செட்டிநாடு ரெசிபிக்களில் மசாலா குழம்பும் பிரபலமானது. குறிப்பாக இந்த மசாலா குழம்பானது குழந்தைகளால் விரும்பி சாப்பிடப்படும். மேலும் இந்த மசாலா குழம்பில் விருப்பமான எந்த ஒரு காய்கறியையும் பயன்படுத்தலாம். இங்கு முள்ளங்கி பயன்படுத்தி எப்படி செட்டிநாடு மசாலா குழம்பு செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
சரி, இப்போது அந்த செட்டிநாடு மசாலா குழம்பின் செய்முறையைப் பார்ப்போமா!!!‘
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி – 3 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
அரைப்பதற்கு…
துருவிய தேங்காய் – 1/4 கப்
சோம்பு 1/4 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
தாளிப்பதற்கு…
பிரியாணி இலை – 1
பட்டை – 1/4 இன்ச்
சோம்பு – 1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 1 கையளவு
பூண்டு – 4-5 பற்கள்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தேங்காய், சோம்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைக்க வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள முள்ளங்கியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கிளறி, 1/2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், செட்டிநாடு மசாலா குழம்பு ரெடி!!!