்டருக்குக் குறைவான பாலை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அந்த அளவுக்கு உயரமாக வளர்வதில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது. அதாவது, ஒருநாளைக்கு 250 மி.லி. பாலாவது குடிக்க வேண்டும்.
இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் குழு ஒன்று ஈடுபட்டது. 1980ன் பிற்பகுதியில் பிறந்த குழந்தைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். அந்தக் குழந்தைகளின் டீன் ஏஜ் பருவத்தில் அவர்களின் உயரம் கணக்கிடப்பட்டது. அவர்கள் கருவிலிருந்த காலத்தில், அவர்களின் தாய்மார்கள் எவ்வளவு பால் அருந்தினார்கள் என்பதையும் கணக்கிட்டார்கள். டென்மார்க்கில் இருக்கும் 809 பெண்கள், 1988லும் 1989ம் ஆண்டும் பிறந்த குழந்தைகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்.
ஆய்வின் முடிவில், குழந்தைகள் உயரமாக வளர்வார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த வருடம் இங்கிலாந்து விஞ்ஞானிகள் நடத்திய ஓர் ஆய்வில் இன்னொன்றும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கர்ப்ப காலத்தில் அதிகமாக பால் அருந்தும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஐக்யூ திறன் மிக அதிகமாக இருக்குமாம். அதற்குக் காரணம் பாலில் அயோடின் அதிகமாக இருப்பதுதானாம்.