பெரும்பாலான பெண்கள், 30 வயதை நெருங்குவதற்குள் வயிறு, இடுப்புப் பகுதிகளில் அதிகத் தசைகளும் கொழுப்பும் சேர்ந்து, உடல் எடை கூடிவிடுகின்றனர். இவர்கள் சமச்சீரான உணவோடு, சில அப்டாமினல் பயிற்சிகள் செய்வது, வயிற்றுப் பகுதியில் தசைகளை இறுக்கி, உடலை ஃபிட்டாக்கும்.
அப்டாமினல் க்ரன்சஸ் பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் ஃபிட்டான வயிற்றுப்பகுதியை பெறலாம். இப்போது இந்த பயிற்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் தரையில் மல்லாந்து படுத்து, கால் முட்டிகளை மடக்கியபடி வைக்க வேண்டும். கைகளை மடித்து, தலையின் பக்கவாட்டில் வைக்க வேண்டும்.
பார்வை மேல் நோக்கி இருக்க வேண்டும். கால்களை நகர்த்தாமல், உடலை முன்புறமாக உயர்த்த வேண்டும். எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு உடலை முன்னோக்கிக் கொண்டுசென்று, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி ஆரம்பத்தில் 25 முறைகள் செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.
பலன்கள்: வயிற்றுப் பகுதி தசைகள் இறுகி, வலுவடையும். முதுகு வலி, குறையும். வயிறு அழகான வடிவம் பெறும்.