நமக்கு எளிதாக கிடைக்கும் மூலிகைகளை தேனீராக்கி குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படும். அந்தவகையில், இதயத்தை பலப்படுத்த கூடிய செம்பருத்தி தேனீர், நுரையீரல் நோய்களை குணமாக்கும் துளசி தேனீர், கல்லீரல் நோய்களை போக்கும் ஆவாரம் பூ தேனீரின் நன்மைகள் என்னென்ன.
செம்பருத்தி பூவை பயன்படுத்தி இதயத்தை பலப்படுத்தும் தேனீர் தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: செம்பருத்தி பூ, பனங்கற்கண்டு, சீரகம். ஒருவேளைக்கு 2 சிவப்பு செம்பருத்தி பூ, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் பனங்கற்கண்டு, ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடித்தால் இதயத்துக்கு பலம் கிடைக்கும். ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும்.
உடல் பலப்படுவதுடன் அழகு சேர்க்கும். செம்பருத்தியில் காப்பர் சத்து உள்ளது. இது, இதயத்தின் இயக்கத்துக்கு நன்மையை ஏற்படுத்துகிறது. செம்பருத்தியில் உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் சத்துக்கள் அதிகம் உள்ளன. துளசியை பயன்படுத்தி நுரையீரலை பலப்படுத்தும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: துளசி இலைகள், ஏலக்காய், தேன். 10 துளசி இலைகளுடன் ஒரு ஏலக்காயை தட்டி போடவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இதை வடிக்கட்டி தேன் சேர்த்து குடிப்பதால், நுரையீரல் பலப்படும். வியர்வையை தூண்டி காய்ச்சலை தணிக்கும். துளசி உள் உறுப்புகளை தூண்டக் கூடியது. ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. சளியை கரைத்து வெளியே தள்ளும். உயர் ரத்த அழுத்தத்தை சமப்படுத்தும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட துளசியை தேனீராக்கி குடிப்பதால் நோய் வராமல் தடுக்கப்படுகிறது. ஆவாரம் பூவை பயன்படுத்தி கல்லீரலை பலப்படுத்தும் தேனீர் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: ஆவாரம் பூ, பனங்கற்கண்டு. சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டு சேர்க்க தேவையில்லை.ஒருபிடி அளவு ஆவாரம் பூவுடன், சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிக்கும்போது கல்லீரல் பலப்படும். கல்லீரல் நோய்கள் குணமாகும். ரத்தத்தில் உள்ள பித்தத்தின் அளவை குறைக்கும். தோல் பளபளப்பாகும். ஆவாரம் பூ மஞ்சள் நிற பூக்களை கொத்துக்கொத்தாக கொண்ட மலர்.
இது சாலை ஓரங்களில் அதிகம் வளர்ந்திருக்கும். சிறந்த மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. ஆவாரம் பூ ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. சர்க்கரை நோயை தணிக்க கூடியது. ஊட்டசத்துக்கள் மிகுந்தது. பித்த சமனியாக செயல்பட கூடியது. ஈரலை பலப்படுத்தும் தன்மை உடையது. மஞ்சள் காமாலைக்கு மருந்தாக விளங்குகிறது. எலும்புகளை உறுதியாக்க கூடியது. செம்பருத்தி, துளசி, ஆவாரம் பூ ஆகியவற்றை தேனீராக்கி குடிப்பதன் மூலம் உடல்நலம் மேம்படும்.