25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
doctor
மருத்துவ குறிப்பு

நீர்க்கட்டிகளைத் தடுக்க உணவு மற்றும் வாழ்க்கை முறை

பி.சி.ஓ.எஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி சார்ந்த செய்திகளும், தேடல்களும் இன்று இணையத்தில் அதிகம். அதைப்பற்றிய மருத்துவ முறைகளும் வைரலாக இணையத்தில் உலா வருவது வாடிக்கை. சினைப்பை நீர்க்கட்டி இவ்வளவு மிகப்பெரிய பேசும் பொருளாகியுள்ளதற்கு காரணம் என்னவெனில், பெண்களின் மாதவிடாய் சார்ந்த இயல்பான ஹார்மோன் சுழற்சியைக் கலைத்து மாற்றி அமைப்பது தான்.

எதையாவது செய்து இந்த கட்டிகளை கரைத்து விட வேண்டும், பூப்பு சுழற்சியை சீராக்கி விட வேண்டும், என்ற எண்ணம் இளம் தலைமுறை பெண்களை விட, அவர்களை பெற்ற பெற்றோர்களுக்குத் தான் அதிகம். ஏனெனில் திருமணத்திற்கு பின் கருத்தரிப்புக்கு ஏதேனும் பிரச்சினை உண்டாகிவிடுமோ? என்ற பயத்திலும், சமூகத்தில் தம் மகளுக்கு களங்கம் ஏற்பட்டுவிடுமோ? என்ற கலக்கத்திலும்,, பல பெற்றோர்கள் கவலையில் ஆழ்ந்திருப்பது வருத்தம் தரும் நிகழ்வு தான்.

இதையும் படியுங்கள்: பாட்டில் இருக்கும் சங்கதி-3: மெல்லிசை மன்னர்களின் கூடலும் ஊடலும்
சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினை இன்றைய மகளிருக்கு மிகப்பெரும் சவால். ஏனெனில் திருமணமான பெண்கள் ஒற்றை குழந்தையை பெற்றுக்கொள்வதில் உள்ள மிகப்பெரிய சிரமமே இதற்கு உதாரணம். இத்தகைய சினைப்பை நீர்க்கட்டியை கரைக்கும், நோய்க்கு காரணமாகும் கப வாதத்தை சிதைக்கும், பல்வேறு மருத்துவ முறைகளும், மூலிகைகளும் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டு உள்ளது.. இருப்பினும், ‘வரும் முன் காப்பது’ என்பது பழமொழி மட்டுமல்ல, நம் வாழ்க்கை முறையும் தான்.. அந்த வகையில் சினைப்பை நீர்க்கட்டி, கருப்பை சார்ந்த கட்டிகள் வராமல் தடுக்கும் வண்ணம் சித்தமருத்துவம் கூறும் உணவு முறையை பின்பற்றுதல் நல்லது.

இதையும் படியுங்கள்: கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்…
இன்றைய நவீன யுக பெண்கள், சினைப்பை நீர்க்கட்டிக்கான உணவு முறைகளையும், வாழ்வியல் முறைகளையும், திருமூலர் அருளிய யோகாசன பயிற்சி முறைகளையும் அறிந்து கொள்வது அவசியம். அதை நடைமுறைப்படுத்தினாலே கடுகளவு கட்டியையும் வரவொட்டாமல் தடுக்க முடியும். தவறினால் சினைப்பை கட்டிகள் ஏற்படுவதோடு, அதன் பின் விளைவுகளான சர்க்கரை நோய், உடல் பருமன், உலகமே கண்டு அஞ்சும் வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறிகள், மாரடைப்பு போன்ற மிகப்பெரிய தொற்றா நோய்களை எதிர்கொள்ள நேரிடும்.

சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மகளிருக்கான சிறப்பு உணவு முறையை பின்பற்றி வந்தால் பொதுவாகவே மாதவிடாய் கோளாறுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். அதன்படி மாதவிடாய் முடிந்த முதல் நாள் முதல் 5 நாட்கள் வரை எள்ளு, பனைவெல்லம் சேர்ந்த உருண்டையை வழங்கி வரலாம். முதல் 15 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் எனும் பெண் ஹார்மோன் செயல்பாடு அதிகம் என்பதால் எள்ளில் உள்ள இயற்கையான ஈஸ்ட்ரோஜென் சத்து கருப்பைக்கு பக்கபலமாக இருக்கும். அடுத்து 6 முதல் 14 நாட்கள் வரை கருப்பு உளுந்துடன், பச்சரிசிமாவு, பனைவெல்லம் சேர்த்து களியாக்கி எடுத்துக்கொள்ள இடுப்பு வலிமை பெறும். அத்துடன் புரதசத்து அதிகம் உள்ளதால் சினைமுட்டை வளர்ச்சிக்கும் கருப்பு உளுந்து பெரிதும் உதவும்.

இதையும் படியுங்கள்: ஆறுமனமே ஆறு- உள்நாட்டு அகதிகள்
கடைசி 15 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை வெந்தயத்தை வறுத்து பொடித்து சம்பா அரிசியுடன் கஞ்சியாக்கி கொடுக்க ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் வராமல் தடுக்கும். இவற்றையெல்லாம் முறையாக பின்பற்றி வந்ததால் நம் முன்னோர்கள் அடுக்கடுக்காய் பிள்ளைப்பேறு பெற்றும் ஆரோக்கியமாய் வாழ்ந்துள்ளனர். அத்தகைய பாட்டி வைத்திய முறைகளையும், உணவு முறைகளையும் மறந்த இக்கால பெண்கள் செயற்கை கருத்தரிப்பு மையங்களை நோக்கி படையெடுப்பது பரிதாபமான நிலை தான்.

பிசிஓஎஸ் நிலையால் அதிகரித்த உடல் எடையை குறைக்க சீரகத்தை வறுத்து பொடித்து தினசரி 3 கிராம் அளவு எடுத்துக்கொண்டால் நல்ல பலன் தரும். தயிருடன் சீரகப் பொடி இரண்டு வேளை 3 மாதங்களுக்கு எடுத்துக்கொண்டால் அதிகரித்த கொலஸ்டீரால், டிரைகிளிசரைடு, மற்றும் எல்டிஎல் எனப்படும் கெட்டக்கொழுப்பு இவை குறைவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றது. மேலும் அதிகரித்த உடல் எடை, இடுப்பு சுற்றளவு, கொழுப்பு நிறை அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டதையும் ஆய்வுகள் கூறுவது சித்த மருத்துவத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் விதத்தில் உள்ளது.

இதையும் படியுங்கள்: கண்ணதாசன் எழுத்துக்களில் காமராஜர்- முனைவர் கவிஞர் இரவிபாரதி
ஏற்கனவே குறிப்பிட்டதை போல சினைப்பை நீர்கட்டிக்கு இன்சுலின் தடை முக்கிய காரணமாக உள்ளதை நவீன மருத்துவம் சுட்டிக்காட்டுகிறது. இதுவே பின்னாளில் அவர்களுக்கு சர்க்கரை வியாதி போன்ற வளர்ச்சிதை மாற்ற நோய்கள் வருவதற்கும் ஆதாரம். ஆகவே இன்சுலின் தடை எனும் நோய்க்காரணத்தை நீக்கக்கூடிய எளிய வீட்டு வைத்திய முறைகளுள் ஒன்று, ‘லவங்கப்பட்டை தேநீர்’. லவங்கப்பட்டையில் உள்ள ‘சின்னமால்டிஹைடு’ எனும் வேதிப்பொருள் உடலில் இன்சுலின் ஏற்பி செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும் மற்றும் அவற்றை தடுக்கும் நொதியினைத் தடுத்து தடையை நீக்குவதாகவும் உள்ளன. லவங்கப்பட்டையுடன், சீரகம், அதிமதுரம், அஸ்வகந்தா இவற்றை சேர்த்து தேநீர் போல பருகினால் நிச்சயம் சினைப்பை நீர்க்கட்டி நோய்நிலையின் தாக்கத்தை குறைக்க முடியும்.

