25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
p30
ஆரோக்கிய உணவு

உடல்நலன் காக்கும் உணவுமுறை!

நம்முடைய உணவு சத்தானதாக இல்லை என்பது சாப்பிட உட்காரும் ஒவ்வொரு முறையும் புரிகிறது. ஆனால் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. சாலட், பழங்கள் மட்டும் எடுத்துப்பார்க்கலாம் என்றால், இரண்டு நாட்களுக்கு மேல் தொடர முடிவதில்லை. மரபு சார்ந்த, மண் சார்ந்த உணவுகள் உடலுக்கு நல்லது என்பதுப் புரிந்தாலும், துரித உணவுக்குப் பழக்கப்பட்டுவிட்ட நாக்கையும் மனதையும் எப்படி மாற்றுவது?

தினசரி உணவில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், நம் உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமாக மாற்றிவிடலாம்.

காபி, டீ க்குப் பதிலாக…

காலை எழுந்ததும் ஏதேனும் சூடாகக் குடிக்கும் பழக்கம் இருந்தால், அது டீ, காபியாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சுக்கு காபி, பானகம், மூலிகை டீ மற்றும் கஞ்சியாகவும் இருக்கலாம். இனிப்புக்குக் கருப்பட்டியைச் சேர்க்கலாம். மூலிகை டீ குடிக்க விரும்புவோர், சுக்கு, மிளகு, பட்டை, ஏலக்காய், தனியா, ஆவாரம் பூ, லெமன் க்ராஸ், கொய்யாத் தழை, முருங்கைத் தழை, துளசி ஆகியவற்றை சேர்த்துக் காய்ச்சிக் குடிக்கலாம். சுக்கு, ஏலக்காய், கொத்தமல்லி போன்றவற்றைச் சேர்த்து, சுக்கு மல்லி காபி குடிக்கலாம். வெந்நீரில் வெல்லம் சேர்த்து, ஏலக்காய் தட்டிப்போட்டு பானகமாகக் குடிக்கலாம்.

குழந்தைகளுக்கு, பிறந்த ஆறு மாதத்திலிருந்தே, ராகி மாவு, சுக்கு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து கஞ்சியாகக் கொடுக்கலாம். ஊறவைத்த கேழ்வரகை, முளைகட்டவைத்து, நிழலில் உலர்த்திப் பொடித்து, வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு கலந்து, கஞ்சி அல்லது கூழாகக் கொடுக்கலாம்.

100 கிராம் கேழ்வரகில் 344 மி.கி கால்சியம் உள்ளது. இது எலும்பு மற்றும் எலும்பு மஜ்ஜையின் ஆரோக்கியத்துக்கு உதவும். சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுவதால், உறுப்புகளும் நன்றாக செயல்படும். இதனால் நோயும் நெருங்காது.

காலை உணவு

காலையில் நாம் சாப்பிடும் இட்லி, தோசை ஆகியவை வெள்ளையாக மட்டுமே இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறுதானியங்களில் இட்லி, தோசை, இடியாப்பம், பொங்கல், உப்புமா, கஞ்சி, புட்டு ஆகியவற்றைச் செய்து சாப்பிடலாம். நிறம் மாறியிருக்குமே தவிர, உடலுக்கு அவ்வளவு நல்லது.

முந்தைய நாள் ஊறிய பழைய சோறை, மறுநாள் சாப்பிடும்போது அதில் உருவாகியிருக்கும் ப்ரோபயாடிக் (Probiotic) உடலில் எதிர்ப்பாற்றலை உருவாக்கும். இதனுடன் சிறு வெங்காயம், காய்கறிக்கூட்டு சேர்த்துச் சாப்பிடுகையில், அன்றைய நாளுக்குத் தேவையான ஆற்றலையும், புத்துணர்வையும் தந்துவிடும்.

முந்தைய நாள் களியை மறுநாள் கூழாக, கீரை மற்றும் காய்கறிக் கூட்டோடு் சேர்த்துச் சாப்பிடும் நம் மரபான உணவு முறையே சரியான உணவுமுறை.

