28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
p4b
ஆரோக்கியம் குறிப்புகள்

அதிகரிக்கும் நொறுக்குத்தீனி மோகம்

ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவைத் தவிர நாம் என்னென்ன சாப்பிடுகிறோம்? இந்தக் கேள்விக்கு டீ, காபி, பிஸ்கட், வடை, பஜ்ஜி, முறுக்கு, பானி பூரி, குளிர்பானம்… என நீள்கிறது பதில் பட்டியல். ஒருவேளை அல்லது இரண்டு வேளை உணவை மட்டுமே உட்கொண்டு, காட்டிலும் மேட்டிலும் வேலை செய்தனர் நம் முன்னோர். இன்றோ, கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வேலை பார்த்தாலுமேகூட, ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை நொறுக்குத் தீனி இல்லாமல் இருக்க முடிவது இல்லை. இதனால், உடல்பருமன், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு என ஏராளமான பிரச்னைகள். காலை 9 மணிக்கு வயிறு நிரம்ப டிஃபன் சாப்பிடுபவருக்கு, 11 மணி அளவில் வயிறு சிறிது காலியாகிறது. அவர் ஏதேனும் சாப்பிட வேண்டும் என நினைத்து, ஆரோக்கியமான ஆப்பிள் ஜூஸ் அருந்தினாலுமே அதையும் நொறுக்குத்தீனி என்றுதான் கருத முடியும். ஓர் உணவு வேளைக்கும் இன்னொரு உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில், உடலுக்குக் கட்டாயம் உணவு தேவைப்படும்போது சத்தான ஸ்நாக்ஸ் எதையாவது சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், வலுக்கட்டாயமாக பிஸ்கட்டையோ, பஜ்ஜியையோ சாப்பிடுவது தவறு. நொறுக்குத்தீனி என்றால் வெறும் முறுக்கு, பஜ்ஜி என்று சுருக்கிவிட முடியாது. நொறுக்குத்தீனிகளில் கலோரிகள் அதிகம். கொழுப்புச் சத்து, மாவுச்சத்து இரண்டும் அதிக அளவில் இருக்கும். தேவை இல்லாத நேரத்தில் சாப்பிடும் எந்த ஓர் உணவையுமே நொறுக்குத்தீனியாகத்தான் கருத முடியும்.
p4b

வீட்டில் தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனிகள்

நாம் சமைக்கும் ஒவ்வோர் உணவுக்கும் குறிப்பிட்ட ஆயுட்காலம்தான் உண்டு. வீட்டில் தயாரித்து ஒரு வாரமோ, ஒரு மாதமோ பத்திரப்படுத்திச் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் இந்த வகை நொறுக்குத் தீனிகளே. வீட்டில் செய்த அதிரசம், லட்டு, ஜாங்கிரி, முறுக்கு, காராசேவு முதலானவை இந்த வகையைச் சேர்ந்தவை. இவற்றைத் தேவையற்ற நேரங்களில் சாப்பிடும்போது, கார்போஹைட்ரேட் அதிகரிக்கும். இவை கொழுப்பாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படும். இதனால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகள்

இவற்றில், செயற்கை நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் சேர்க்கப்பட்டிக்கும். இதனால்தான் ஒரு முறை வாங்கிச் சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் வாங்கிச் சாப்பிடத் தூண்டுகின்றன. இவை நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்க, பதப்படுத்திகளைச் சேர்க்கின்றனர். மேலும், உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் பாலிதீன் போன்றவற்றால் பாதுகாக்கப்படுகிறது.

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளின் ஆபத்துகள் குறித்து, பல ஆய்வுகள் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. பாக்கெட் உணவுகளில் வேதியல் பொருட்கள், உப்புகள், பதப்படுத்திகள், நிறமூட்டிகள் போன்றவை கலக்கப்பட்டிருப்பதால், இவற்றை உண்ணும்போது பல வகையான ஹார்மோன் பிரச்னைகள் வருகின்றன. அதில் மிக முக்கியமானது சர்க்கரை நோய். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பலருக்கும் ஹார்மோன் சமச்சீரின்மைப் பிரச்னை சமீபகாலங்களில் அதிகரிக்க, இந்த உணவுகள் முக்கியக் காரணி.

ஜங் ஃபுட்

பீட்சாவும் பர்கரும் மட்டும் அல்ல, சமோசாவும் பஜ்ஜிகளும் ஜங்க் ஃபுட் தான். பலர் ‘பீட்சா சாப்பிடுவது தவறு’ எனச் சொல்லிக்கொண்டே, டீக்கடையில் சமோசா, பஜ்ஜிகளை வெளுத்துக் கட்டுவார்கள். பேக்கரிகளில் விற்கப்படும் உணவுகள், ஐஸ்க்ரீம், கேக் என கிட்டத்தட்ட அனைத்து நொறுக்குத்தீனிகளும் ‘ஜங் ஃபுட்’ என்ற வரையறைக்குள் அடங்கிவிடுபவை. அதிக சர்க்கரை, அதிக உப்பு, அதிகக் கொழுப்பு உள்ள உணவுகள் அனைத்துமே ஜங்க் ஃபுட்தான். இதனால்உடல்பருமன் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. கூடவே, சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை பல நோய்களும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
p6a
எண்ணெய் பாதிப்பு

