குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலன ஒன்று தான் என்பதை யாரும் மறுப்பின்றி ஏற்றுக் கொள்வார்கள். அதுவும் அழுது அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது என்பது மிகவும் சவாலன ஒரு விஷயம்.
எதற்காக அழுகிறார்கள் என்று காரணமே தெரியாமல் அவர்களை எப்படி சமாதனப்படுத்த வேண்டும் என்று புரியாமல் தவிக்கும் பெற்றோர்களுக்காக சில யோசனைகள்.
விவாதம் :
குழந்தை எதையாவது கேட்டு அடம்பிடித்தால் ,குழந்தையிடம் விவாதிக்காதீர்கள். தவறான விஷயம் அல்லது நடக்காத ஓர் விஷயம்,ஆபத்தான ஒரு விஷயத்திற்கு அழுது அடம்பிடித்தாலும் நீ சொல்வது தவறு, நடக்காது என்று சொல்லி உங்களின் கருத்தை நிறுவ முயற்சிக்காதீர்கள்.
பேசுங்கள் :
பேசுவது என்பது நீங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருப்பது அல்ல. வீணாக அடம்பிடிக்காதே என்று அறிவுரை வழங்குவது அல்ல.
அவர்கள் சொல்வதை கேட்கவும் வேண்டும்.அப்போதைக்கு அவர்களை சமாதனப்படுத்தும் விதமாக பேச வேண்டும். நீங்கள் சொல்கிற பதில் அப்போதைக்கு அவர்கள் நம்புவதற்கு போதுமானதாக இருந்தாலே போதும்.
ரோல் மாடல் :
ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களது பெற்றோர்கள் தான் முதல் ரோல்மாடலாக இருப்பார்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் உங்கள் குழந்தை கவனித்துக் கொண்டேயிருக்கும்.
அதனால் பெற்றோர் கவனமாக இருப்பது மிகவும் அவசியமானது.
அமைதியான சூழ்நிலை :
குழந்தைகளுக்கு ஏற்ற மனநிலையை உருவாக்கிடுங்கள். அவர்களிடம் மனம் விட்டு பேசுபவராக எப்போதும் சப்போர்ட்டிங் செய்திடும் பெற்றோர்களாக இருங்கள். தேவையில்லாமல் அவர்களை கண்காணிப்பவர்களாக விமர்சிப்பவர்களாக மட்டுமே இருக்க வேண்டாம்.
விளையாட அனுமதி :
எப்போதும் வீட்டுக்குள்ளே குழந்தைகளை அடைத்து வைக்காமல், மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாட அனுமதியுங்கள்.
வெற்றி தோல்விகளையும், பகிர்தலையும் குழந்தைக்கு ஊக்கப்படுத்துங்கள். பிறர் வைத்திருப்பது எல்லாம் தனக்கும் வேண்டும் என்று அடம்பிடிப்பதை தவிர்க்க பகிர்தல் என்பது மிகவும் தேவையானதாக இருக்கும்.
பாராட்டு :
உங்கள் குழந்தையின் செயல்களை பிறரிடம் சொல்லி பெருமைப்படுவதை விட அந்தக் குழந்தையிடமே நேரடியாக பாராட்டுங்கள்.
சின்ன சின்ன பரிசுகள் கூட கொடுக்கலாம். அடம்பிடித்து அழுவது தவறு என்பதை நாசூக்காக உணர்த்துங்கள்.
மரியாதை :
அடம்பிடித்தாலே குழந்தை தவறான விஷயத்திற்கு தான் அடம்பிடிக்கும் என்று நீங்களாகவே முடிவு செய்யாதீர்கள். அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுங்கள்.
குழந்தையின் விருப்பத்திற்கு மரியாதை கொடுங்கள்.
தவிர்ப்பது :
அடம்பிடித்து அழும் குழந்தையை அப்டித்தான் எல்லாத்துக்கும் அடம்பிடிச்சு அழுவா என்று கண்டுகொள்ளாமல் விடுவதை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள்.
இது குழந்தையின் மனநிலையையே பாதித்துவிடும். உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையை முற்றிலுமாக குழைத்துவிடும்.
திசை திருப்புதல் :
குழந்தையின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்திடுங்கள். கண்டிப்புடன் நீங்கள் சொன்னால் குழந்தை அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது, மாறாக குழந்தையாகவே கேட்டதை மறக்குமாறு அவர்களுக்கு விருப்பமுள்ள இன்னொரு விஷயத்தை நினைவுப்படுத்தி அதைப் பற்றி குழந்தையிடம் பேச ஆரம்பியுங்கள்.