ஒவ்வொரு மனிதனுக்கும் மனவலிமை என்பது இரண்டாவது மனைவியை போல. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் மனைவி என்னும் பெண் இருப்பது போல, மனவலிமை என்னும் சக்தியும் இருக்கிறது.
தோல்வியில் இருந்து மீண்டு வர, நோயில் இருந்து குணமடைய, வெற்றியை தக்கவைத்துக்கொள்ள என மனித வாழ்வில் அனைத்திற்கும் மனவலிமை தேவைப்படுகிறது. ஏன், காத்திருக்க கூட மனவலிமை வேண்டும் என்று ஒரு அறிஞர் கூறியிருக்கிறார்.
இன்றைய அதிவேக வாழ்வியல் முறை, பலரது பொறுமையை சோதித்து, மனவலிமையை வலுவிழக்க செய்கிறது. இதன், காரணத்தால், மன சோர்வு, மன அழுத்தம், உடல்நலக் கோளாறுகள் என பல பிரச்சனைகள் எழுகின்றன.
இனி, தினசரி பழக்க வழக்கங்கள் எப்படி உங்கள் மன வலிமையை அதிகரிக்க உதவுகிறது என்று பார்க்கலாம்…
தியானம்
தியானம் செய்வது, உங்கள் மனவலிமையை வேகமாகவும், திறம்படவும் அதிகரிக்க உதவுகிறது. ஓரிரு வாரங்களிலேயே நீங்கள் நல்ல மாற்றம் காண தியானம் உதவும். தினமும் வெறும் 10 நிமிடங்கள் நீங்கள் தியானம் செய்வதே போதுமானது ஆகும்.
உணவுக் கட்டுபாடு
பெரும்பாலும், நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதை தவிர்த்து நட்ஸ், பழங்கள், வேகவைத்த காய்கறிகளை சாப்பிடுங்கள், இது உங்கள் மூளையை நன்கு புத்துணர்ச்சி அடையவும், வலுவாக்கவும் உதவும்.
நல்ல உறக்கம்
நன்கு தூங்காமல் இருப்பதனால் பாதிக்கப்படும் முதல் விஷயமாக கருதப்படுவது மனவலிமை தான். தூக்கமின்மை உங்களுக்கு மன சோர்வையும், மன அழுத்தத்தையும் தரும். இதன் காரணமாக தான் மனவலிமை குறைகிறது. முக்கியமாக வெளிச்சம் இல்லாத அறையில் நன்கு தூங்குவது அவசியம்.
உடற்பயிற்சி
தினசரி உடற்பயிற்சி செய்வது உங்கள் உடல்நிலையையும், மனநிலையையும் ஒருமுகப்படுத்த உதவும். மனதும், உடலும் ஒருமுகப்படுவதனால் மனவலிமை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
ஒரு நேரத்தில் ஒரு வேலை
பல திறமைகள் இருக்க வேண்டும் என்று தான் இன்றைய மேலாண்மை எதிர்பார்க்கிறது. ஆனால், ஒரு நேரத்தில், ஒரு வேளையில் மட்டும் ஒருமுகமாக பணியாற்றுங்கள். ஒரே நேரத்தில் பல வேளைகளில் கவனம் செலுத்துவதனால் மனவலிமையில் குறைவு ஏற்படும். மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும்.
விளையாட்டு
நேரம் கிடைக்கும் போதெல்லாம, உங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடுங்கள். இது, உங்கள் உடல் மற்றும் மனதினை இலகுவாக வைத்துக்கொள்ள உதவும். மற்றும் இது உங்கள் மனவலிமையை ஊக்குவிக்கும்.
உத்வேகம்
ஒவ்வொரு மனிதனுக்கும் உத்வேகமும், தூண்டுதலும் மிகவும் அவசியம். தூண்டுதல் இன்றி உங்களால் எந்த செயலையும் சரிவர செய்ய இயலாது. உங்கள் இலக்கை அடைய உத்வேகம் மற்றும் தூண்டுதல் அவசியமாகும். இவை இரண்டும் தான் உங்கள் மனவலிமையை குறையாமல் இருக்க வைக்கிறது.
வேலைகளை பிரித்து செய்தல்
பலர் செய்யும் பெரிய தவறு, வேலைகளை பிரித்து செய்ய தெரியாது இருப்பது. உதாரணமாக, உங்களால் ஒரு தோசையை முழுதாக அப்படியே சாப்பிட முடியாது. அப்படி முயற்சி செய்தாலும் மிக இடையூறாக இருக்கும். அதே போல தான், உங்கள் கனவு, இலக்கு, வேலை எல்லாம், சிறிது, சிறிதாக பிரித்து வேலை செய்யும் போது அந்த வேலைகளை எளிதாகவும், விரைவாகவும் செய்து வெற்றி காண முடியும்.