காலமாற்றத்தின் காரணமாக குழந்தைகளுக்கும் நீரிழிவு வருவது போல, இப்போது குழந்தைகளும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
குழந்தைகளை பாதிக்கும் உயர் ரத்த அழுத்தம்
எனக்கு செம டென்ஷன்’ என்ற வாசகத்தை இன்றைய குட்டிக் குழந்தைகளிடம்கூட கேட்க முடிகிறது.
20 ஆண்டுகளாக குழந்தைப் பருவ உயர் ரத்த அழுத்தம் என்ற பிரச்னை நம்மிடையே உள்ளது. வழக்கமாக உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை உண்டாக உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை மற்றும் உடற்பருமன் காரணமாக உள்ளது.
இது இன்றைய குழந்தைகளுக்கும் பொருத்தமான காரணமாகவே உள்ளது. மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவது குறைந்துவிட்டது.
செல்போனிலும், வீடியோகேமிலும் பெரும்பாலும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
நொறுக்குத் தீனிகள் மற்றும் ஆரோக்கியக் கேடான பானங்களையே குழந்தைகள் உண்டு வருகிறார்கள்.
இதனால் இன்றைய குழந்தைகளில் 3.5 சதவீதம் பேருக்கு குழந்தைப் பருவ ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
10 முதல் 11 சதவீதம் குழந்தைகளிடம் ரத்த அழுத்தம் உள்ளது. குழந்தைப் பருவத்திலேயே உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு ரத்தக்குழாய் நோய்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.
உயர் ரத்த அழுத்தம் உள்ள இளம் பருவத்தினரிடம் விரைவுபடுத்தப்பட்ட ரத்தநாள முதிர்ச்சி பிரச்னைக்கான வாய்ப்புகள் அதிகமாகவும் உள்ளன.
தொடர்ச்சியாக நிலையாகவும், கடுமையான அல்லது உயர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு ஏதாவது நோய் அவர்களை அடிக்கடி தாக்கும்.
நாள்பட்ட உடல்நலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். தீவிரமான நோய்த்தாக்குதலுக்கு ஆளாகவும் வாய்ப்புள்ளது.
இவர்களுக்கு வயதாகும் போது ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது இளம் வயதிலேயே கூட இவர்களைத் தாக்கலாம்.
குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளதா எனக் கண்டறியும் பரிசோதனைகள் மீது விழிப்புணர்வு ஓரளவு அதிகரித்துள்ளது.
இது சற்று ஆறுதலான விஷயம். இது இன்னும் அதிகரிக்கும் விதமாக 3 வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் குழந்தைகளிடமும் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என AAP/IAP பரிந்துரை செய்கிறது.
குழந்தைப் பருவத்தில் தோன்றும் ரத்த அழுத்தத்தை கவனிக்காமல் விடுவது அவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை பாதிக்கும்.