மதிய உணவு

வெள்ளை மணி போல், தனித்தனிப் பருக்கைகளாகத் தட்டை அலங்கரிக்கும் அரிசி உணவுப் பழக்கத்திலிருந்து மீள்வது ஒன்றே ஆரோக்கியத்
தின் முதல்படி. மதிய உணவு திடமான உணவாக இருக்கலாம். ரொட்டி, பாலிஷ் செய்த அரிசியைத் தவிர்த்து, சாம்பார் சாதம், மல்லி சாதம், கறிவேப்பிலை சாதம், குழம்பு சாதம், பிரியாணி ஆகிய உணவு வகைகளும் ஏற்றது.

எலுமிச்சை சாதத்துக்குத் தினை அரிசி, பிரியாணிக்கு வரகு, தயிர் சாதத்துக்குக் குதிரைவாலி, மல்லி மற்றும் கறிவேப்பிலை சாதத்துக்கு சாமை, சாம்பார் சாதத்துக்கு வரகு, குழம்பு ஊற்றிச் சாப்பிட சாமை, ஆப்பத்துக்கு மாப்பிளை சம்பா, தோசைக்குக் கருங்குருவை என ஒவ்வொரு அரிசி வகைக்கும் கலவை உணவு அற்புத சுவையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும். ஆப்பம் பிரவுன் நிறத்திலும், தோசைக் கருநீல நிறத்திலும் வருவதால் நிறத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகமாக இருக்கும். அலுவலகம் செல்வோர், சிறுதானியத்தில் செய்த, கலவை சாதங்களை எடுத்துச் செல்லலாம்

சோறுடன் தயிர், ரசம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. வேப்பம் பூ, துத்திக் கீரை, தூதுவளை, கோவைத் தழை, நுணாத் தழை, அருகம்புல், மூக்கரட்டை, கீழாநெல்லி இவற்றில் ஏதாவது ஒன்றை வதக்கி, சீரகம், மிளகு, பூண்டு, காய்ந்த மிளகாய், புளிக் கரைசல் சேர்த்து, வைக்கும் ரசம் மதிய உணவுக்கு அருமையாக இருக்கும். தீட்டப்படாத சிறுதானியங்களை உண்பதே நல்லது. மேலும், எல்லோரும் சிறுதானியங்களை உண்ணும்போது, அதன் விலையும் குறைய வாய்ப்பு உள்ளது.

இரவு உணவு

இரவில் சிறுதானியக் களி போன்ற உணவுகளைச் சாப்பிடும் பழக்கம் இருந்தது. ஆனால், இன்று வாழ்வியல் பழக்கம் மாறிஉள்ளதால், இரவிலும் டிபன் உணவுகளைச் சாப்பிடுவதே சரி. ஆனால், அவை எளிதில் செரிக்கக்கூடிய இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவாக இருப்பது நல்லது.
நொறுக்குத் தீனி பொட்டுக்கடலை, வேர்க் கடலை, எள்ளு உருண்டை, பொருள்விளங்கா உருண்டை, கார அரிசி புட்டு, அவல் பாயசம், அவல் உப்புமா, பனங்கிழங்கை வேக வைத்து, பொடியாக்கி செய்யும் சத்து உருண்டை, நவதானியங்களால் ஆன சத்து மாவு உருண்டை, தேங்காய் பர்ப்பி போன்றவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கின்றன.
p30

Related posts

அடிக்கடி காய்ச்சல் மற்றும் பிற நோய்களால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வது எப்படி…?

nathan

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? அப்ப டீ யூஸ் பண்ணுங்க.

nathan

தெரிஞ்சிக்கங்க…துரியன் பழம்: சுகாதார நன்மைகள், ஊட்டச்சத்து, தோல் மற்றும் கூந்தலுக்கான பயன்பாடுகள்..!!!

nathan

உங்களுக்கு அந்த பிரச்சினையால் அவதியா? அப்படின்னா இத நாக்குக்கு அடில வைங்க.

nathan

30 வகை ரெடி டு ஈட்

nathan

கொண்டைக்கடலையில் இவ்வளவு மருத்துவ பயன் இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

nathan

பலாப்பழம் சாப்பிட்டால் உடனே இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள். இல்லையெனில் அது நச்சுத்தன்மையுடையதாக மாறும்…

nathan

வெற்றிலை உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள்

nathan