வயது வித்யாசமின்றி எல்லாரையும் பயத்தில் உறைய வைத்திருக்கும் ஒரு நோய் என்றால் சர்க்கரை நோயை சொல்லலாம். மற்றவர்களை விட கர்பகால சர்க்கரை நோயை சந்திக்கும் பெண்களுக்கு இரட்டிப்பு சுமை தங்களையும் தங்களின் குழந்தையையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.
ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் சர்க்கரை நோய், எப்போது வேண்டுமானாலும் வெளிப்படலாம். இதனால் பிரசவத்தின் போது பிரச்சனைகள் உண்டாகும்.
இரண்டு வகை :
கர்ப்ப கால சர்க்கரை நோய்களில் இரண்டு வகை இருக்கிறது ஒன்று கெஸ்டேஸ்னல் டயப்பட்டீஸ் மெல்லிடஸ் (Gestational Diabetes Mellitus).
பெரும்பாலான கர்பிணிகளுக்கு இந்த வகை சர்க்கரை நோயே ஏற்படும். உடலில் குளூக்கோஸ் தாங்குதிறன் குறைவதால் இது ஏற்படுகிறது.
ப்ரீ கெஸ்டேஸ்னல் டயப்பட்டீஸ் :
Pre-gestational diabetes எனப்படுவது ஏற்கனவே சர்க்கரை நோய் பாதிப்பு இருந்து அல்லது ப்ரீ டயப்பட்டீஸ் அறிகுறிகள் இருக்கும் பெண்களுக்கு வருகின்ற சர்க்கரை நோய்.
இது சிலசமயங்களில் பிரசவத்தையே சிக்கலாக்கிடும். இது குழந்தையின் வளர்ச்சிக் குறைபாடு கூட உண்டாக்க கூடும். குறிப்பாக 25 வயதிற்கு பிறகு கர்ப்பம் தரிப்பவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், குடும்ப பின்னணியில் சர்க்கரை நோய் கொண்டவர்கள் இந்த சிக்கலில் சிக்குகிறார்கள்.
சோதனை :
கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு ட்ரைமஸ்டரிலும் சர்க்கரை நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ப்ளாஸ்மா குளுக்கோஸ் டெஸ்ட் எனப்படும் இந்த சோதனையில் 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கணக்கிடப்படும்.
அதில் 140 மில்லி கிராம் இருந்தால் கர்ப்ப கால சர்க்கரை நோய் 80 சதவீதம் உறுதி செய்யப்படும். இதே 130 மில்லி கிராம் என்றால் 90 சதவீதம் உறுதி. பாதிப்பு 90 சதவீதம் இருந்தால் மட்டுமே உங்களுக்கு பாதிப்பு தெரிய வரும்.
பாதிப்புகள் :
கர்ப்பக்காலத்தின் போது சர்க்கரை நோய் வந்தால் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரில் அதிக ப்ரோட்டீன் கலந்திருப்பது, பிரசவத்திற்கு பிறகு அதிக ரத்த போக்கு, எடை கூடுதல், கரு கலைதல், கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுதல், இதயம் தொடர்பான பிரச்சனை ஏற்படுதல், ஏற்கனவே பிரச்சனை இருந்தால் அது தீவிரமாகி பிரசவ மரணம் கூட ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
குழந்தைக்கு உண்டாகும் பாதிப்புகள் :
பிறப்பில் உண்டாகும் வளர்ச்சிக் குறைபாடுகள், குழந்தையின் ரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பது, குழந்தையின் எடை அளவுக்கு அதிகமாக இருப்பது, மஞ்சள் காமாலை, சத்துக்குறைபாடு,குறை பிரசவம், சீரான இதயத்துடிப்பு இல்லாமல் இருப்பது போன்ற பல சிக்கல்களை உருவாக்கிடும்.
சர்க்கரை அளவு குறைவு :
சர்க்கரை நோய் வராமல் தடுக்கப்போகிறேன் என்று சர்க்கரை நாமாகவே குறைக்க கூடாது. கர்ப்பகால சர்க்கரை நோயினை நாம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ரத்த சர்க்கரை அளவு குறைந்தாலும் பிரச்சனை தான். ஹைப்போக்ளைசமிக் எனப்படும் இந்நோய் தாயையும் குழந்தையையும் பாதிக்கும்.