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் அனைத்துமே உடலுக்குக் கேடுவிளைவிக்கக்கூடியவைதான். அப்பளம், உளுந்தவடையில் ஆரம்பித்து சிக்கன் ரைஸ், நூடுல்ஸ், காலிஃபிளவர் வறுவல், காளான் ஃபிரை என எல்லாமே பாதிப்பைத் தருபவை. எண்ணெயில் பொரித்த உணவுகள், கெட்ட கொழுப்பை அதிகரிக்கின்றன. ஒரு முறை சூடுபடுத்தப்பட்ட, சமைக்கப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்துவதால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. எண்ணெயில் பொரித்த சிக்கன், ஃப்ரெஞ்ச் ஃபிரைஸ் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுவதன் காரணமாக, மேலை நாடுகளில் உணவுக்குழாய் பகுதியில் புற்றுநோய் ஏற்படுவது சர்வசாதாரணம். இந்தியாவிலும் அது போன்ற நிலைமை ஏற்படுவதைத் தடுக்க எண்ணெயில் பொரித்த நொறுக்குதீனிகள் அனைத்தையும் தவிர்ப்பதுதான் நல்லது.

நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா?

நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் எல்லோருக்கும் சர்க்கரை நோய் வருவது இல்லை. சர்க்கரை நோய் வருவதற்கு உடல் உழைப்பு, உணவுப் பழக்கம் எனப் பல காரணிகள் உள்ளன. அதிக அளவு மாவுச்சத்துள்ள நொறுக்குத்தீனிகளை உண்ணும்போது, இன்சுலின் தேவை அதிகமாகிவிடுகிறது. கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது, உடல்பருமன் ஏற்படுகிறது. இந்தக் காரணங்களால் சிலருக்குச் சர்க்கரை நோய் வரக்கூடும். உடற்பயிற்சி இல்லாமல் நொறுக்குத்தீனி சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகிறது.

பாரம்பர்ய உணவுமுறை பெஸ்ட்

நொறுக்குத்தீனிகளைக் கண்டிப்பாகச் சாப்பிடவே கூடாது என முடிவு செய்துவிட வேண்டாம். நம் முன்னோர்கள் ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ற மாதிரி உணவு வகைகளைத் தயார்செய்து சாப்பிட்டார்கள். மழைக்காலத்தில் உடலுக்கு வெப்பம் அதிகம் தேவைப்படும் என்பதால், அதிக கலோரி தேவைப்படும். மேலும், அந்த நேரத்தில், வெளியே போக முடியாது என்பதால், பலகாரங்கள் முதலான தின்பண்டங்களைச் செய்துவைத்துச் சாப்பிட்டனர். பனிக்காலம் முடியும் தருவாயில் பொங்கல் போன்ற அரிசி உணவுகளைச் சாப்பிடுவார்கள். வெயில் காலத்தில் நீர் மோர், பானகம் ஆகியவற்றைப் பருகினார்கள். ஆனால், இன்று எல்லா உணவுப் பொருட்களும் எல்லா நாட்களிலும் கிடைக்கின்றன. வெயில் காலத்தில் ஜாங்கிரியும், மழைக்காலத்தில் தர்பூசணியும் சாப்பிடும் சூழ்நிலைக்கு வந்துவிட்டோம்.

ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்றார்போல உணவு சாப்பிடும் முறையைத் தவிர்த்தது, வழக்கத்தை மாற்றியதுதான் தற்போது பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். எனவே, இனிப்போ, காரமோ எந்த வகை நொறுக்குத்தீனியாக இருந்தாலும் வீட்டில் செய்து எப்போதாவது சாப்பிடுவதில் தவறு இல்லை. தினமும் டீ குடிக்கும்போது பஜ்ஜி சாப்பிட்டே ஆக வேண்டும், தியேட்டருக்குப் போனால் பாப்கார்ன் சாப்பிட்டே ஆக வேண்டும் என நினைத்து, நொறுக்குத்தீனி எதையாவது கொறிப்பதுதான் தவறு.

– பு.விவேக் ஆனந்த்

படம்: சி.தினேஷ்குமார்

மனதைக் கட்டுப்படுத்த முடியாதது ஏன்?

