உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால் பணியாரம் செய்து கொடுங்கள். பணியாரத்தில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று உளுந்து இனிப்பு பணியாரம். இந்த பணியாரம் உடம்புக்கு ரொம்ப நல்லது. பொதுவாக உளுத்தம் பருப்பில் புரோட்டீன், கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகம் உள்ளது. இது தவிர, இதில் இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற பல முக்கிய சத்துக்களும் உள்ளன. எனவே உணவில் உளுத்தம் பருப்பை சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக பெண்கள் உளுத்தம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
Ulundu Sweet Paniyaram Recipe In Tamil
சரி, உங்களுக்கு உளுந்து இனிப்பு பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உளுந்து இனிப்பு பணியாரத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் மாவு – 1/2 கப்
* அரிசி மாவு – 1 கப்
* பொடித்த வெல்லம் – 1 கப்
* ஏலக்காய் பொடி – 1 டீபூன்
* தண்ணீர் – தேவையான அளவு
* பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
* நெய் – சுடுவதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் உளுத்தம் மாவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின்பு பொடித்த வெல்லத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். (இல்லாவிட்டால் கெட்டி வெல்லத்தை நீரில் போட்டு கரைத்து வடிகட்டி, பின் அந்த வெல்ல நீரை சேர்த்துக் கொள்ளலாம்.)
* பிறகு அதில் ஏலக்காய் பொடி மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து, நீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றி, முன்னும் பின்னும் நன்கு வேக வைத்து எடுத்தால், சுவையான உளுந்து இனிப்பு பணியாரம் தயார்.