கிரிக்கெட்டில் எப்படி ஒரு அணியை வெல்வதற்கு தோணியை போன்ற ஒரு வலுவான கேப்டன் தேவைப்படுகிறாரோ, அதேப்போல தான் உங்களது ஆரோக்கியத்திற்கு ஒரு வலுவான மூளை தேவைப்படுகிறது. வலிமை என்றாலே இளமையாக இருக்க வேண்டும். சிலர் அவர்களது உடலை கட்டுக்கோப்பாக 40 வயதிலும் கூட கல்லூரி மாணவன் போல பேணிக்காத்து வைத்திருப்பார்கள். அந்த இளைமையான தோற்றம் எப்படி ஒரு வலிமையான உடலுக்கு சான்றாக இருக்கிறதோ, அதேப்போல உங்களது வலிமையான உடல்நலத்திற்கு இளமையான மூளை தேவைப்படுகிறது. இதற்காக நீங்க ஜிம்மிற்கு எல்லாம் போக தேவையில்லை. உங்கள் மூளை மங்கிவிடாமல் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டாலே போதும்.
பெரும்பாலும் தற்போதைய நிலையில் நாம் ஒரு சிறிய வண்ணத்திரைக்குள் சிக்கிக்கொண்ட சுதந்திர கைதியாக தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். முன்பெல்லாம் நம் வீட்டு குழந்தைகள் கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், ஹாக்கி என ஏதாவது ஒரு விளையாட்டில் ஆர்வம் காட்டி விளையாடி வந்தனர். அதை மென்மேலும் கற்றுக்கொள்வதில் ஆர்வமாய் இருந்தனர். இன்றோ இதன் நிலை திசை மாறி டெம்பில் ரன், சப்வே சர்ஃபர், கேண்டி க்ரஷ் என தொடுதிரை மொபைல்களினுள் குடிப்புகுந்து திண்டாடி வருகின்றனர். நமது மூளை புதிதாக எதையாவது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் அப்போது தான் நமது மூளை இளமையாக இருக்கும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்…
காலை நேர நடைப்பயிற்சி
அதிகாலை சூரிய உதயத்தின் போது நடைப்பயிற்சி மேற்கொள்வது உங்கள் உடலுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி அடையும். இது உங்களது உடலை மட்டுமல்லாது மூளையையும் இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
கலை
இசை, நடனம், யோகா அல்லது தற்காப்பு கலை என எதாவதை கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் தினசரி அதன் பயிற்சிகளில் ஈடுப்படுவது உங்கள் மூளையை இளமையாக வைத்துக் கொள்ளும்.
ஸ்மார்ட் ஃபோன்
ஸ்மார்ட் ஃபோன் உபயோகிப்பது தவறல்ல, அதை மட்டுமே நாள் முழுவதும் உபயோகிப்பது தான் தவறு. அதிலும் சிலர் கொட்ட கொட்ட கண்விழித்து ஆந்தை போல நள்ளிரவு வரை அதை சுரண்டிக் கொண்டே படுத்திருப்பது கண்களுக்கு மட்டுமல்ல மூளைக்கும் பாதுப்பை ஏற்படுத்தும்.
புத்தகம் படிப்பது
நிறைய புத்தகம் படியுங்கள். இதன் மூலமாக மூளை நிறைய புதுபுது விஷயங்களை கற்றுக் கொள்ளும் போது சுறுசுறுப்பாக இருக்கும் மற்றும் மந்தமடையாமல் தடுக்கலாம்.
விளையாட்டுகள்
செஸ், தாயம், கார்ட்ஸ், பல்லாங்குழி, குறுக்கெழுத்து, சு-டோ-கு போன்ற மூளை பயன்படும் வகையிலான விளையாட்டுகளை விளையாடுங்கள்
எழுதுங்கள்
ஏதாவது எழுந்துங்கள், உங்களது அன்றைய தினத்தை பற்றியோ அல்லது உங்களது மன அழுத்தத்தை பற்றியோ, அல்லது கவிதைகள், கட்டுரைகள், கடிதங்கள் என உங்களது எழுதும் பழக்கம் உங்களது மூளையின் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அடைய உதவும்.
சமூக வேலைகள்
நீங்கள், உங்கள் வாழ்க்கை மட்டுமென்று இருக்காமல், சமூக வாழ்க்கையோடும் உறவாடுதல் உங்கள் மூளையை இளமையாக வைத்துக் கொள்ளும். இதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் புது அனுபவங்கள், புது உறவுகள், புதிய சுற்றுசூழல் உங்கள் மூளையை மட்டுமல்லாது மனதையும் புத்துணர்ச்சி அடைய உதவும்.
குடும்பத்துடன் நேரம்
என்னதான் பில்கேட்ஸாக இருந்தாலும் கூட குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது முக்கியம். நீங்கள் உங்களுக்கு பிடித்த வேலையை செய்தாலுமே கூட ஒரே வேலையை தொடர்ந்து செய்யும் போது மூளை சோர்வடையும். இதை தவிர்க்க நீங்கள் கட்டாயம் உங்களது குடும்பத்தினரோடு வீட்டிலோ அல்லது வெளியிடங்களுக்கோ சென்று நேரம் செலவளிப்பது அவசியமான ஒன்று.
நல்ல உறக்கம்
மனிதனின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம் மன சோர்வும், தூக்கமின்மையும் தான். தூக்கமின்மையின் காரணத்தால் தான் மன சோர்வு ஏற்படுகிறது. எனவே, நீங்கள் சரியான நேரத்திற்கு உறங்குவது உங்களது உடல்நலத்திற்கு மிக்கியமான ஒன்று என்பதை மறந்துவிட வேண்டாம்.