முகப்பரு

பருக்களை நீக்கும் அழகு சாதனங்கள் -தெரிந்துகொள்வோமா?

‘காதலிக்கும் பெண்ணின் வண்ணக் கன்னம் ரெண்டிலேமின்னும் பருவும்கூட பவளம் தானே…’ என்பது பாடலாக ரசிக்க வேண்டுமானால் அழகாக இருக்கும். நிஜத்தில் பருத்தொல்லை என்பது பெருந்தொல்லை!

முதல் நரைமுடி எட்டிப் பார்க்கிற போது ஏற்படுகிற மன உளைச்சலுக்கு இணையானது முகத்தில் தோன்றுகிற முதல் பரு. பருவ வயதின் தொடக்கத்தில் வர ஆரம்பித்து சிலருக்கு சில ஆண்டுகளில் அது தானாகவே மறைந்துவிடும். சிலருக்கு தொடர்கதையாகும். பருக்களை விரட்ட ஒவ்வொருவரும் செய்கிற பிரமப் பிரயத்தனம் சொல்லி மாளாது. பருக்கள் வருவதன் பின்னணி, அவற்றை எப்படிக் கையாள வேண்டும், பரு நீக்கும் பொருட்களை உபயோகிப்பது எப்படி, கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள், பருக்கள் வராமல் தவிர்க்கும் முறைகள் என எல்லாவற்றையும் விளக்கமாகப் பேசுகிறார் அழகுக்கலை நிபுணர் உஷா.

பருக்கள் ஏன் வருகின்றன?

‘நமது சருமத்தின் இரண்டாவது அடுக்கில் செபேஷியஸ் கிளான்ட்ஸ் எனப்படுகிற எண்ணெய் சுரப்பிகள் உள்ளன. இவை ஆண்ட்ரோஜென் ஹார்மோனின் தூண்டுதலால் சீபம் என்கிற எண்ணெயைச் சுரக்கும். இது ரோமக்கால்களின் வழியே சருமத்தின் மேல்பரப்புக்கு வந்து, சருமத்தை எண்ணெய் பசையுடன் வைத்திருக்கிறது. சுற்றுச்சூழல் மாசில் உள்ள அழுக்கும், தூசுகளும் இந்த எண்ணெயுடன் சேர்ந்து சருமத் துவாரங்களை அடைத்துக் கொண்டு சீபம் வெளியே வரமுடியாமல் உள்ளேயே தங்கும். இப்படிச் சேர்கிற சீபம்தான் பருக்களாக உருவாகிறது.

சருமத்தை சரியாக சுத்தப்படுத்தாததே எண்ணெய் பசை சருமத்துக்கும், அதனால் உண்டாகிற பிரச்னைகளுக்கும் காரணம். சரியாக சுத்தப்படுத்தாத பட்சத்தில், அழுக்குகள் சருமத் துவாரங்களில் சேர ஆரம்பிக்கும். அதனுடன் பாக்டீரியாவும் சேர்ந்து, பருக்களாக உருமாறும்.

ஆண் ஹார்மோனான ஆண்ட்ரோஜென் பருவ வயதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் செபேஷியஸ் சுரப்பிகளைத் தூண்டி, சீபம் சுரப்பை அதிகரிக்கும். அதனால்தான் பருவ வயதில் பருப் பிரச்னையும் ஆரம்பிக்கிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களாலும் சிலருக்கு பரு வரலாம்.

பரம்பரையாகவும் சிலருக்கு பருப் பிரச்னை தொடரலாம். பருக்களை அதிகப்படுத்துகிற விஷயங்கள்… மாதவிலக்கு வருவதற்கு 2 முதல் 7 நாட்கள் வரை பெண்ணின் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்கள்… அதிக எண்ணெய் பசை உள்ள அழகு சாதனங்களின் உபயோகம். சமையலறை போன்ற பிசுபிசுப்பான சூழலில் அதிக நேரம் உழல்வது. சுற்றுப்புற மாசு. பருக்களை அடிக்கடி தொடுவது, கிள்ளுவது, பிதுக்குவது. மன அழுத்தம்

உணவுக்கும் பருவுக்கும் தொடர்புண்டா?

சாக்லெட், கேக் போன்றவற்றை சாப்பிடுவதால் பரு வரும் என்பது காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. அவை முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், பழங்கள், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றுக்கு இயல்பிலேயே சருமத்தை அழகாகவும் பளிச்சென்றும் வைக்கிற தன்மை உண்டு என்பதால் பரு இருப்பவர்களுக்கும் அவை பரிந்துரைக்கப்படுகின்றன.

மன அழுத்தமும் பருக்களை ஏற்படுத்துமா?

இதற்கும் நேரடித் தொடர்பில்லை என்றாலும், பருக்கள் இருப்பவர்களுக்கு மன அழுத்தமும் இருந்தால் அது இன்னும் தீவிரமடையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

யாருக்கு வரும்?

