ஆரோக்கியமாக இருப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் கேள்விக்குறியாகிவிட்டது. அதிலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் அவசியமானது. ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது உடல் எடை.
உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுவது எடை இழப்புக்கு நல்லது.
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வெளி உணவுகளை தவிர்ப்பது உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக ஹோட்டலில் நாம் சாப்பிடும் உணவு சுவையாக இருந்தாலும், அது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்பது கேள்விக்குறி.
சுவையாக இருக்க வேண்டும், விரைவில் வீணாகிவிடக்கூடாது என்பதற்காக உணவகங்களில் மசாலாக்கள், எண்ணெய் மற்றும் பதப்படுத்தும் பொருட்களை சேர்ப்பார்கள். அது பல்வேறு உடல் நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
ஆனால் வீட்டில் தயாரிக்கும் உணவில் என்னென்ன பொருட்களை சேர்க்கிறோம் என்பது நன்றாகாத் தெரியும். நமக்குக் ஒத்துக் கொள்ளாத பொருட்களையும், கொழுப்பு பொருட்களையும் தவிர்ப்போம்.
வீட்டில் உணவு தயாரிக்கும்போது கிடைக்கும் மற்றுமொரு நன்மை என்ன தெரியுமா? சமைப்பதற்காக செய்யும் வேலைகளே உடற்பயிற்சியாக மாறிவிடும். மனமும் திருப்தியடையும்.
அதேபோல் சமைத்த உணவை கவனத்துடனும் மெதுவாகவும் சாப்பிட வேண்டும். உணவை விரைவாக சாப்பிடுவது என்பது வெறும் பசிக்காக சாப்பிடுவது. அப்போது உண்ணும் உணவின் அளவும் உடல் எடைஅதிகமாகிவிடும். எனவே, மெதுவாக சாப்பிடுங்கள்.
உடல் எடையை சரியாக பராமரிப்பது என்பது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் மூளையில் அதிகரிக்கும் மன அழுத்தத்தின் அளவோடு நேரடியாக இணைந்துள்ளது.
உடல் எடை அதிகமாக இருந்தால், தூக்கமின்மை, மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வை உருவாக்கும். இது எடை இழப்பு செயல்முறைக்கு இடையூறாக இருப்பதோடு, எடையை மேலும் அதிகரிக்கும்.
மன அழுத்தம் ஏற்படுவதை உணர்ந்தால், நீர் அருந்துவதை அதிகரிக்கவும். அதோடு, மிதமான சூரிய ஒளிக்கு செல்லவும். நீர் மற்றும் வைட்டமின் டி இரண்டுமே எடை இழப்பை துரிதப்படுத்தும் இரண்டு முக்கிய காரணிகள்.
அடுத்ததாக சிற்றுண்டி அதாவது தீனி சாப்பிடும் பழக்கத்தை கட்டுப்படுத்தவும். வேலையில்லாமல் சும்மா இருக்கும்போதும், தொலைக்காட்சி பார்க்கும்போதும் சிற்றுண்டிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறைவான கலோரி இருக்கும் நொறுக்குத் தீனிகளை எடுத்துக்கொள்ளலாம்.