கோடைக்காலம் என்றாலே அனைவருக்கும் குதூகலம் தான். நண்பர்களுடன் தினந்தோறும் கிரிக்கெட் விளையாடலாம், நாள் முழுக்க ஊர் சுற்றலாம், வெளியூர் பயணங்கள், குடும்பத்துடன் சுற்றுலா என ஏகப்பட்ட கேளிக்கைகள் நிறைந்த காலம் தான் கோடைக்காலம். சந்தோஷம் நிறைந்த நாட்கள் எனினும், சற்று கவனமாக இருக்கக்கூடிய நாட்களும் கூட. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள், அப்படி தான் கோடைக்காலத்தில் அளவிற்கு அதிகமாய் ஊர் சுற்றினால் கோடைக்காலத்து நோய்களும் அளவிற்கு அதிகமாய் தாக்கும். அதிலும் சின்னம்மை, தட்டம்மை, பொண்ணுக்கு வீங்கி, மஞ்சள் காமாலை போன்ற நோய்களின் தாக்கம் தான் கோடைக்காலத்தில் அதிகமாய் இருக்கும்.
கோடைக்காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. மேற்கூறிய கோடைக்கால நோய்கள் அனைத்துமே உடல் சூட்டின் மிகுதியினால் வருபவை தான். எனவே, உடல் சூட்டை அதிகப்படுத்தும் உணவுகளை சாப்பிடாதீர்கள். நிறைய இயற்கையான நீராகாரங்களை பருகுங்கள். இளநீர், பதனி, நுங்கு, நன்னாரி சர்பத், எலுமிச்சை ஜூஸ், வெள்ளரி போன்றவை உடல் சூட்டை தணிக்க உதவும். இனி கோடைக்காலத்தில் தாக்கும் நோய்கள் பற்றியும் அதிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி என்றும் தெரிந்துக் கொள்ளலாம்…
சின்னம்மை
சின்னம்மை பொதுவாக குழந்தைகளை தாக்கும் நோய். இது காற்றில் பரவும் கிருமிகளால் பரவக்கூடியது. முன்பே இந்த நோய் தொற்று உள்ளவர்கள் தும்முவதாலோ அல்லது இருமுவதாலோ கூட இந்த நோய் தொற்று ஏற்படலாம். இந்த நோய் ஏற்படும் போது தலைவலி, தொண்டை கரகரப்பு, உடல் சோர்வு மற்றும் உடலில் ஆங்காங்கே சின்ன சின்ன கொப்பளங்கள் ஏற்படும்.
சின்னம்மை முன்னெச்சரிக்கை
இதிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்கு நீங்கள் வெளியில் சென்று வந்தால் நன்கு கை கழுவிய பின்பு சாப்பிடுதல், இழவு வீட்டிற்கு சென்று வந்தால் நன்கு குளிப்பது போன்றவையை செய்தாலே போதும்.
சின்னம்மை நிவாரணம்
வேப்பிலை, சின்ன வெங்காயம் சின்னம்மைகான சீரிய மருந்தாக கருதப்படுகிறது,
தட்டம்மை
வெயில் காலங்களில் அதிகமாய் வெளியில் சுற்றுபவர்களுக்கும், தண்ணீரை குறைவாக பருகுபவர்களுக்கும் பரவலாக பரவும் நோய் தான் தட்டம்மை.
தட்டம்மை காரணம்
பாராமிக்ஸோ எனும் வைரஸின் தொற்றினால் தான் தட்டம்மை நோய் ஏற்படுகிறது. இது தொண்டைப் பகுதியில் தான் முதல் தாக்கத்தை ஏற்படுகிறது. சின்னம்மை போல தான் தட்டம்மையும் பரவுகிறது.
தட்டம்மை நிவாரணம்
சளி, காய்ச்சல், இருமல், கண்கள் சிவந்து காணப்படுவது போன்றவை தட்டம்மைக்கு அறிகுறிகளை கூறப்படுகின்றன. எம்.எம்.ஆர் எனப்படும் நோய் தடுப்பூசி அளிப்பதன் மூலம் இந்நோயின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.
மஞ்சள் காமாலை
சுகாதாரமற்ற தண்ணீரை பருகுவதினாலும், சுத்தமற்ற தண்ணீரில் சமைக்கும் உணவுகளை சாப்பிடுவதினாலும் தான் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட காரணமாக இருக்கிறது.
மஞ்சள் காமாலை காரணம்
ஹெபடைடிஸ் எனும் வைரஸின் தாக்கத்தினால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. இது கல்லீரலை வலுவாக பாதிக்கக்கூடிய நோயாகும்
மஞ்சள் காமாலை நிவாரணம்
சருமத்தின் நிறம் மாறுதல், சிறுநீரின் நிறம் மாறுதல், கண்கள் சிவந்து காணப்படுதல், சரும எரிச்சல் போன்றவை அறிகுறிகளாக கூறப்படுகின்றன. இந்நோயில் இருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க சுகாதாரமற்ற இடங்களில் உணவு உண்ணும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும், நன்கு கொதிக்க வைத்த மற்றும் வடிகட்டிய நீரை குடிக்க வேண்டும்.
வயிற்றுப்போக்கு
கோடைக்காலத்தில் பொதுவாக ஏற்படும் நோய்தான் வயிற்றுப்போக்கு. கெடுதியான உணவுகளை உட்கொள்வது, சரியாக உணவு செரிமானம் ஆகாமல் இருப்பது, வயிற்றுப்போக்கு ஏற்பட காரணமாக இருப்பவை.
வயிற்றுப்போக்கு நிவாரணம்
குமட்டல், வயிறு வீக்கம் அடைதல், உடலில் நீர் அளவு குறைந்து இருப்பது போன்றவை எல்லாம் வயிற்றுப்போக்கிற்கான அறிகுறிகள். சுகாதாரமான உணவுகள், மற்றும் காய்ச்சிய நீர் குடிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கு ஏற்படாமல் இருக்கலாம்.
பொண்ணுக்கு வீங்கி
கோடை காலங்களில் அதிகமாய் பரவும் தொற்று நோய் பொண்ணுக்கு வீங்கி ஆகும். பெரும்பாலும் கோடையின் மிகுதியான வெப்பநிலையில் இந்நோயின் தாக்கம் ஏற்படுகிறது.
பொண்ணுக்கு வீங்கி காரணம்
இந்நோய் தொற்று ஏற்பட காரணமாக இருப்பது, ஏற்கனவே இந்நோயின் தொற்றுள்ள நபர்களோடு நெருங்கி இருப்பது, அவர்கள் தும்மும் போதும், இருமும் போதும் அவர்களிடம் இருந்து இந்நோய் பரவுகிறது.
பொண்ணுக்கு வீங்கி நிவாரணம்
கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படுவது, தலைவலி, காய்ச்சல், உடல் எரிச்சல், உடல் சோர்வு, பசியின்மை போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகளாக கூறப்படுகின்றன. எம்.எம்.ஆர் எனப்படும் நோய் தடுப்பூசி அளிப்பதன் மூலம் இந்நோயின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.