உங்களுக்கு சளி பிடித்துள்ளதா? அப்படியெனில் அப்போது சளிக்கு இதமாக இருக்குமாறான மிளகு பூண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த குழம்பானது சளியை விரைவில் போக்கிவிடும். அத்துடன் மிகுந்த சுவையோடும் இருக்கும்.
இங்கு சளிக்கு இதமாக இருக்கும் மிளகு பூண்டு குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள். குறிப்பாக இந்த குழம்பானது இட்லி, தோசை, சாதம் போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
மிளகு – 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 6-7 பற்கள்
புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் சாம்பார் பொடி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு, சீரகம் மற்றும் பூண்டு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து, அதில் புளிச்சாற்றினை ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, இறுதியில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து கிளறி, 5-10 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், மிளகு பூண்டு குழம்பு ரெடி!!!