உணவில் பழங்களையும், காய்கனிகளையும் அதிகளவில் சேர்த்துக் கொண்டால், நம்மை பிடித்திருக்கும் நோய், தூர விலகும் என்பது, இயற்கை விதி. குறிப்பாக, லிச்சி பழத்தில், உடலுக்கு நன்மை தரும் முக்கிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இப்பழம் குறித்து, தென்னிந்திய மக்களுக்கு அதிகம் தெரியாது. சீனாவை பூர்வீகமாக கொண்ட இப்பழம், வட இந்தியாவில் அதிகம் கிடைக்கிறது.
சிவப்பு நிறத்தில் கெட்டியான தோலுடனும், சுளை, வெள்ளை நிறத்தில் முட்டை போலும் இருக்கும். இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும் பழத்தில், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின்,
நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அடங்கியுள்ளன.
மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும். நார்ப்பொருள், 0.5 கிராம், கால்சியம் 10 மி.கி.,
பாஸ்பரஸ், 35 மி.கி., இரும்பு சத்து, 0.7 மி.கி., உள்ளன. இருதயத்தையும், ஈரலையும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.
இப்பழத்தை தினமும் உண்டு வந்தால், இருதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாய் இயங்கும். வைட்டமின் சி, மற்றும் ஆண்டியாக் ஸிடண்ட்களை கொண்டுள்ளதால், நோயை எதிர்க்கக் கூடிய ஆற்றலை பெற்றுள்ளது.
இது, இருமல், சளி, காய்ச்சல் உட்பட பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி, உடலுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்கிறது. நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் சிறந்த பழம். தினமொரு லிச்சி பழத்தை சாப்பிட்டு வந்தால், உடலை சிறப்பாக பாதுகாத்து கொள்ளலாம்.