மருத்துவ குறிப்பு

கல்லீரலை பலப்படுத்தும் சீரகம்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு உணவு பொருட்களும் அருமருந்தாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் நீருக்கு முக்கிய பங்கு உள்ளது. உடலில் நீர் சத்து குறைந்து போனால் உள்ளுறுப்புகள் பலவற்றையும் அது பாதிக்கிறது. எனவே நீரை பயன்படுத்தி மருத்துவ முறையை மேற்கொள்ளும் முறைகளை நமது முன்னோர்கள் நமக்கு சொல்லியிருக்கிறார்கள். இதற்காகத்தான் நெய்யை உருக்கு, மோரை பெருக்கு, நீரை சுருக்கு என்று சொல்வார்கள். இதன் பொருள் என்னவென்றால், நெய்யை நன்றாக உருக்கி பயன்படுத்த வேண்டும். மோரை நன்றாக நீர் மோராக மாற்றி நீர்க்கச் செய்து பருக வேண்டும்.

அதே போல் நீரை சுருக்கு என்றால், தண்ணீரை நன்றாக காய்ச்சி வடிகட்டித்தான் பருக வேண்டும் என்பதுதான் அதன் பொருள். நமக்கு அன்றாடம் கிடைக்கும் எந்த வகை தண்ணீராக இருந்தாலும் அது மிகவும் சுத்தமானதாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சுத்தமான குடிநீர் அவசியம் ஆகும். எனவே நாம் அன்றாடம் சமையல் அறையில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே தண்ணீரை சுத்தமான, ஆரோக்கியமான குடிநீராக எவ்வாறு மாற்றலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

சீரகம், சோம்பு, வெந்தயம் போன்றவற்றை பயன்படுத்தி நாம் அன்றாட குடிநீரையே மருத்துவ குடிநீராக மாற்றலாம். ஒரு டம்ளர் நீர் அளவுக்கு தயார் செய்வதற்கு, நாம் அரை ஸ்பூன் அளவுக்கு சீரகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்றாக காய்ச்சிய நீரில் இட்டு நன்றாக ஊற வைக்க வேண்டும். இதை சீரக குடிநீர் என்றும், சீரக ஊறல் நீர் என்றும் சொல்வார்கள். சீரகம் நன்றாக ஊறிய பிறகு இதை மீண்டும் கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்றரை டம்ளர் அளவுக்கு எடுத்து அதை ஒரு டம்ளராக சுருக்கிக் கொள்ள வேண்டும்.

இது மிகுந்த மருத்துவ குணம் உடையதாகும். உள் உறுப்புகளை சீர் செய்வதாலேயே இதற்கு சீரகம் என்ற பெயர் வந்தது. சீரகத்தை எந்த வகையில் உள்ளுக்குள் எடுத்துக் கொண்டாலும் அது உள்ளுறுப்புகளை சீர் செய்யும் குணம் கொண்டதாக விளங்குகிறது. குறிப்பாக செரிமானத்தை தூண்டக் கூடியது. மலச்சிக்கலை போக்கக் கூடியது. ரத்த ஓட்டத்தை சீராக்கக் கூடியது. சீரகம் உடலுக்கு உஷ்ணத்தை தந்து வியர்வையை வெளியேற்றக் கூடியது. கல்லீரலை பலப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் பித்தத்தின் அளவை கட்டுப்படுத்தக் கூடியது.

அதே போல் சோம்பு எனப்படும் பெருஞ்சீரகத்தை பயன்படுத்தி மருத்துவ குடிநீர் தயார் செய்யலாம். தண்ணீரை நன்றாக காய்ச்சி எடுத்து அதில் 3 முதல் 4 மணி நேரம் வரை ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் சோம்பை சேர்த்து ஊற வைக்க வேண்டும். இதை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க செய்ய வேண்டும். பின்னர் இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.பெருஞ்சீரகம் பித்த சமனியாக செயல்படுகிறது. வயிற்று கோளாறுகளை சோம்பு போக்குகிறது. மிக சிறந்த மலமிளக்கியாக சோம்பு செயல்படுகிறது. ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தக் கூடியது.

சர்க்கரை நோய்க்கு சோம்பு குடிநீர் மிகச் சிறந்த மருந்தாகிறது. சோம்பு வயிற்றில் ஏற்படும் புற்று நோய் கிருமிகளை முன் கூட்டியே வராமல் தடுக்கும் சக்தி உடையது. இதனால்தான் நமது கலாச்சாரத்தில் உணவுக்கு பிறகு சோம்பை வாயில் இட்டும் மெல்லும் பழக்கம் உள்ளது. இது போல் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு உணவு பொருட்களையும் கொண்டு மருத்துவ குடிநீரை தயார் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button