கொத்தவரை செடியின் வேர் மண்ணில் நைட்ரஜன் சத்தை அதிகரிக்க செய்து மண்ணின் வளத்தை பெருக்குகிறது. அதனால் இது விவசாயிகளின் விருப்பப் பயிராகவும் உள்ளது. சத்துக்கள் நிறைந்த கொத்தவரங்காய் உணவுகள் கொத்தவரை செடி வகையை சேர்ந்தது. மூன்று முதல் நான்கு அடி உயரம் வரை வளரக்கூடியது. இது சீனி அவரைக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.
கொத்தவரங்காயில் புரதம் நிறைந்துள்ளது. நீரில் கரையும் நார்ச்சத்தும், நீரில் கரையாத நார்ச்சத்தும் இதில் உள்ளது. நீரில் கரையும் நார்ச்சத்து ஜீரணத்திற்கு உதவுகிறது. நீரில் கரையாத நார்ச்சத்து உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்கு உதவுகிறது.
நாம் கொத்தவரங்காய் உணவுகளை சாப்பிடும்போது அதில் இருக்கும் சர்க்கரை மெதுவாகவே ஜீரணமாகும். அதனால் இன்சுலின் ஹார்மோன் சற்று குறைவாகவே சுரந்தாலும் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரிப்பதில்லை. மிக குறைந்த கிளைசிமிக் உணவு பட்டியலில் கொத்தவரங்காய் இடம் பிடித்துள்ளது. இதில் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவும்.
கொத்தவரங்காயில் போலிக் அமிலம் உள்ளதால் கர்ப்பிணி பெண்கள் இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அதில் இருக்கும் கால்சியம் சத்து எலும்புகளின் வளர்ச்சிக்கு துணைபுரிகிறது. இரும்பு சத்து, ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது.
கொத்தவரங்காய் சற்று கசப்பு சுவை உடையது. கொத்தவரங்காய் சாப்பிட்டால் வாதம் அதிகரிக்கும் என்றும் கை, கால் வலி உண்டாகும் என்றும் சிலர் கருதுகிறார்கள். அத்துடன் தேங்காய் துருவல், மிளகு, சீரகம் போன்ற பொருட்களை சேர்த்து சமைப்பதால் அதில் இருக்கும் வாததன்மை சமநிலையடைந்து விடும்.
கொத்தவரங்காய் விதை (குவார்கம்) மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தது. அதை பொடி செய்து மருந்து தயாரிக்கிறார்கள். இந்த பொடி சர்க்கரைநோயை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடையையும், உடல் கொழுப்பையும் குறைக்கும். மலச்சிக்கலையும் போக்கும்.
கொத்தவரங்காய் விதை பொடியில் புரதமும், நார்ச்சத்தும் இருக்கிறது. நீரில் கரையக்கூடிய நார்ச்சத்தாக இருப்பதால் மலச்சிக்கலை எளிதாக போக்குகிறது. மேலும் ஜீரணப் பாதை ஆரோக்கியமாக இயங்கவும் உதவுகிறது. அடிக்கடி மலம் கழிக்கும் உணவுர்வினை உண்டாக்கக்கூடிய பெருங்குடல் அழற்சி நோய்க்கு இந்த விதை பொடி சிறந்த மருந்தாகும்.
இந்த பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, 200 மி.லி நீரில் கலந்து சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக குடித்துவிடவேண்டும். அவ்வாறு செய்தால் அதிகம் பசிக்காது. சாப்பிடும் உணவின் அளவு குறையும். உடல் எடை அதிகம் கொண்டவர்கள் இந்த முறையை பின்பற்றலாம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கொத்தவரை விதை பொடி அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கொத்தவரை செடியின் வேர் மண்ணில் நைட்ரஜன் சத்தை அதிகரிக்க செய்து மண்ணின் வளத்தை பெருக்குகிறது. அதனால் இது விவசாயிகளின் விருப்பப் பயிராகவும் உள்ளது.
