நாம் சாப்பிட்ட உணவை வயிறு ஏற்றுக்கொண்டது என்பதற்கான வெளிப்பாடுதான் ‘ஏற்பம்-‘… அதாவது, ஏப்பம். சரியான முறையில் அரைத்துச் சாப்பிட்டோம் என்றால் நிச்சயம் ஏப்பம் வரும், செரிமானமும் சுலபமாக நடக்கும். சரியான உணவுப்பொருளை சரியான முறையில் சாப்பிடவில்லை என்றால் செரிமானக் கோளாறு ஏற்படும். அப்படி ஏற்படும்போது சோடா வாங்கிக் குடித்தால் செரிமானமாகி விடும் என்கிற நம்பிக்கை பரவலாக உள்ளது. இதில் எந்தளவு உண்மை இருக்கிறது? இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் பாசுமணியிடம் கேட்டோம்…
”செரிமானத்துக்கும் சோடா குடிப்பதற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. சோடா வாயுக்களால் தயாரிக்கப்படுவதால் முழுக்க வாயு நிரம்பிய திரவம். அதைக் குடிக்கும்போது இரைப்பையில் அந்த வாயு வெளிப்பட்டு ஏப்பமாக வருகிறது. சாப்பிட்டு முடித்த பின் மட்டுமல்ல… சாதாரண நேரங்களில் குடிக்கும்போது கூட ஏப்பம் வரும். சாப்பிட்டு முடித்ததும் குடித்து வருகிற ஏப்பத்தில் செரிமானம் அடைந்து விட்டதாக உளவியல் ரீதியாக நமக்கு விடுதலை ஏற்படுகிறது என்பதுதான் உண்மை. சாப்பிடுகிற உணவை நன்றாக அரைத்துக் கூழாக்கிச் சாப்பிட்டாலே, அது இரைப்பைக்குச் செல்லும்போது அமிலச்சுரப்பியின் கூழாக்கும் வேலையை மிச்சப்படுத்தி விடும்.
இதனால் உடனே செரிமானம் ஆகி ஏப்பம் வரும். இரைப்பையில் அமிலச்சுரப்பிகள் மட்டுமல்லாமல், புரதம், மாவு, கொழுப்பு ஆகிய ஒவ்வொன்றையும் உடைக்க சில நொதிகளும் இருக்கின்றன. அந்த நொதிகளில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அது தொடர்பான பொருட்கள் உடைக்கப்படாமல் போகும். மேலும் வயிற்றுப் பிரச்னைகளான அல்சர், வயிற்றுப் புண், நோய்த்தொற்று ஆகியவை இருந்தால் கூட செரிமானப் பிரச்னை ஏற்படும். ஆகவே, மருத்துவ ஆலோசனை மூலம் என்ன பிரச்னை என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு மருத்துவத் தீர்வு காண்பதுதான் சிறந்தது. சோடா குடிப்பதால் எவ்விதப் பயனும் ஏற்படப்போவதில்லை என்பதை விட வாயுத்தொந்தரவை ஏற்படுத்தும் என்பதே உண்மை!”