கோடு வேப்புடு என்பது மிகவும் பிரபலமான ஒரு ஆந்திரா ரெசிபி. இதனை தமிழில் சிக்கன் ப்ரை என்று சொல்லலாம். இந்த கோடி வேப்புடு ரெசிபியானது நடிகை ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவுப் பொருள். இது ஆந்திரா ரெசிபி என்பதால் மிகவும் காரமாகவும், வித்தியாசமான ருசியுடனும் இருக்கும்.
இங்கு ஆந்திரா ரெசிபியான கோடி வேப்புடு என்னும் சிக்கன் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
Kodi Vepudu/Chicken Fry: Andhra Recipe
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் – 1/4 கிலோ
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பட்டை – 1
ஏலக்காய் – 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.
பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும்.
பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு 4-5 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.
அடுத்து அதில் மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் பிரட்டி இறக்கி விட வேண்டும்.
இறுதியில் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் இறக்கி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, எண்ணெயில் சிக்கன் நன்கு வேகும் வரை வதக்க வேண்டும்.
பின் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, கறிவேப்பிலை சேர்த்து, சிக்கனில் உள்ள நீர் வற்றி, சிக்கன் நன்கு வேகும் வரை வதக்கி இறக்கினால், ஆந்திரா ரெசிபியான கோடி வேப்புடு ரெடி!!!