தேவையான பொருட்கள்:
* சிக்கன் – 3/4 கிலோ
* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
* மெத்தி இலைகள்/வெந்தய கீரை – 1 கப்
* பச்சை மிளகாய் – 4 (கீறியது)
* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
* கறிவேப்பிலை – சிறிது
* கெட்டியான தேங்காய் பால் – 1/3 கப்
* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
ஊற வைப்பதற்கு…
* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 டீஸ்பூன்
* தயிர் – 2 டீஸ்பூன்
* உப்பு – 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* சோம்பு – 1/4 டீஸ்பூன்
* கிராம்பு – 2
* பட்டை – 1 இன்ச் துண்டு
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சிக்கனுடன் சேர்த்து பிரட்டி ஃப்ரிட்ஜில் குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, பின் வெந்தய கீரையையும் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, நிறம் மாறும் வரை நன்கு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் ஒரு கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் 7-8 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், தேங்காய் பாலை ஊற்றி ஒரு கொதி விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கி, மேலே சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறினால், மெத்தி சிக்கன் குழம்பு தயார்.
குறிப்பு:
* நல்ல ப்ளேவர் கிடைக்க நற்பதமான வெந்தய கீரையைப் பயன்படுத்துங்கள். உலர்ந்த வெந்தய கீரையைப் பயன்படுத்த வேண்டாம். அது சுவை மற்றும ப்ளேவரை முற்றிலும் மாற்றிவிடும்.
* சிக்கனை இரவு தூங்கும் போதே மசாலாக்களை சேர்த்து பிரட்டி ஊற வைத்தால், இன்னும் அற்புதமாக இருக்கும்.
* இந்த குழம்பில் தக்காளி சேர்க்கவில்லை. அதற்கு மாறாகத் தான் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கப்பட்டுள்ளது.
* தேங்காய் பால் சேர்த்த பின் நீண்ட நேரம் குழம்பை கொதிக்க வைக்க வேண்டாம். மேலும் எலுமிச்சை சாற்றினை குழம்பை அடுப்பில் இருந்து இறக்கிய பின்பு தான் சேர்க்க வேண்டும்.
* முக்கியமாக குழம்பை தயாரித்த பின், 2 மணிநேரம் கழித்து பரிமாறினால், மெத்தி சிக்கன் குழம்பு இன்னும் அற்புதமாக இருக்கும்.