நன்றி குங்குமம் முத்தாரம்
நன்றி டாக்டர் கு.கணேசன்
தலையில் நரைமுடி விழுவதை யார்தான் விரும்புவார்கள்? தலைக்கு அழகு சேர்ப்பது முடிதான். அந்த முடி கறுகறுவென இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லைதான். இந்த எண்ணம் நிறைவேற வேண்டுமானால் நம் உடலில் வைட்டமின் பி5 சரியான அளவில் இருக்க வேண்டும்.
‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என வைட்டமின் பி5, ‘பாட்சா’ ஸ்டைலில் சொல்லக்கூடும்! அந்தப் பெயர், பென்டோதெனிக் அமிலம். இது எல்லா இயற்கை உணவுகளிலும் நிறைந்துள்ளது. இதனால்தான் இதற்கு இப்படிப் பெயர் வந்தது. கிரேக்க மொழியில் ‘Pantothen’ என்றால் ‘எங்கும் நிறைந்துள்ள’ என்று பொருள்.
அரிசி, கோதுமை, பயறுகள், பருப்புகள், எண்ணெய் வித்துகள், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, பால், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பீன்ஸ், தக்காளி, சோயா பீன்ஸ், நிலக்கடலை, பட்டாணி, பரங்கிக்காய் மற்றும் பச்சைநிறக் காய்கறிகளில் இது அதிகமாக உள்ளது. இவை தவிர கைக்குத்தல் அரிசி, தீட்டப்படாத கோதுமை, கீரைகள், காளான், கேரட், காலி ஃபிளவர், தக்காளி, உருளைக்கிழங்கு, ஓட்ஸ், பேரீச்சை, ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் போன்றவற்றிலும், ஆட்டிறைச்சி, ஈரல், முட்டை, மீன் முதலிய அசைவ உணவுகளிலும் இது அதிகமுள்ளது.
இது செய்யும் அடிப்படை வேலை, நமது இயல்பான உடல் வளர்ச்சிக்குத் துணைபுரிவது. மற்ற வைட்டமின்களைப் போல், உணவில் உள்ள உணவுச் சத்துகளை ஆற்றலாக மாற்றித் தருவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
உணவில் உள்ள வைட்டமின் பி5 ரத்தத்திற்குச் சென்றதும் ‘கோ என்சைம் ஏ’ எனும் துணை என்சைமாக மாறிவிடும். இதிலிருந்து இன்னும் சில துணை என்சைம்கள் உருவாகும். அவற்றுள் முக்கியமானவை: 1. அசிட்டைல் கோ ஏ (Acetyl CoA) 2. சக்சினில் கோ ஏ (Succinyl CoA) 3. அசைல் கோ ஏ (Acyl CoA) 4. HMG கோ ஏ. இவை செல்களில் நிகழும் குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் போன்றவற்றின் வளர் சிதை மாற்ற வினைகளில் பங்கு கொண்டு,உணவுச்சத்துகளை உடைத்து, உடலுக்கு ஆற்றலைத் தருகின்றன.
நம் நரம்பு மண்டலச் செயல்பாட்டுக்கும் இது முக்கியமாகத் தேவைப்படுகிறது. ரத்தத்தில் சிவப்பணுக்கள் சரியான அளவில் உற்பத்தியாவதற்கும், ரத்தம் சீராகச் செயல்படுவதற்கும் ‘ஹீமோகுளோபின்’ எனும் நிறமிப் பொருள் தேவை. இதில் உள்ள ‘ஹீம்’ எனும் வேதிப்பொருள் உற்பத்தியாக வேண்டுமானால், ‘சக்சினில் கோ ஏ’ எனும் துணை என்சைம் தேவை. அதைத் தருவதும் வைட்டமின் பி5தான்.இது செய்யும் மற்றொரு மகத்தான பணி, முடி வளர்ச்சிக்கு உதவுவது. முக்கியமாக, தலைமுடி நரைக்காமல் இருக்க வேண்டுமானால், இந்த வைட்டமின் ரத்தத்தில் சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். இளநரையைத் தடுக்கும் வைட்டமின் ஒன்று உண்டென்றால், அது வைட்டமின் பி5தான்.
