போலித்தனமாக வாழ்பவர்களை விட, இந்த போலித்தனமான உலகில் தன்னிலையைக் காத்துக் கொள்ள தங்களது உண்மையான முகத்தை மறைத்துக் கொண்டு வாழ்பவர்கள் தான் அதிகம். போலியோ அழிந்தாலும் கூட இவ்வுலகில் போலிகள் அழியுமா என்பது சந்தேகம் தான்.
உணவுப் பொருட்களில் போலியான பிராண்ட் பார்த்திருப்பீர்கள், கலப்படம் செய்து விற்கப்படும் உணவுப் பொருட்களை பார்த்திருப்பீர்கள். ஆனால், உணவென்று நம்பி நீங்கள் விரும்பி சாப்பிடும் உணவே போலியானது என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?
உருளைக்கிழங்கு சிப்ஸ், கிரீம், சீஸ் என நீங்கள் சாப்பிடும் பல உணவுகள் போலியாக தயாரிக்கப்படுகின்றன. மேலும் விரிவாக தெரிந்துக்கொள்ள தொடர்ந்துப் படியுங்கள்….
உருளைக்கிழங்கு சிப்ஸ்
இன்றைய நிலையில் பல பிராண்டுகள், பல சுவைகளில் தயாரிக்கும் சிப்ஸ் வகையானது, உருளைக்கிழங்கு சிப்ஸ் தான். அதுவும், கிரிஸ்பியாக இருந்தால் மக்களுக்கு சாப்பிடுவதில் பேரானந்தம். அதிகபட்சம் சில சிப்ஸ் வகைகளில் தான் 40% உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. அதுவும், காய்ந்த உருளைக்கிழங்கின் செதிள்களாக தான் பயன்படுத்தப்படுகின்றன. உண்மையில், கிரிஸ்பியாக இருக்க வேண்டும் என்பதற்காக அரிசி மாவும், செயற்கை சுவையூட்டும் பொருள்களும் கலந்து தான் பெரும்பாலுமான சிப்ஸ் வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
சீஸ்
பெரும்பாலும் நீங்கள் கடைகளில் வாங்கும் சீஸ் முழுக்க முழுக்க பாலினால் மட்டும் யாரிக்கப்படுவதில்லை. 15 வகையான பொருட்களின் கலவைகள் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது. வே புரதம் (Whey Protein), பாலின் கொழுப்பு, சோடியம் சிற்றேட், கால்சியம் பாஸ்பேட், உப்பு, லேக்டிக் அமிலம், சிவப்பு மிளகு சாறு (வண்ணத்திற்காக) மற்றம் பல பொருள்களின் கலப்புகளினால் தான் சீஸ் தயாரிக்கப்படுகிறது. நீங்கள் வீட்டில் தயாரிக்கும் சீஸ்ஸிற்கும், கடையில் வாங்கும் சீஸ்ஸிற்கும் நிறையவே வேறுபாடு இருக்கின்றன.
கிரீம்
நீங்கள் உணவில் ருசி சேர்ப்பதற்காக வாங்கும் கிரீம், உண்மையிலே சரியான முறையில் தயாரிக்கப்படும் கிரீம் அல்ல. பாலின் பகுதியளவு மட்டுமே ஒத்திருப்பது போல இருக்கும் சோடியம் (sodium caseinate) என்னும் பொருளின் உதவியோடு தான் தயாரிக்கபப்டுகிறதாம். சர்க்கரையும், எண்ணெய் கலவை, இயற்கை மற்றும் செயற்கை சுவைக் கலவைகள், டை-பொட்டாசியம் பாஸ்பேட் போன்றவை கலந்து தான் கிரீம் தயாரிக்கப்படுகிறது.
வெண்ணிலா (Vanilla)
வெண்ணிலா என்பது பலரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு சுவை. ஆனால், இன்று இது பல பொருள்களில் செயற்கை சுவையூட்டியாக தான் கலக்கப்படுகிறது. இயற்கையாக பெரும்பாலானோர் தயாரிப்பது இல்லை. வென்னிளின்(Vannilin) எனப்படும் செயற்கை கலவையின் மூலமாக வெண்ணிலாவின் சுவைக் கொண்டுவரப்படுகிறது. இதுவும் முற்றிலுமாக இரசாயனங்களும், செயற்கை பொருள்களும் கொண்டு தயாரித்து விற்கப்படுகிறது.
சாக்லேட்
சாக்லேட் பிஸ்கட்கள் மற்றும் சாக்லேட் உணவுகள் என்று கூறி விற்கப்படும் பெரும்பாலான உணவுப் பொருட்களில், செறிவூட்டப்பட்ட மாவு கலவையும், சர்க்கரை, சாக்லேட் சுவையூட்டி, பேக்கிங்பவுடர், செயற்கை சுவையூட்டிகள், கொழுப்பு நீக்கப்பட்ட பால், பருத்திவிதை எண்ணெய், பகுதியாக ஹைட்ரஜன் ஏற்றிய சோயா மற்றும் சில எண்ணெய் கலவைகள் போன்ற உணவுகளின் கலவையினால் தான் தயாரிக்கப்படுகிறதாம்.
வேர்கடலை வெண்ணெய் (Peanut butter)
இப்போது மால்களில் அதிகம் வாங்கப்படும் உணவுப் பொருளில் வேர்கடலை வெண்ணெயும் (Peanut butter) ஒன்றாகும். இதுவும் கூட செயற்கை சுவையூட்டிகளினால் தான் தயாரிக்கப்படுகிறது. பெருபாலும் அனைத்து சுவைகளுக்கும் ரசாயன உதவியின் பால் தயாரிக்கப்பட்ட செயற்கை சுவையூட்டிகள் சந்தையில் இருக்கின்றன என்பது தான் வேதனையான உண்மை. இவை யாவும் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் தன்மையுடையவை ஆகும்.
ஆரஞ்சு ஜூஸ்
இன்று பாட்டில் மற்றும் கவர்களில் அடைத்து விற்கப்படும் பெரும்பாலான ஜூஸ் வகைகள் அனைத்தும் ரசாயனங்களின் கலவைகளினால் மட்டுமே முழுக்க முழுக்க தயாரிக்கபப்டுகின்றன. பிரக்டோஸ் கார்ன் சிரப், செறிவூட்டப்பட்ட ஆரஞ்சு, போன்ற கலவைகள் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது. உண்மையாகவே பழங்களைக் கொண்டு தயாரித்தால் அவை சில நாட்களிலேயே கெட்டுப் போய்விடும், பதப்படுத்தி விற்கப்படும் ஜூஸ்கள் குடித்தாலும் கேடு தான் விளைவிக்கும்.
மற்றவை
பெரும்பாலான ஜூஸ் மற்றும் குளிர் பானங்கள், பேக்கேஜ் செய்து விற்கபடும் உணவுகள் போன்றவை இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதில்லை. மற்றும் 90% போலியான உணவுகளை தான் நாம் உண்டு வருகிறோம் என்பதே உண்மை.