சீன மருத்துவத்தில் புகழ் பெற்ற ஜின்செங் மூலிகைக்கு இணையான, ‘இந்தியன் ஜின்செங்’ என்ற சிறப்பு பெயர் பெற்ற சித்த மருத்துவ மூலிகையான அமுக்கரா கிழங்கு பல நூறு ஆண்டுகளாக மகளிரின் மலட்டு நோயினை போக்க பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சினைப்பை நீர்கட்டி நோயில் மன அழுத்தமும் ஒரு மிகப்பெரிய பங்களிப்பை உடையது. நவீன வாழ்வியலில் ஓடிக்கொண்டிருக்கும் மகளிருக்கு, அதிகமாகும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது ஹார்மோன் அச்சும் கூட தான். அத்தகைய மன அழுத்தத்தை போக்கி ஹார்மோன் அச்சினை சீராக்கி சினைப்பை நீர்கட்டியின் நோய்குறிகளை போக்கும் தன்மை இந்த அமுக்கரா கிழங்கிற்கு உண்டு. ஆகையால் இது மிகச்சிறந்த அடாப்டோஜென் வகை மூலிகையாகும். ‘அஸ்வகந்தா’ என்று அறியப்படும் இதனைப்பற்றி உலக நாடுகள் பலவற்றிலும் அதிகப்படியான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் நல்ல பலன் தரும் எளிய மற்றொரு மூலிகை ‘அதிமதுரம்’. அதிக இனிப்பு சுவையுடைய அதிமதுரத்தை பல வெளிநாடுகளில் சாக்லேட் போன்றவற்றில் இயற்கையான இனிப்பு சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது. இது சினைப்பை நீர்க்கட்டியால் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தை ஒழுங்குமுறைப்படுத்தும் தன்மை இதற்குண்டு. ஆனால், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை அளவோடு பயன்படுத்துவது நல்லது.

மேலும் பிசிஒஎஸ் உள்ளவர்களின் ரத்த கொழுப்பின் அளவினை சீராக்க ‘சிறுகுறிஞ்சான்’ என்ற சித்த மருத்துவ மூலிகை பயனளிக்கும். மேலும் இது, அவர்களின் கிளைசெமிக் குறியீட்டின் அளவை கட்டுப்படுத்தவும் உதவும். இந்த மூலிகை பல ஆண்டுகளாக சித்த மருத்துவத்தில் சர்க்கரை வியாதிக்காக பயன்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனையும் தேநீராக்கி பருகுவது நல்ல பலனளிக்கும்.

தினசரி ‘கிரீன் டீ’ எடுத்துக்கொள்ளும் பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு உடல் எடை குறைப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாக மற்றொரு ஆய்வு கூறுகின்றது. மேலும் பிசிஓஎஸ் உள்ள எலிகளிடம் நடத்திய சோதனையில், ரத்தத்தில் உள்ள டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ராடியோல், லெப்டின், இன்சுலின், சர்க்கரை, கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு ஆகியவற்றின் அளவைக் குறைப்பதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கிரீன் டீ-யில் உள்ள இஜிசிஜி எனும் ‘எபிகேலோகட்டிசின் கேல்லேட்’ என்ற வேதிப்பொருள் அவர்களுக்கு உடல் எடையை குறைப்பதிலும், கொழுப்பினை குறைப்பதிலும் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளதால் சினைப்பை நீர்க்கட்டி உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தி பெரும்பயன் அடையலாம்.

சினைப்பை நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு உணவும், மருந்தும் எவ்வளவு அவசியமோ, அதேஅளவு வாழ்வியல் நெறிமுறைகளும் மிக அவசியம். அதிகாலை எழுதலும், இரவில் சீக்கிரமே படுக்கைக்கு செல்லுதலும் நம் பாரம்பரிய வாழ்வியல் முறை. செல்போன்கள் பெருகி, உலகம் முழுவதையும் இணையத்தின் வாயிலாக நொடிப்பொழுதில் இணைப்பதால் இரவில் உறங்குவதற்கு கூட மனமில்லாமல் பலர் அதனையே நாடுவது ஆரோக்கியத்தை பாதிக்கும். இந்த நவீன வாழ்க்கை முறையே. பின்னாளில் வாடிக்கையாகி விடுகிறது. இரவில் தூக்கமில்லாமல், பகலில் தூங்குவதால் ‘வாத நோய்கள்’ அனைத்தும் வந்து சேரும் என்கிறது சித்த மருத்துவ நூலான ‘பதார்த்த குண சிந்தாமணி’.

