ஒவ்வொரு நாளும் நம் உடலில் டாக்ஸின்கள் உணவுகளின் மூலமும் இதர நம் செயல்களின் மூலமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அப்படி உடலில் சேரும் நச்சுக்களின் அளவு அதிகரித்துவிட்டால், அதன் காரணமாக மிகுந்த களைப்பு, உடல் பருமன் அல்லது உடல் வலி, தலை வலி, மலச்சிக்கல் போன்றவற்றை சந்திக்க நேரிடும். நீங்கள் இப்பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேர்ந்தால், அதற்கு காரணம் உங்களின் உடலில் அழுக்குகள் அல்லது டாக்ஸின்கள் ஏராளமாக உள்ளது என்று அர்த்தம்.
சரி, உடலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை எப்படி வெளியேற்றுவது என்று கேட்கிறீர்களா? உடலின் செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தும் டாக்ஸின்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்து வந்தால், ஏழே நாட்களில் உடலை முழுமையாக சுத்தப்படுத்தலாம்.
சரி, இப்போது உடலைச் சுத்தப்படுத்தும் அந்த செயல்கள் என்னவென்று பார்ப்போமா!!!
எலுமிச்சை ஜூஸால்
நாளைத் தொடங்குங்கள் காலையில் எழுந்ததும் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையை பிழிந்து, தேன் சேர்த்து கலந்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.
உடற்பயிற்சி
தினமும் குறைந்தது 1 மணிநேரமாவது உடற்பயிற்சியை செய்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உடலின் இரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு, வியர்வையின் வழியே டாக்ஸின்கள் வெளியேற்றப்படும்.
பச்சை உணவுகள்
உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடும் போது, பச்சை உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக இந்நாட்களில் சாலட், முளைக்கட்டிய பயிர்கள், பழங்கள், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் விதைகளை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் பச்சை உணவுகளில் தான் நொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக இருக்கும்.
தண்ணீர் குடிக்கவும்
உடல் சுத்தமாக இருக்க வேண்டுமெனில் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். அதற்கு ஒரு நாளில் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரையாவது குடிக்க வேண்டும். இதனால் இரத்தத்தை சுத்திகரிக்கும் சிறுநீரகங்களில் செயல்பாடு ஊக்கப்படுத்தப்பட்டு, இரத்தத்தில் இருந்து டாக்ஸின்கள் பிரித்தெடுக்கப்பட்டு சிறுநீரின் வெளியேற்றப்படும்.
நன்கு தேய்த்து குளிக்கவும்
குளிக்கும் போது பிரஷ் பயன்படுத்தி, நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி பிரஷ் கொண்டு தேய்த்து குளிக்கும் போது, அழுக்குகள் வெளியேற்றப்படுவதோடு, உடலில் இரத்த ஓட்டம் சீராக்கப்படும்.
உணவை நன்கு மென்று விழுங்கவும்
உணவை உண்ணும் போது நன்கு மென்று விழுங்க வேண்டும். இதனால் உண்ணும் உணவு எளிதில் செரிமானமாக்கப்படும். உணவு எளிதில் செரிமானமானால், நீங்கள் நல்ல மனநிலையை உணர்வீர்கள்.
மனதை சுத்தப்படுத்தவும்
உடலை மட்டும் சுத்தம் செய்தால் போதாது, தினமும் மனதையும் சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு தினமும் 15 நிமிடம் தியானத்தில் ஈடுபட வேண்டும். இதனால் மனம் ஒருமுகப்படுத்தப்பட்டு, மனம் தெளிவாகும்.