ஒருவருடைய ஜாதகத்தில், செவ்வாய் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12ம் இடங்களில் நின்றால் தோஷம் என்று கூறப்படுகிறது. செவ்வாய் தோஷம் என்றால், செவ்வாய் தோஷமுள்ள ஒருவருடன்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது சரியல்ல.
செவ்வாய், தான் நிற்கும் ஸ்தானத்தையும், பார்க்கும் ஸ்தானங்களாகிய (4, 7, 8 ம் பார்வை) 3-மிடம், 6-மிடம், 7-மிடம், 8-மிடம், 2-மிடங்களையும் பாதிப்படையச் செய்து, திருமண வாழ்க்கைக்கு அவசியமான குடும்பம், வியாதி, களத்திரம், கவுரவம், மாங்கல்யம் ஆகியவற்றை வளரவிடாமல் செய்து விடுகிறார்.
இதில் சகோதரம், கடன், வியாதி, வீரியம், தைரியம், கவுரவம், அந்தஸ்து, ஆயுள் என பலவகையிலும் பாதிக்கப்படுவதால், தானாகவே கெட்டப் பெயர் ஏற்பட்டு, தீய நடவடிக்கைகளால் பெண்களால் வெறுக்கப்பட்டு, தகாத பழக்கங்களில் ஆரோக்கியம் குறைவது போன்றவை ஏற்படும். ஆயுள் குறையும். இது போல துன்பங்கள் ஏற்படுவதால் இதை செவ்வாய் தோஷம் என்கிறோம்.
இதனால் திருமணம் மட்டும் தடைபடாது. சகோதர, சகோதரிகளின் வெறுப்புக்கு ஆளாகுதல், வேலைக்காரர்களால் அவமானப்படுதல், பூர்வீக பூமியை விற்பது போன்றவைகளுக்கும் காரணமாகி விடும். குடியிருக்க வசதியான வீடு கூட, செவ்வாய் தோஷம் வந்தால் அமையாது. நண்பர்களே எதிரியாக மாறுவார்கள்.
2, 4, 7, 8ம் இடங்களில் ஒன்றில் செவ்வாய் அமரக் காரணம், நம் முன் ஜென்மப் பலன். அது, தனக்கு அல்லாத, இந்தப் பாவங்களுக்கெல்லாம், கலியுகம் என்பதால் உடனே தண்டனை கிடைக்காது. வயதான பின்போ, அல்லது அதற்கு முன்போ பிள்ளைகளுக்குத் துன்பம் நேர்ந்து ஒன்றும் உதவி செய்ய முடியாமல் மனம் வருந்தி ஏங்கும் நிலை ஏற்படும்.
நிராயுதபாணியாக எதிரிகளிடம் சிக்கிக் கொள்வார்கள். கடன் வாங்கிவிட்டுத் திருப்பி தர முடியாமல் திணறுவார்கள். அடிக்கடி குடியிருக்கும் வீட்டை மாற்றுவது, மனைவியிடம் கருத்து வேற்றுமை உண்டாவது, ஒரு பாவமும் செய்யாமல் பழி ஏற்பது போன்ற துன்பங்கள் செவ்வாய் தோஷத்தால்தான் ஏற்படும்.
திருமணம் தடைப்படுதல், தாமதத் திருமணம், இருதாரம், நோயுற்ற மனைவி, அல்லது மனைவி அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, தான் நோயுறுதல் இவையெல்லாம் நடக்கும். நாம் கண்ணால் காணக்கூடிய 5 கிரகங்களுள் ஒன்று செவ்வாயும் என்பதால், செவ்வாய் தோஷத்தின் தாக்கம் நம்மை நேரடியாகவே பாதிக்கும்.
Courtesy: MalaiMalar