தண்ணீர் எப்போதுமே நல்லதல்ல. அதற்காக தண்ணீர் குடிப்பது மோசமான விஷயமும் அல்ல. சொல்லப்போனால், உடலின் உட்புற மற்றும் வெளிப்புற ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் முக்கியமாகும். ஏனெனில் போதுமான அளவு நீரைக் குடிப்பதால், உடல் நீரேற்றத்துடன் இருந்து, செரிமானம் போன்ற உடல் செயல்பாடுகள் எவ்வித இடையூறும் இல்லாமல் சிறப்பாக நடைபெறும்.
ஆனால் அளவுக்கு அதிகமாக தண்ணீரைக் குடித்தால், உடலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே அதிகளவு நீரைக் குடிப்பதைத் தவிர்க்க முயல வேண்டும். அதிலும் ஒருசில சமயங்களில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். கீழே ஒருவர் எந்த மாதிரியான நேரங்களில் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து பின்பற்றி உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
ஏற்கனவே அதிக நீர் குடித்திருக்கும் போது…
ஒருவர் ஏற்கனவே அதிகளவு நீரைக் குடித்திருந்து, மேலும் நீரைக் குடித்தால், அது உடலில் உள்ள உப்பின் சமநிலையில் இடையூறை ஏற்படுத்தும். இதனால் சோடியம் குறைபாடு உண்டாகி, தலைவலி, குமட்டல் மற்றும் வலிப்பு போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.
தெளிவான சிறுநீர்
நீங்கள் ஏற்கனவே போதுமான நீரைக் குடித்துள்ளீர்கள் என்பதை எவ்வாறு அறியலாம் தெரியுமா? கழிவறை சென்று சிறுநீர் கழியுங்கள். சிறுநீரின் நிறத்தை வைத்தே நீங்கள் அதிகமான நீரை குடித்துள்ளீர்களா அல்லது குறைவாகத் தான் குடித்திருக்கிறீர்களா என்பதை அறியலாம். சிறுநீரின் நிறம் வெளிரிய மஞ்சள் நிறத்தி உள்ளதா? அப்படியானால் சரியான அளவில் நீரைக் குடித்துள்ளீர்கள் என்று அர்த்தம். ஒருவேளை சிறுநீரின் நிறம் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அதிக நீரைக் குடிக்க வேண்டும் என்று அர்த்தம். சிறுநீர் தெளிவாக இருந்தால், தண்ணீர் குடிப்பதை நிறுத்தவும் என்று அர்த்தம்.
வயிறு நிறைய உணவு உண்ட பின்..
நீங்கள் வயிறு நிறைய உணவு சாப்பிட்டுள்ளீர்களா? அப்படியானால் உடனே தண்ணீர் குடிக்காமல், சிறிது நேரம் கழித்து நீரைக் குடியுங்கள். உணவு உண்ட உடனே நீரைக் குடித்தால், வயிறு நீரால் நிரம்பி, வயிறு உப்புசம் அடையும். எனவே செரிமானம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், உணவு உண்ட உடனேயே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.
தீவிரமான உடற்பயிற்சிக்கு பின்…
அதிகமாக வியர்க்கும் போது, உடலில் இருந்து சோடியம் மற்றும் பொட்டாசியம் இழக்கப்படுகிறது. இந்த இரண்டுமே உடல் புத்துணர்ச்சிக்கு மிகவும் அவசியமான சத்துக்களாகும். இச்சத்துக்கள் சாதாரண நீரில் இருக்காது. ஆனால் இந்த சத்துக்கள் இளநீரில் உள்ளது. எனவே தீவிரமான உடற்பயிற்சிக்குப் பின் வெறும் நீரைக் குடிப்பதற்கு பதிலாக, இளநீரைக் குடியுங்கள்.
தூங்குவதற்கு முன்…
இரவு தூங்குவதற்கு முன் தண்ணீர் ஏன் குடிக்கக்கூடாது என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, இரவு தூங்கும் முன் நீரைக் குடித்தால், அது இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ வைத்து, தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். மற்றொன்று பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் சிறுநீரகங்கள் மெதுவாக வேலை செய்யும். அதனால் தூங்கி எழும் போது முகம் வீங்கி காணப்படுகிறது. இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் தண்ணீர் குடிப்பது தான்.
காரமான உணவுகளை உண்ட பின்…
மிளகாய் உள்ள காரமான உணவுகளை உண்ட பின் நீரைக் குடிக்கக்கூடாது. மிளகாயில் காரம் மற்றும் நெஞ்செரிச்சலை உண்டாக்கும் கேப்சைசின் என்னும் மூலக்கூறு உள்ளது. இந்த கேப்சைசின் பாலில் மட்டும் தான் கரையும். எனவே கார உணவுகளால் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, பாலைக் குடியுங்கள். தண்ணீரைக் குடித்தால், அந்த காரம் மேலும் பரவுவதோடு, நிலைமை மோசமாகும்.
செயற்கை சுவையூட்டிகள் கலந்திருக்கும் போது…
எடை இழக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு, இந்த குறிப்பு அறிவுறுத்தப்படுகிறது. செயற்கை சுவையூட்டிகள் உள்ள பானங்கள் பசியுணர்வை அதிகரிப்பதுடன், உடல் பருமனுக்கும் வழிவகுக்கும். எனவே எடை இழக்க நினைப்பவர்கள், செயற்கை சுவையூட்டிகள் கலந்த பானங்களுக்கு பதிலாக, எலுமிச்சை சாறு கலந்த நீரைக் குடிக்கலாம்.