உணவின் சுவையை என்ன தான் உப்பு அதிகரித்தாலும், உண்ணும் உணவில் உப்பை அதிகம் சேர்த்தால், அதனால் பல்வேறு தீவிரமான உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே உணவில் உணவை மிகவும் குறைவாக அல்லது மிதமான அளவில் சேர்க்க வேண்டும்.
தற்போது எங்கும் பதப்படுத்தப்பட்ட மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் அதிகம் கிடைப்பதால், மக்களும் அது சுவையாகவும், சமைப்பதற்கு எளிமையாகவும் இருப்பதாக கருதி, அவற்றை வாங்கி உட்கொள்கின்றனர். ஆனால் அவற்றில் உப்பு ஏராளமான அளவில் உள்ளது. இவற்றை உட்கொள்ளும் போது, நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிலான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
சாதாரணமாக ஒரு டீஸ்பூன் உப்பில் 2,000 மில்லிகிராம் சோடியம் உள்ளது. ஒருநாளைக்கு நமக்கு பரிந்துரைக்கப்பட்ட சோடியத்தின் அளவு 2,300. அப்படியெனில் நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பை சேர்க்கிறீர்கள் என்று நினைத்துப் பாருங்கள்.
அதுமட்டுமின்றி, நீங்கள் அளவுக்கு அதிகமான உப்பை எடுத்து வந்தால், கீழே கொடுக்கப்பட்ட அறிகுறிகள் தென்படும். அதையும் சற்றுப் படித்துப் பாருங்கள். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனே நீங்கள் உணவில் சேர்க்கும் உப்பின் அளவை குறைக்க வேண்டும் என்று அர்த்தம்.
அதிகமான தாகம்
உடலில் அளவுக்கு அதிகமான அளவில் சோடியம் இருந்தால், செல்களில் உள்ள நீர்ச்சத்தின் அளவில் இடையூறு ஏற்பட்டு, தாகம் அதிகம் ஏற்படும். எனவே உங்களுக்கு தாகம் அதிக அளவில் எடுத்தால், உணவில் சேர்க்கும் உப்பின் அளவை உடனே குறைக்க வேண்டும் என்று அர்த்தம்.
வயிற்று உப்புசம்
அதிகளவு உப்பு உடலில் நீர்த்தேக்கத்தை அதிகரித்து, அதனால் ஒருவித உப்புசத்தை உணரக்கூடும். இதனால் சரியாக சாப்பிட முடியாது மற்றும் அசௌகரியத்தை உணரக்கூடும்.
கைகள் மற்றும் கால்களில் வீக்கம்
உப்பு கைகள் மற்றும் கால்களில் நீர்த்தேக்கத்தை அதிகரித்து, வீக்கத்தை உண்டாக்கும். எனவே உங்களுக்கு அடிக்கடி கைகள் அல்லது கால்களில் வீக்கம் ஏற்பட்டால், உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும் என்று அர்த்தம். அதிலும் இந்நிலை சிறுநீரக நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும்.
உப்பு பலகாரங்களின் மீது அதிக நாட்டம்
உடலில் உப்பு அதிகம் இருந்தால், உப்பு பலகாரங்களின் மீது நாட்டத்தை அதிகரிக்கும். இதனால் பிரச்சனை இன்னும் மோசமாகக்கூடும். எனவே உங்களுக்கு உப்பு அதிகம் நிறைந்த ஸ்நாக்ஸ்களை உட்கொள்ள வேண்டுமென்று தோன்றினால், உங்களின் உடலில் சோடியத்தின் அளவு ஏராளமாக உள்ளது என்று அர்த்தம். ஆகவே கவனமாக இருங்கள்.
உயர் இரத்த அழுத்தம்
அதிகளவு உப்பினால் உடலில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு, அதன் காரணமாக இரத்தத்தின் கன அளவு அதிகரித்து, அதனால் இதயம், மூளை, சிறுநீரகங்கள் போன்றவற்றில் அழுத்தம் அதிகரிக்கும். இப்படி தமனிகளில் அழுத்தம் அதிகரித்தால், வாழ்நாள் முழுவதும் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.
பலவீனமடைந்த எலும்புகள்
அளவுக்கு அதிகமான சோடியம் எலும்புகளில் கால்சிய அளவை குறையச் செய்து, சிறுநீர் வழியே வெளியேற்றும். இதனால் எலும்புகள் மிகவும் பலவீனமாகிவிடும். எனவே உங்களுக்கு ஏற்கனவே கால்சியம் குறைபாடு இருந்தால், உணவில் உப்பை சேர்க்க வேண்டாம்.
சிறுநீரக கற்கள்
உணவில் அதிகளவு உப்பை சேர்த்தால், இரத்தத்தில் நீரின் அளவு அதிகரித்து, அதனால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாக்கப்படும். அப்படி சிறுநீரகங்கள் ஓய்வின்றி வேலை செய்ய நேர்ந்தால், எலும்புகளில் இருந்து வெளியேறும் கால்சியம் சிறுநீரங்களில் அதிகம் படிந்து, கற்களாக உருவாகிவிடும். எனவே உங்களுக்கு சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு, அதிகளவு உப்பும் ஓர் காரணம் என்பதை உணருங்கள்.