கை, கால் விரல் நகங்களை அழகுப்படுத்திக்கொள்ள நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். அவை அழகாக இருப்பதை விட ஆரோக்கியமான வளர்ச்சி நிலையில் இருப்பது அவசியமானது. நகங்கள் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை. அவை பலவீனமாக இருந்தால் உடல் உள்ளுறுப்புகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கும். அதனால் ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் பி உள்ளடங்கிய உணவுகள் நகங்களுக்கு வலிமை சேர்க்கும் தன்மைகொண்டவை. மீனில் ஒமேகா 3 அமிலம் மட்டுமல்லாது கந்தகம், புரதம் போன்றவையும் நிறைந்திருக்கிறது. மெல்லிய, எளிதில் உடையக்கூடிய நகங்களை கொண்டவர்கள் மீன் உணவுகளை சாப்பிடுவது அவசியமானது. அதிலிருக்கும் ஒமேகா 3 அமிலம் நகங்கள் ஈரப்பதத்துடனும், வலுவாகவும் இருப்பதற்கு வழிவகை செய்யும்.
முட்டையில் புரதம் மட்டுமல்லாது வைட்டமின் டி, வைட்டமின் பி 12, இரும்பு போன்றவை உள்ளடங்கியிருக்கிறது. இவை நகங்களின் தடிமன் அதிகரிப்பதற்கு உதவி புரியும். பச்சை பட்டாணியில் புரதம், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி ஆகியவை இருக்கின்றன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நகங்களை வலுப்படுத்தும்.
கீரை, ப்ராக்கோலி உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகள் நகங்களுக்கு நலம் சேர்க்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டவை. பலவீனமான, உடையும் தன்மையுடைய நகங்களை கொண்டவர்கள் பச்சை இலை காய்கறிகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.