உங்களது டீன் ஏஜ் குழந்தையை பற்றி கவலைப்படுகிறீர்களா? அவர்களுக்கு என்ன தான் பிரச்சனை என்று நினைத்து குழப்பமா?
உங்களது டீன் ஏஜ் நாட்களை பற்றி நினைத்து பாருங்கள். உங்களுக்கும் இந்த பருவத்தில் சில தடுமாற்றங்கள் நிச்சயமாக இருந்திருக்கும். மாறி வரும் வாழ்க்கை முறை காரணமாக உங்கள் பிள்ளைகளுக்கு அதை விட அதிகமான பிரச்சனைகள் இருக்கலாம்.
உடலில் ஏற்படும் மாற்றங்கள்
உடலில் இந்த பருவத்தில் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அவர்கள் குழந்தை பருவம் முடிந்து இளமை பருவத்திற்கு வந்துவிட்டனர். இந்த சமயத்தில் உடல் பாகங்களில் மாற்றங்கள் உண்டாகும். முகத்தில் முடிகள் வளரும். முகப்பருக்கள் இந்த சமயத்தில் அதிகமாக வரும். இந்த டீன் ஏஜ் பருவத்தில் உடல் எடையும் அதிகரிக்கும்.
போதை பழக்கம்
டீன் ஏஜ் பருவத்தில் சிலர் விளையாட்டாகவும், சில காரணங்களுக்காகவும் போதை பழக்கங்களை பழகுகின்றனர். சில குழந்தைகள் 14 முதல் 18 வயதிலேயே குடிபழக்கத்திற்கு அடிமையாகிவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெற்றோர்கள் இது போன்ற விஷயங்களினால் உண்டாகும் தீமைகளை பற்றி குழந்தைகளுக்கு கவனமாக எடுத்து சொல்ல வேண்டியது அவசியம்.
காதல்
இந்த வயதில் உங்கள் பிள்ளைகளுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். மேலும் இத வயதில் காதலும் உண்டாகும். உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு எது காதல், எது ஈர்ப்பு என்ற வேறுபாடு தெரியாது. காதல் பிரிவுகள் அவர்களை மிகுந்த மன அழுத்தத்தில் தள்ளும். இதனால் படிப்பு விஷயத்தில் கவனம் இல்லாமல் போகும். பெற்றோர்கள் பிள்ளைகளின் நிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டியது அவசியம்.
மன அழுத்தம் தர வேண்டாம்
உங்கள் குழந்தைகளை அவர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கவிடுங்கள். உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் அவர்கள் மீது திணிக்க வேண்டாம். படிப்பை மட்டும் கவனி என்று அவர்களது பொழுதுபோக்குகளை நிறுத்த வேண்டாம்.
கவலை வேண்டாம்
உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக சீக்கிரமாக கோபங்கள் ஏற்படும். இதனால் உங்களை அவர்கள் திட்டிவிட்டால் அதை நினைத்து மனம் உடைந்துவிடாதீர்கள்.
ஜாலியாக பேசுங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு இந்த பருவத்தில் பல பிரச்சனைகள் இருக்கும். அதை எதிர்கொள்ள போதிய அனுபவமும் இருக்காது. எனவே நீங்கள் ஒரு நல்ல நண்பனாக இருந்து தினமும் நடக்கும் விசயங்கள் பற்றி உங்கள் குழந்தைகளிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அதற்காக வற்புறுத்தல்கள் வேண்டாம். நகைச்சுவையாக பேசுங்கள்.
சொல்லிக் கொடுங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு யாருடன் எப்படி பழக வேண்டும் என்று சொல்லி தர வேண்டியது உங்களது கடமை. தவறான எண்ணத்துடன் பழகுபவர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பெற்றோர்களை தவிர வேறு யாராலும் தெளிவாக குழந்தைக்கு சொல்லி தர முடியாது.
ஊட்டசத்து உணவு
இந்த பருவத்தில் குழந்தைகள் நல்ல சத்தான உணவுகளை உண்ண வேண்டும். இது பிற்காலத்தில் பல பிரச்சனைகளில் இருந்து உங்கள் குழந்தையை காப்பாற்றும்.