உண்மையை சொல்ல வேண்டும் எனில் புற்றுநோய் வந்தால் கூட ஒரு நாள் இவ்வளவு கொடுமையாக நகராது. ஆனால் இந்த அஜீரண கோளாறு ஏற்பட்டுவிட்டால், நிற்க முடியாது, உட்கார முடியாது, வயிற்றுக்குள் ஏற்படும் அந்த “கொடக்…முடக்” சத்தம் நமது நிம்மதியை குழி தோண்டி புதைத்து விடும்.
ஓரிரு நாட்கள் தான் எனினும், செரிமான கோளாறு ஏற்பட்டவனுக்கு தான் தெரியும் அது எவ்வளவு கொடுமை என்பது. அதிகப்படியான உணவை சாப்பிடுவதும், வாயு நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வதும் தான் இந்த “முக்க” வைக்கும் கோளாறுக்கு முக்கிய காரணங்கள். இந்த செரிமான பிரச்சனையை இயற்கை முறையில் சரி செய்ய சில எளிய வழிமுறைகள் இருக்கின்றன.
உணவை நன்கு மென்று சாப்பிடுங்கள்
உணவை நன்கு மென்று சாப்பிட்டாலே செரிமான பிரச்சனை ஏற்படாது. பல பேர் உணவை அப்படியே விழுங்குவதனால் தான் செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
புளிப்பை சேர்த்துக் கொள்ளுங்கள்
புளிப்பு சுவையை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், செரிமானம் நல்ல முறையில் நடைபெறும். அதனால் தான் நமது முன்னோர்கள் உணவில் கடைசியாக புளிக் கரைத்த ரசத்தை சேர்த்துக் கொண்டனர்.
கல்லீரல் பத்திரம்
கல்லீரலை பாதிக்காத உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்வது நல்லது. கேரட், பீட்ரூட், பச்சை காய்கறிகள் உண்பது நன்மை விளைக்கும். மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
தண்ணீர்
அதிகமாக தண்ணீர் பருகுவது உங்களது செரிமானத்தை சீராக வைத்துக் கொள்ளும். குறைந்தது ஒரு நாளுக்கு இரண்டிலிருந்து மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது அவசியம்.
மன அழுத்தம்
உங்களது வேலை பளுவினால் ஏற்படும் மன அழுத்தம் உங்களது வயிற்று உப்புசத்தை அதிகரிக்கும். இது உங்கள் செரிமானத்தை பாதிக்கிறது. எனவே, வேலை பளு அதிகமானால் அதற்கு ஏற்ப ஓய்வும் தேவை. யோகா, வாக்கிங், நல்ல இசையை கேட்பது போன்ற செயல்கள் உங்களது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
குளூட்டமைன்
குளூட்டமைன் ஊட்டச்சத்து உங்களது உடலுக்கு மிகவும் முக்கியமானது. இது உங்கள் உடல் செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது மற்றும் செரிமான கோளாறுகளுக்கு தீர்வு அளிக்கிறது. மீன், முட்டை, பால் உணவுகள், பசலைக் கீரை, பச்சை காய்கறிகளில் குளூட்டமைன் சத்து நிறைய இருக்கிறது.
புரோபயாடிக்குகள்
தயிரில் அதிகமாக இருக்கும் புரோபயாடிக் எனும் ஆரோக்கிய பாக்டீரியா உங்கள் உடல்நலத்தை அதிகரிக்க உதவுகிறது. இது செரிமான பிரச்சனையை சரி செய்ய வெகுவாக உதவுகிறது.
உங்கள் உடலை அறிந்துக் கொள்ளுங்கள்
உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என எதை நீங்கள் பின்பற்றினாலும், முதலில் உங்கள் உடலுக்கு என்ன தேவை, அதை எவ்வளவு எடுத்துக் கொள்ளல்லாம் என அறிந்து கொள்வது முக்கியம். அனைவரின் உடலும் ஒரே மாதிரி இருக்காது. எனவே, முதலில் உங்களது உடலை அறிந்து, உங்களுக்கு என்ன உணவு தேவை என அறிந்து அதை உட்கொள்ளவது அவசியம் ஆகும்.