கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சில பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கும். இந்த பிரச்சனைகள் மாறும் ஹார்மோன்களாலும், உடலில் உண்டாகும் சில வகையான மாற்றங்களாலும் உண்டாகிறது. இந்த நெஞ்செரிச்சல் பிரச்சனையை கண்டு நீங்கள் பயம் கொள்ள வேண்டாம். இது சாதாரணமான ஒரு பிரச்சனை தான்.
கர்ப்பத்தின் போது உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். உணவு ஜீரணமாவதும் கொஞ்சம் தாமதமாகும். அதனால் சிலருக்கு நெஞ்செரிச்சல் பிரச்னை ஏற்படும். அது ஏன்? அதை எப்படித் தவிர்ப்பது என்பது பற்றி எல்லாம் இந்த பகுதியில் விரிவாக காணலாம்.
உணவு பழக்கம்
கர்ப்ப கால ஹார்மோன்களின் காரணமாக உணவு ஜீரணமாவது தாமதமாக நடைபெறும். சாதாரணமானவர்களுக்கு உணவு ஜீரணிக்க 4 மணி நேரம் ஆகிறதென்றால், கர்ப்பிணிகளுக்கு 6 மணி நேரம் கூட ஆகும். அதனால் அஜீரணப் பிரச்னைகள் ஏற்படும். முறையான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடித்தால் இந்தப் பிரச்னை இல்லாமல் கடந்துவிடலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடவும்
சரியான நேரத்தில் முறையாகச் சாப்பிட வேண்டும். உணவை 3 வேளையாக சாப்பிடாமல் 6 வேளையாக பிரித்து சாப்பிடுவது நல்லது. கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது ஜீரணத்துக்கு உதவும். அதாவது, காலை 8:30 மணிக்கு காலை உணவு எடுத்துக்கொண்டால், 10:30 மணிக்கு சூப், சாலட் அல்லது சாண்ட்விச் சாப்பிடலாம். மதியம் ஒரு மணிக்கு மதிய சாப்பாடு சாப்பிடலாம். 7:30 மணிக்கெல்லாம் இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும்.
நடைபயிற்சி
சாப்பிட்ட உடனேயே நடக்க கூடாது எனவே நீங்கள் இரவு 9 மணிக்கு கொஞ்ச நேரம் நடக்க வேண்டும் இதனால் உணவு எளிதாக செரிக்கும். நடந்துவிட்டு வந்த பிறகு பால், பழம் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
தவிர்க்கவும்
ஜீரணமாக தாமதமாகும் உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது. இட்லி, இடியாப்பம் போன்ற வேக வைத்த உணவுகள் எளிதில் ஜீரணமாகும். வெளி உணவுகள் அதாவது, ஹோட்டல் உணவுகள் வேண்டாம். அதில் போடப்படும் சோடா, மோனோசோடியம் க்ளூட்டமேட், செயற்கை நிறங்கள் என எதோ ஒன்று அஜீரணத்தை ஏற்படுத்திவிடலாம். சுகாதாரமற்ற உணவுகளால் இன்ஃபெக்ஷன் ஆகலாம்.
காரமான உணவுகள்
காரமான உணவுகள், கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட உணவுகளும் வேண்டாம். அசைவ உணவுகளையும் குறைப்பது ஜீரண கோளாறுகளை தவிர்க்க உதவும். சிட்ரிக் அமிலம் நிறைந்த தக்காளி சூப் போன்ற உணவுகளையும் குறைத்துக்கொள்வது நெஞ்செரிச்சலைத் தவிர்க்கும்.
குளிர்பானங்கள்
பாட்டில் குளிர்பானங்களை குடிக்க வேண்டாம். சர்க்கரையை குறைவாகப் போட்டு பழச்சாறுகள் சாப்பிடலாம். முடிந்தவரை வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட குளிர்பானங்களை பருகுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லதாகும்.
தண்ணீர்
வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது ஜீரணத்துக்கு உதவும். உணவு சாப்பிடுவதற்கு இடையில் உள்ள நேரங்களில் நீங்கள் தண்ணீரை குடிப்பது நல்லது.
மருந்துகள்
கர்ப்பமாக இருக்கும் போது வாந்திப் பிரச்னை அதிகமாக இருந்தால், அது நெஞ்செரிச்சலை அதிகப்படுத்தும். வயிற்றில் புண்கள் இருப்பவர்களுக்கு வாந்தி அதிகமாக இருக்கும். அதனால் வாந்தி அதிகமாக வந்தால் டாக்டரை பார்த்து அதற்கான மருந்துகள் எடுப்பது நல்லது.
உடையில் கவனம்
நீங்கள் அணியும் உடையானது மிகவும் இறுக்கமாக இருக்க கூடாது. தளர்வான உடலுக்கு இதமளிக்க கூடிய உடைகளை மட்டுமே அணிய வேண்டும். வயிற்றுப்பகுதியை இறுக்கும் உடைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனை
நீங்கள் முறையான உணவுகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் சாப்பிடுவது மட்டுமே கர்ப்ப கால நெஞ்செரிச்சலுக்கு மிக சிறந்த மருத்துவம் ஆகும். இவ்வாறு செய்தும் உங்களுக்கு நெஞ்செரிச்சல் பிரச்சனை இருந்தால் நீங்கள் மருத்துவரிடன் ஆலோசனை பெறலாம்.
தூங்கும் போது…
தூங்கும் போது உங்களது மேல்புற உடம்பு 6 இஞ்ச் அளவுக்கு மேலே இருக்குமாறு தலையணையை வைத்து தூங்க வேண்டும் இவ்வாறு செய்வதால் உங்களது உடலில் அமிலத்தன்மை அதிகரித்து உணவு செரிக்க உதவியாக இருக்கும்.
புகைப்பழக்கம்
உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதனை கட்டாயமாக நிறுத்திக் கொள்ள வேண்டும். புகைப்பிடிப்பவர்களின் அருகிலும் செல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் புகைப்பிடிப்பவர்களை விட அருகில் இருப்பவர்களுக்கு தான் அதிக பாதிப்புகள் உண்டாகும்.