பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.
தேவையானவை
வறுத்த பச்சை பயறு – ஒரு கப்
பொடித்த வெல்லம் – முக்கால் கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 10
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வறுத்த பச்சை பயறை போட்டு தண்ணீர் விட்டு ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
அத்துடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
ஆறியதும் உதிர்த்து வைக்கவும். அடி கனமான வாணலியில் வெல்லத்தூளைப் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.
வெல்லம் நன்றாகக் கரைந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். வெல்லக்கரைசலை வடிகட்டி, மீண்டும் வாணலியில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
ஒரு கம்பி பாகு பதம் வந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள பச்சை பயறு மாவு சேர்த்துக் கிளறவும். மாவு, பாகோடு சேர்ந்து, நன்றாகக் கெட்டியானவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும்.
நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை இதனுடன் கலந்தால்… சத்தான, சுவையான பச்சை பயறு புட்டு ரெடி.