காலையில் என்ன தான் நல்ல நறுமணமிக்க சோப்பு போட்டு குளித்து அலுவலகத்திற்கு வந்தாலும், சில மணிநேரங்களிலேயே சிலரது உடலில் இருந்து வியர்வை துர்நாற்றம் வீசும். அத்தகையவர்கள் எவ்வளவு தான் உடலை தேய்த்து குளித்தாலும், எத்தனை முறை குளித்தாலும் வியர்வை நாற்றம் வீசும். இதற்கு ஒருசில காரணங்கள் உள்ளன. அந்த காரணங்களை ஒவ்வொருவருமே தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் நீரிழிவு இருந்தாலோ, மன அழுத்தம் மற்றும் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்தாலோ உடல் துர்நாற்றம் வீசும். இப்போது உடல் துர்நாற்றம் வீசுவதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
குறைவான கார்போஹைட்ரேட் டயட்
எடையைக் குறைக்க கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுப் பொருட்களைத் தவிர்ப்போம். ஆனால் அப்படி கார்போஹைட்ரேட் உணவுப் பொருட்களை தவிர்த்தால், அது உடலில் இருந்து கெட்ட துர்நாற்றத்தை வீசும். மேலும் ஆய்வு ஒன்றின் படி உணவில் புரோட்டீன் அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருந்தால், அதனால் உடலில் இருந்து கீட்டோன்கள் வெளியேற்றப்பட்டு, இதனால் உடல் துர்நாற்றத்தை மட்டுமின்றி, சிறுநீர் துர்நாற்றமும் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.
மன அழுத்தம்
வியர்வையிலேயே பல வகைகள் உள்ளன. அதில் மிகவும் மோசமான துர்நாற்றத்தை வெளிப்படுத்துவது மன அழுத்தத்தினால் வெளிவரும் வியர்வை தான். ஏனெனில் இந்த வியர்வையானது புரோட்டீன் மற்றும் கொழுப்புக்களுடன் சேர்ந்து அபோகிரைன் என்னும் சுரப்பியில் இருந்து சுரக்கும்.
மாட்டிறைச்சி
மாட்டிறைச்சி சாப்பிட்டால், வியர்வை நாற்றம் அதிகம் வீசும் என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஆம், அது உண்மையே. ஏனென்றால் மாட்டிறைச்சியை உட்கொண்டால், அது செரிமானமாவது தாமதமாவதோடு, அதனால் கெட்ட துர்நாற்றம் உடலில் இருந்து வாயு வெளியேறும் போது மோசமான நாற்றத்துடன் வெளிவருகிறது. அதுமட்டுமின்றி, மாட்டிறைச்சியில் உள்ள அமினோ ஆசிட், சருமத்தில் உள்ள பாக்டீரியாவுடன் சேரும் போது, அது கெட்ட துர்நாற்றத்தை வீசும்.
அளவுக்கு அதிகமான காப்ஃபைன் மற்றும் ஆல்கஹால்
இவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தாலும், உடலில் வியர்வை துர்நாற்றம் அதிகமாக வீசும்.
காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் குடும்பம்
முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி போன்றவற்றில் சல்பர் என்னும் பொருள் உள்ளது. இது கெட்ட துர்நாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே இவற்றை கோடையில் அளவுக்கு அதிகமாக எடுக்க வேண்டாம்.
நீரிழிவு
நீரிழிவு நோயுள்ளவர்களின் உடலில் இன்சுலின் குறைபாடு இருப்பதால், எரிபொருளாக கொழுப்புக்கள் உடைக்கப்படுகிறது. இப்படி உடைக்கும் போது அவை கீட்டோன்களாக மாறி, உடலில் கெட்ட துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் தீவிரமான நிலையில், உடலில் இருந்து துர்நாற்றம் வீசும். இதற்கு உடலில் இருந்து டாக்ஸின்கள் முறையாக செரிமான மண்டலத்தின் வழியே வெளியேற்றப்படாமல் இருப்பதால், அவை சருமத்துளைகளின் வழியே வெளியேறும் போது, துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே மலச்சிக்கல் இருந்தால், அதனை உடனே சரிசெய்யும் முயற்சியில் இறங்குங்கள்.