நடிகர் விஜய் சேதுபதி முத்துராமலிங்க தேவரை தவறாக பேசியதால் அவரை எட்டி உதைப்பவருக்கு ரூ.1001 பரிசு என அறிவித்த அர்ஜுன் சம்பத் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சேதுபதி பெங்களூர் சென்று இருந்தார்.அப்போது விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் எட்டி உதைத்த சம்பவம் சோசியல் மீடியா முழுவதும் தீயாய் பரவியது.
இதையடுத்து பொலிசார் அந்த மர்ம நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் பெயர் மகா காந்தி என்பது தெரிய வந்துள்ளது. விஜய் சேதுபதியிடம் மகா காந்தி குரு பூஜைக்கு வந்தீர்களா? என்று கேட்டுள்ளார். அதற்கு விஜய் சேதுபதி யார் குரு? என்று நக்கலாக கேட்டார்.
அதனால் தான் விஜய் சேதுபதியை தாக்கியதாக மகா காந்தி ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். இதனை வைத்து அர்ஜூன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயாவை விஜய் சேதுபதி அவமானப்படுத்தும் விதமாக பேசிவிட்டார்.
அதனால் விஜய் சேதுபதியை யார் உதைத்தாலும் அவர்களுக்கு ரூ.1001 பரிசுத்தொகை வழங்கப்படும் என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதனிடையே கோவை மாநகர காவல்துறையினர் அர்ஜூன் சம்பத் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரிவு 504- வன்முறையை தூண்டும் விதமாக பேசுதல், பிரிவு 506 (1) மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பிரிவுகளிலும் தலா இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.