உடல் எடையைக் குறைப்பதற்காக ஒவ்வொருவரும் பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனர். இதற்காகவே பல விதமான உணவு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. அதில் ‘வீகன்’ உணவு முறையும் ஒன்று.
‘வீகன்’ என்பது அசைவ உணவுகளைத் தவிர்த்து, தாவர உணவுகளை சாப்பிடுவதாகும். இந்த உணவு முறை ஒவ்வொருவர் விருப்பத்திற்கு ஏற்றது போல அமையும்.
வீகன் உணவு முறையில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற தாவர உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும். இவற்றில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது.
இந்த உணவு முறையை பின்பற்றுபவர்கள், விலங்குகளின் தோலில் இருந்து தயாரிக்கும் பொருட்களைக் கூட தவிர்த்து விடுவார்கள். பால், நெய், மாமிச உணவுகள், முட்டை, தேன் ஆகியவற்றைத் தவிர்ப்பார்கள்.
ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைப்பதற்கு வீகன் முறை சிறந்தது. உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் வயதுக்கு ஏற்ப எவ்வளவு எடையைக் குறைக்க வேண்டும்? என்ன காரணத்தினால் எடை அதிகமாகி இருக்கிறது? ஏதேனும் உடல் நலக்குறைபாடு இருக்கிறதா? போன்ற அனைத்து விஷயங்களையும் பரிசோதித்த பின்னர் மருத்துவரின் ஆலோசனையோடு வீகன் உணவு முறையைப் பின்பற்றலாம்.
ஒரு நாளில் இரண்டு முறை தானியங்கள், மூன்று முறை காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் அல்லது பாலுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பொருட்களை சாப்பிட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், சரியான நேரத்திற்கு சாப்பிடுவது முக்கியமானது.
சாப்பிடும் உணவில் ஒரு நாளுக்கு தேவையான கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டும். இவை உடல் சீராக இயங்குவதற்கு அத்தியாவசியமானதாகும்.
வீகன் உணவு முறையுடன், தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, சீரான தூக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறையை பின்பற்றுவது அவசியம். அப்போது தான் உடல் எடை எளிதாக குறையும். மேலும், அதிக இனிப்புகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், சோடா போன்றவற்றை தவிர்க்க
வேண்டும்
Courtesy: MalaiMalar