11 முதல் 30 வயது வரையிலான அனேகம் பேருக்கு பருக்கள் வருவது இயல்பு. சிலருக்கு 30 வயதுக்குப் பின் பருக்கள் தாமாக மறையத் தொடங்கும். அரிதாக சிலருக்கு 40க்கு பிறகும் 50 வயதிலும்கூட பருக்கள் இருக்கும்.

பருக்களுக்கான சிகிச்சைகள்

கிளென்சர்

பருக்கள் உள்ள சருமத்துக்கென்றே பிரத்யேக கிளென்சர்கள் உள்ளன. நுரை வரக்கூடிய, நுரையை ஏற்படுத்தாத கிளென்சர்கள் கிடைக்கின்றன. நுரையற்ற கிளென்சர்கள் சருமத்தை அதிகம் வறண்டு போகச் செய்யாது. சரும மருத்துவர் அல்லது அழகுக் கலை
நிபுணரின் ஆலோசனையின் பேரில் மெடிக்கேட்டட் கிளென்சரும் உபயோகிக்கலாம். மெடிக்கேட்டட் கிளென்சர்களில் பென்ஸைல் பெராக்சைடு, சாலிசிலிக் ஆசிட் அல்லது சல்பர் இருக்கும். அது சருமத் துவாரங்களை சுத்தப்படுத்தி, பருக்கள் குறைய உதவும். ஆனால், அவை சருமத்தை மிகவும் வறண்டு போகச் செய்து விடும். எனவே நிபுணர்களின் ஆலோசனையின்றி இவற்றை உபயோகிக்க வேண்டாம்.

ஆன்ட்டிபயாடிக்ஸ்

மருத்துவர்கள் உள்ளுக்கு எடுத்துக் கொள்கிற மற்றும் பருக்களின் மேல் பூசக்கூடிய ஆன்ட்டிபயாடிக்குகளை பரிந்துரைப்பார்கள். அவை பருக்களைச் சுற்றியுள்ள பாக்டீரியாக்களை அழித்து வீக்கத்தையும் குறைக்கக்கூடியவை. சில வகை ஆன்ட்டிபயாடிக்குகள் சருமத்தை உரிந்து போகச் செய்வது, சிவந்து போக வைப்பது போன்ற பக்க விளைவுகள் தரலாம். உள்ளே எடுத்துக் கொள்கிற ஆன்ட்டிபயாடிக்குகள் தலைவலி, வயிற்று வலி, தலைசுற்றல், கேட்கும் திறன் பிரச்னை போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

இந்த ஆன்ட்டிபயாடிக்குகளை முறையான ஆலோசனையின் பேரில் சரியாகப் பயன்படுத்தாவிட்டால், ஆன்ட்டி பயாடிக் எதிர்ப்புத் தன்மை உருவாகி, பருக்களுக்குக் காரணமான பாக்டீரியாக்கள் வீரியம் கொள்ளவும், பருக்கள் மற்றும் இதர இன்ஃபெக்ஷன் அதிகரிக்கவும் கூடும்.

மேல்பூச்சுகள்

பெரும்பாலான ஆன்ட்டி அக்னே கிரீம் மற்றும் ஜெல்களில் பென்ஸாயில் பெராக்சைடு, ரெட்டினாயிடு, Azelaic அமிலம் போன்றவை இருக்கும். பென்ஸாயில் பெராக்சைடு உபயோகித்ததும் பருக்களுக்குக் காரணமான பாக்டீரியாக்களின் தாக்கத்தைக் குறைத்து, சருமத் துவாரங்கள் அடைபடுவதையும் தவிர்க்கும். ஆனால், சருமம் அதீத வறட்சி அடைவது, உரிந்து போவது, வெயில் பட்டால் ஒவ்வாமைக்கு உள்ளாவது போன்ற பிரச்னைகளும் போனஸாக கிடைக்கும்.

ரெட்டினாயிடு என்பவை வைட்டமின் ஏ உடன் தொடர்புடையவை. பருக்களை விரட்டுவதில் Adapalene மற்றும் Tretinoin என்கிற இரண்டு வகையான ரெட்டினாயிடுகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவை சீபம் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, சருமத் துவாரங்களை அடைத்துக் கொள்கிற இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் உருவாகவும் உதவக்கூடியவை. ஒருசிலருக்கு ரெட்டினாயிடு உபயோகம் சருமத்தில் லேசான எரிச்சலையும்,

கடுப்பையும் ஏற்படுத்தலாம். பென்ஸாயில் பெராக்சைடு மற்றும் ரெட்டினாயிடு அலர்ஜியை ஏற்படுத்துவதாக உணர்பவர்கள் azelaic அமிலம் கலந்த
தயாரிப்புகளை உபயோகிக்கலாம். மற்ற இரண்டையும்விட இது சற்றே மிதமானது என்றாலும் இதிலும் சரும வறட்சியும் எரிச்சலும் இருக்கவே செய்யும். பருக்களுக்கான பார்லர் சிகிச்சை, வீட்டு சிகிச்சை உள்ளிட்ட தகவல்கள் அடுத்த இதழிலும்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button