கொத்தவரங்காயில் தயாராகும் சுவையான உணவுகள்:
பருப்பு உசிலி:
கொத்தவரங்காய் -அரை கிலோ (சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்)
துவரைபருப்பு- 50 கிராம்
கடலைபருப்பு-50 கிராம்
காய்ந்த மிளகாய்- 5
சோம்பு-1 தேக்கரண்டி
உப்பு-தேவைக்கு
தாளிக்க:
கடுகு-1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு-1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- தேவைக்கு
பெருங்காயத்தூள்-1/2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய்- 3 தேக்கரண்டி
செய்முறை:
துவரைபருப்பு, கடலைபருப்பை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். தண்ணீரை வடிகட்டி நீக்கிவிட்டு அத்தோடு காய்ந்த மிளகாய், சோம்பு போன்றவைகளை சேர்த்து தறியாக அரைக்கவும். அதனை இட்லி தட்டில் ஏழு நிமிடம் வேகவைத்து ஆறிய பின்பு உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
கொத்தவரங்காயை வேகவைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கவேண்டிய பொருட்களை தாளிக்கவும். அதில் உதிர்த்து வைத்துள்ள பருப்பை கொட்டவும். கொத்தவரங்காயையும் சேர்த்து, உப்பு கலந்து வதக்கவும்.
இது சாதத்திற்கு நல்ல கூட்டு. மோர்க்குழம்பு, புளிக்குழம்புடன் சேர்த்து உண்டால் அதிக சுவை தரும். கொத்தவரங்காயுடன் பருப்பும் சேர்வதால் உடலுக்கு அதிக புரதசத்து கிடைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஏற்ற உணவு.
பொரித்த கூட்டு :
கொத்தவரங்காய் -அரை கிலோ (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
பாசிப்பருப்பு-100 கிராம்
மிளகு – அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் -5
சீரகம் -1 தேக்கரண்டி
தேங்காய்-அரை முடி (துருவிக் கொள்ளவும்) மஞ்சள்தூள்- அரை தேக்கரண்டி
உப்பு -தேவைக்கு
தாளிக்க:
கடுகு-1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு-அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை-தேவைக்கு
தேங்காய் எண்ணெய்-2 தேக்கரண்டி
செய்முறை:
கொத்தவரங்காயை வேகவைத்து கொள்ளவும். பாசிப்பருப்பில் மஞ்சள் தூள் கலந்து குழைய வேகவைக்கவும். தேங்காய், காய்ந்தமிளகாய், மிளகு, சீரகம் ஆகியவற்றை அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கும் பொருட்களைக்கொட்டி தாளியுங்கள். வேகவைத்த கொத்தவரங்காய், பருப்பு, அரைத்த மசாலாவையும் சேருங்கள். உப்பும் சேர்த்து கொதிக்கவையுங்கள்.
இதை சாதம், சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.தயிர் கூட்டு
கொத்தவரங்காய் – அரை கிலோ (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
கடுகு-1 தேக்கரண்டி
சீரகம்- அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம்- அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை-தேவைக்கு
உப்பு-தேவைக்கு
தயிர்கலவைக்கு:
புளித்த தயிர் -100 மி.லி
தனியாதூள்-2 தேக்கரண்டி
மிளகாய்தூள்-1 தேக்கரண்டி
கடலைமாவு-அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய்-3 தேக்கரண்டி
செய்முறை: கொத்தவரங்காயை வேகவைத்துக் கொள்ளவும். தயிர்க் கலவையில் சேர்க்கவேண்டிய பொருட்களை சேருங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், கறிவேப்பிலையை தாளியுங்கள். அதில் தயிர் கலவையை கொட்டி சிறுதீயில் 3 நிமிடம் கொதிக்கவிடுங்கள். வேகவைத்துள்ள கொத்தவரங்காயை அதில் சேருங்கள். உப்பும், பெருங்காயத்தூளும் கலந்துகொள்ளுங்கள்.
இது சற்று புளித்து வித்தியாசமான சுவை தரும். சப்பாத்தி மற்றும் சாதத்துக்கு ஏற்றது.
வற்றல் :
கொத்தவரங்காய் -1 கிலோ
தயிர்-100 மி.லி
உப்பு-தேவைக்கு
செய்முறை:
வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வையுங்கள். நன்கு கொதிக்கும்போது கொத்தவரங்காயை கொட்டி இரண்டு நிமிடம் வேக வைத்து, அடுப்பை அணைத்து விடுங்கள். 5 நிமிடம் கழித்து நீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். தயிரில் உப்பு கலந்து வேக வைத்துள்ள கொத்தவரங்காயில் கலந்து வெயிலில் காயவையுங்கள். ஆறு நாட்கள் வெயிலில் காயவைக்கவேண்டும்.
தேவைக்கு தக்கபடி எண்ணெயில் பொரித்து பயன்படுத்துங்கள். கூழ் சாப்பிடுபவர்கள் இதை பொரித்து சாப்பிட்டால் அதிக சுவையாக இருக்கும்.