நமது உணவுமுறை தான் ஏறத்தாழ 70% உடல் எடை அதிகரிக்க காரணமாக இருக்கிறது. இது போக உட்கார்ந்தே வேலை செய்யும் முறை மற்றும் உடற்பயிற்சி இல்லாதது உடல் எடை அதிகரிக்க ஏனைய காரணங்கள் ஆகும். உணவு பழக்கத்தை சரியாக பின்பற்றி வந்தாலே உடல் எடையை கட்டுக்குள் வைத்துவிடலாம்.
பெரும்பாலும் நாம் ருசியை எதிர்பார்த்து கலோரிகள் மற்றும் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும் உணவுகளை உட்கொள்வதால் தான் உடல் பருமன் வேகமாக அதிகரிக்கிறது. அதிலும் சிலர் வேலை செய்யும் போது சிப்ஸ் கொறித்துக் கொண்டு, சோடா பானம் குடித்துக் கொண்டே பணிபுரிவது உடல் எடையை அசுர வேகத்தில் அதிகரிக்கும்.
சில இந்திய மாற்று உணவுகள் உங்கள் தொப்பையை குறைக்க வெகுவாக உதவி, மேலும் உடற்சக்தியையும் ஊக்குவிக்கிறது. அவற்றை பற்றி இனிக் காணலாம்…
பாட்டில் ஜூஸ் – காய்கறி சாறு
பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கும் ஜூஸ்களில் சேர்க்கப்படும் ஃபிளேவர்கள் மற்றும் செயற்கை சர்க்கரை உடலில் கலோரிகள் அதிகரிக்க செய்து உடல் எடை பெருக காரணியாக இருக்கிறது. இதற்கு மாற்றாக வீட்டிலேயே காய்கறிகளை கழுவி நறுக்கி நீரில் வேக வைத்து சூப் அல்லது ஜூஸ் போன்று பருகுவது உடலுக்கு வலு சேர்க்கும் மற்றும் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்.
மைதா – கோதுமை பிரெட்
பெரும்பாலும் நாம் மைதா பிரெட்டை தான் உண்கிறோம். இதில் கலோரிகள் அதிகம் மற்றும் செரிமானம் ஆவதும் கடினம். இதற்கு மாற்றாக நீங்கள் கோதுமை பிரெட்டை உண்ணலாம்.
வறுத்த உணவுகள் – வேக வைத்த காய்கறி
மாலை வேளைகளில் வறுத்த உணவுகளை உண்பதற்கு மாற்றாக வேக வைத்த காய்கறிகளை உண்ணுங்கள். இது கொழுப்பை குறைக்கவும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவும் உதவுகிறது.
வடா பாவ் – இட்லி சாம்பார்
வடா பாவ்வில் கொழுப்பு இருக்கிறது,மேலும் மைதா செரிமானம் ஆக கடினமான உணவு. இட்லி சாம்பார் சிறந்த காலை உணவு மற்றும் கொழுப்பு இல்லை. எனவே, இதை தேர்வு செய்யுங்கள். காலை வேளையில் எண்ணெய் குறைவான உணவை உட்கொள்வதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். இது உடல் எடை அதைகமாக முக்கிய காரணமாக திகழ்கிறது.
பால் சாக்லேட் – டார்க் சாக்லேட்
பால் கலப்பு உள்ள சாக்லேட்களுக்கு மாற்றாக டார்க் சாக்லேட்கள் உட்கொள்ளுங்கள். ஏனெனில், பால் காலப்புள்ள சாக்லேட்களை விட டார்க் சாக்லேட்களில் சர்க்கரை அளவு 50% குறைவு. இது உடல் எடையை குறைக்க உதவும்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் – சோளம்
வறுத்த அல்லது பதப்படுத்தி பாக்கெட்டுகளில் விற்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ்களில் சுவையை விட கொழுப்பு அதிகம். எனவே, இதற்கு மாற்றாக சோளம் போன்ற கொழுப்பு சத்து இல்லாத உணவை உட்கொள்ளுங்கள். இது உடற்சக்தி அதிகரிக்கவும் உதவும்.
ஐஸ் க்ரீம் – தயிர்
அனைத்து ஐஸ் க்ரீம்களிலும் செயற்கை ஃபிளேவர்கள் மற்றும் செயற்கை சர்க்கரை கலப்பு உள்ளது. இவை உடலில் வேகமாக கொழுப்பு அதிகரிக்க காரணியாக இருக்கின்றன.இதற்கு மாற்றாக நீங்கள் தயிரை உட்கொள்ளலாம். இதனால் உடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களும் கிடைக்கிறது.
சோடா பானம் – எலுமிச்சை சாறு
நாம் மேற்கூறியவாறு சோடா பானங்களிலும் கூட செயற்கை சர்க்கரை அளவு மிகவும் அதிகம். மேலும் நாளப்பட இது நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணியாக இருக்கிறது. எனவே, இதற்கு மாற்றாக நீங்கள் எலுமிச்சை சாறு பருகலாம்
பழரசம் – பழம்
பழங்களை ஜூஸ் போன்று உட்கொள்ளாமல், அப்படியே கடித்து உண்ணுங்கள். ஜூஸ் போன்று பருகுவது நேரடியாக உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்க காரணியாக இருக்கிறது. கடித்து உண்ணும் போது மெல்ல மெல்ல செரிமானம் ஆகி உடலில் ஊட்டச்சத்துக்கள் நிலைக்க செய்கிறது.
வறுத்த இறைச்சி – வேக வைத்த இறைச்சி
எண்ணெயில் வறுத்த இறைச்சி உணவுகளை உட்கொள்வதற்கு மாற்றாக குழம்பில் வேக வைத்து உண்ணுங்கள். வறுத்து உண்பதால் எந்த சத்தும் கிடையாது, மாறாக கொழுப்பு தான் உடலில் அதிகரிக்கும்.
பிஸ்கட் – கோதுமை சப்பாத்தி
பெரும்பாலும் நாம் இடைவேளைகளில் உண்ணும் பிஸ்கட்டில் செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதனால் உடலில் அதிகமான கலோரிகள் சேர்கிறது. ஆனால் சப்பாத்தியில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து உடல் வலிமையை அதிகரிக்கிறது. இதில் கொழுப்பு சத்தும் கிடையாது.