இது எப்படிச் சாத்தியமாகிறது? பென்டோதெனிக் அமிலம் கால்சியத்துடன் இணைந்து ‘கால்சியம் பென்டோதினேட்’ (Calcium Pantothenate) எனும் வேதிப்பொருளாக மாறிவிடும். இது முடியின் வளர்ச்சியைத் தூண்டியும் முடியின் நிறத்துக்குத் தேவையான நிறமிகளைத் தந்தும் முடி கருமையாக வளர்வதற்கு உதவுகிறது. இதனால், இளமையிலேயே தலைமுடி நரைப்பது தடுக்கப்படுகிறது.
உடலில் வைட்டமின் பி5 பற்றாக்குறை ஏற்படும்போது இளநரையோடு, ‘கால் எரிச்சல் நோய்’ (Burning foot syndrome) எனும் ஒரு முக்கியமான நோயும் ஏற்படுவதுண்டு. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு காலில் உணர்ச்சி குறைந்திருக்கும். பாதங்களில் முள் குத்துவதுகூட தெரியாது. மதமதப்பாக இருக்கும். அடிக்கடி கால்கள் மரத்துப் போகும். போகப் போக, பாதங்களில் எரிச்சல், வலி, ஜில்லிடும் உணர்வு போன்றவை ஏற்படும். கால் தசைகள் இழுத்துக் கொள்ளும். ஆரம்பத்தில் கவனிக்கவில்லை என்றால், பாதங்களில் ஊசி குத்துவது போல் வலி வேதனைப்படுத்தும். இரவு நேரங்களில் கால்கள் எரிவது போன்ற உணர்வு ஏற்படும்.
இந்த நோயைக் கண்டுபிடித்தது ஓர் இந்தியர் என்பதை இந்த இடத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஹைதராபாத் வாசியான டாக்டர் சி.கோபாலன் என்பவர் 1946ம் ஆண்டில் போர்க் கைதிகளிடமும், போர் அகதிகளிடமும் இந்த நோய் அதிகம் காணப்படுவதைக் கண்டறிந்து உலகத்திற்கு வெளிப்படுத்தினார். ”மற்றவர்களைவிட இவர்களுக்கு சத்துப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதுதான் இதற்குக் காரணம்” என்பதையும் நிரூபித்தார் இளநரை உள்ள நோயாளிகளுக்கும் கால் எரிச்சலால் அவதிப்படுபவர்களுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளில் வைட்டமின் பி5 கட்டாயம் இருக்கும்.
இந்த மருந்தை 1919ல் அமெரிக்காவைச் சேர்ந்த உயிர்வேதியியலாளர் ரோஜெர் ஜெ.வில்லியம்ஸ் கண்டுபிடித்தார். இவர் ஈஸ்ட் செல்களை அபரிமிதமாக வளர்ப்பதற்கு ஒரு சத்துப் பொருளைத் தேடிக்கொண்டிருந்தார். இறைச்சி, முட்டை, இலை தழைகள் மற்றும் தானியங்களை ஒன்று மாற்றி ஒன்றாகப் பரிசோதித்துப் பார்த்தார். அப்போது தற்செயலாகக் கண்டுபிடித்ததுதான், வைட்டமின் பி5. இது எல்லா உணவுகளிலும் இருப்பதை உறுதி செய்துகொண்டார். பிறகு வைட்டமின் பி5 பற்றாக்குறை காணப்பட்ட சுண்டெலிகளுக்கு இந்த உணவுகளைக் கொடுத்தார். அப்போது அவற்றுக்கும் நோய் குணமானது என்பது உறுதியானது.
இவர் பிறந்தது நம் தமிழ்நாட்டில் என்பது ஒரு வரலாற்று சுவாரசியம். இவருடைய அமெரிக்கப் பெற்றோர் ஊட்டியில் குடியிருந்தபோது இவர் பிறந்தார். இவருக்கு இரண்டு வயது ஆகும்போது இவருடைய பெற்றோர் அமெரிக்காவுக்குத் திரும்பினர். அங்கு கலிபோர்னியாவில் உயர் கல்வி பயின்றார்; பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்; இந்த வைட்டமினைக் கண்டுபிடித்தார்.