வாழ்வியல் முறையில் அவசியம் பின்பற்ற வேண்டியது திருமூலர் நமக்கு அருளிய யோகாசன பயிற்சி முறைத்தான். பிராணாயாமம் எனும் மூச்சு பயிற்சி, அல்லது கபாலபதி பிராணாயாமம் இவற்றுடன் புஜங்காசனம், பத்த கோணாசனம், ஜானு சிரசாசனம், உஷ்ட்ராசனம்,சக்கி சலநாசனம்,தியானப்பயிற்சி இவற்றை முறையாக பழகி வந்தால் சினைப்பை நீர்க்கட்டி சார்ந்த குறிகுணங்கள் குறையக்கூடும். அதுமட்டுமின்றி இந்த பயிற்சிகளை செய்து வந்தால் சினைப்பை நீர்க்கட்டி வரவிடாமல் தடுக்கவும் முடியும் என்கிறது சில ஆய்வு முடிவுகள். மேலும் பிராணாயாமம் பழகி வருவது நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்கவும் வல்லது.

உணவு முறையை பொறுத்தமட்டில் சரியான சரிவிகித உணவு முறை இல்லாததே, சினைப்பை நீர்க்கட்டி உள்ளவர்களுக்கு உண்டாகும் பல்வேறு பின் விளைவுகளுக்கும் காரணமாக உள்ளது. அதிக சர்க்கரை சத்துள்ள உணவை உண்பது, கொழுப்புள்ள உணவை அதிகம் சேர்ப்பது, நார்சத்து பொருட்களை உணவில் தவிர்ப்பது, மேலும் அத்தியாவசியமான தாது உப்புக்களான கால்சியம், மெக்னீசியம், ஜிங்க் சத்து இவை பற்றாக்குறையான உணவை உட்கொள்வதும், வைட்டமின்கள் குறைந்த உணவை உட்கொள்வதும் காரணமென்கிறது நவீன அறிவியல். மொத்தத்தில் பெண்கள் சத்தான சரிவிகித உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.

நமது பாரம்பரிய உணவில் அனைத்து சத்துக்களும், தாது உப்புக்களும், பெரும்பாலான வைட்டமின்களும் இயற்கையாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. அவை ஆரோக்கியமானது மட்டுமின்றி எளிதாகக் கிடைக்கவும் கூடியது.

அத்தகைய பாரம்பரிய உணவு வகைகளை நாம் மறந்த நாள் முதலே, நம் மூதாதையர்கள் கண்டிராத நோய்கள் பலவும் வாழ்வியல் மாற்ற நோய்களாகி, நம்மை வதைக்க துவங்கிவிட்டன. வாழ்வியல் மாற்றம், ஆடம்பரத்தை நம் கண்முன்னே காட்டி, ஆரோக்கியத்தை நம்மிடமிருந்து மறைக்கின்றன என்பது தான் உண்மை.

Source: maalaimalar

Related posts

கருப்பை பிரச்சனையை போக்கும் டயட்

nathan

உங்களுக்கு தெரியுமா தலைவலியை குணமாக்கும் இயற்கை வழிமுறைகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! தாங்கமுடியாத தலைவலியை போக்க வேண்டுமா?

nathan

ஓர் இயற்கை மருந்து!.. எல்லா விதமான நோய்களும் விரட்டி விடலாம்.. நம் முன்னோர்கள் கண்டுபிடித்து..

nathan

உங்களுக்கு தெரியுமா ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாச பிரச்சனையை போக்கும் மீன் எண்ணெய்

nathan

பிரசவத்தின் பின் ஏற்படக்கூடிய வரித்தழும்புகளை போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

விலங்கொன்றினால் கடியுண்டால் செய்யவேண்டிய முதலுதவி. விலங்கு விசர் நோயும் அதன் கட்டுப்பாடும்

nathan

உங்களுக்கு தெரியுமா மாதவிடாய் தாமதம் ஆவதற்கு இவை தான் காரணம்!

nathan

பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 5 உண்மைகள்!!!

nathan