சிலர் ‘நொறுக்குத்தீனி சாப்பிடுவது தவறு எனத்தெரிகிறது. ஆனால், மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்பார்கள். அது உண்மைதான். ஏனெனில், காலம்காலமாக நமது முன்னோர்கள் சிறுதானியங்கள், கம்பு, சோளம் போன்றவற்றையே சாப்பிட்டுவந்தார்கள். அந்தக் காலத்தில் இனிப்புகள், அரிசி உணவுகள் போன்றவை கிடைப்பது அரிது என்பதால், அந்த உணவுகளை சாப்பிட ஏக்கம் இருக்கும். இனிப்பு, கார வகை முதலான நொறுக்குத்தீனிகளைப் பார்த்தாலே ஏன் நினைத்தாலேகூட எச்சில் ஊற ஆரம்பிக்கும். பரம்பரை பரம்பரையாக ஜீன்கள் வழியாக நமக்கும் அந்தப் பழக்கம் தொடர்கிறது. நொறுக்குத்தீனிகளைப் பார்த்தாலோ, முகர்ந்தாலோகூட உடனடியாக மூளையில் எண்டார்பின் எனும் ஹார்மோன் சுரக்க ஆரம்பித்துவிடும். இந்த ஹார்மோன் சுரக்கும் நேரங்களில் மகிழ்ச்சியான உணர்வு பெருகும். எனவேதான் இனிப்பு போன்ற நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடும்போது, மன நிறைவு கிடைக்கிறது.

மன அழுத்தம் உள்ளவர்கள் ஒரு குலோப்ஜாமூனையோ, ஐஸ்க்ரீமையோ சாப்பிட்டால்கூட நார்மலுக்குத் திரும்பிவிடுவார்கள். அதன் ரகசியம் இதுதான். எனவே, உணவைப் பார்த்தால் உடனே சுவைக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதைத் தவறு எனக் கருத வேண்டாம், ஆனால், அந்த உணர்வைக் கட்டுப்படுத்த முயல வேண்டும். கூடுமானவரை, ஸ்நாக்ஸ், பேக்கரி இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். நொறுக்குத்தீனிகளின் விளைவை கருத்தில் கொண்டு அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். யோகா மூலம் மனம் கட்டுப்பாடு அடைகிறது எனக் கருதுபவர்கள், யோகா போன்றவற்றை செய்து, மனதைக் கட்டுக்குள் வைக்கலாம்.

நொறுக்குத்தீனிக்கு மாற்று என்ன?

ஆரோக்கியமான சரிவிகித உணவு கலந்த உணவுப்பழக்கம், காலை உணவைக் கட்டாயம்சாப்பிடுவது, நேரத்துக்கு உணவை உண்பது போன்றவை நொறுக்குத்தீனிகளின் தேவையைக் குறைக்கும்.

வாயில் எதையாவது அரைத்துகொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள், பொட்டுக்கடலை, பொரி, பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளைச் சாப்பிடலாம்.

பொதுவாக, ஒரு நாளைக்கு 95 சதவிகிதம் உணவை உட்கொள்ள வேண்டும்; 5 சதவிகிதம் மட்டுமே நொறுக்குத்தீனிகளை எடுத்துக்கொள்ளலாம்.

ஓர் உணவு வேளைக்கும், இன்னோர் உணவு வேளைக்கும் இடையில் பழச்சாறு அருந்தலாம். பழச்சாறு அருந்துவதன் மூலம் நொறுக்குத்தீனி சாப்பிடும் உணர்வைக் குறைக்கலாம்.

மாலை வேளைகளில் சுண்டல், பயறு வகைகள், முளைகட்டிய பயறுகள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

தியேட்டர், பள்ளி வளாகங்கள், டீக்கடைகள் போன்றவற்றில் பாப்கார்ன், கோலா பானங்கள், பிரெஞ்ச் ஃபிரைஸ், சிப்ஸ் போன்றவற்றை விற்பதைத் தவிர்த்து, பொரி உருண்டை, வேர்க்கடலை, பொரி போன்றவற்றை விற்பதையும், அவற்றை வாங்கிச் சாப்பிடவும் ஊக்கப்படுத்தலாம்.

கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்றவை நல்லவையே. எனினும், வெல்லம், எண்ணெய், கடலை, எள் போன்றவை ஒன்று சேரும்போது கலோரி அதிமாகிவிடும். எனவே, இவற்றையும் எப்போதாவது சாப்பிடுவதே சிறந்தது.

பேரீச்சம்பழம், திராட்சை, வாழைப்பழம் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

நொறுக்குத்தீனிக்குப் பதில் ஃபுரூட் சாலட் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

நொறுக்குத்தீனி கலோரி!

‘ஒரு நாளைக்கு 2,000 கலோரி வரை எடுத்துக்கொள்வது போதுமானது’ என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். காலை, மதியம், இரவு நாம் உட்கொள்ளும் உணவில் இருந்தே 2,000-க்கும் அதிகமான கலோரி கிடைத்துவிடுகிறது. இதற்கிடையே நொறுக்குத்தீனி உட்கொள்ளும்போது, கூடுதலாக எவ்வளவு கலோரிகளைச் சேர்க்கிறோம் எனத் தெரிந்துகொள்ள கலோரி சார்ட் இதோ…
p7a
– மினு

தமிழர் வாழ்வில் புகுத்தப்பட்ட நொறுக்குத்தீனி!

இன்று விற்கபடும் பெருமளவு நொறுக்குத்தீனிகளை வணிக சந்தையின் கண்டுபிடிப்பாகவே கருதுகிறேன். இந்த நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதன் காரணமாக உடற்பருமனும் பற்சிதைவும், பல்வேறு வயிற்று உபாதைகளும், இதயநோய்களுமே உருவாகின்றன.

நொறுக்கு தீனிகள் வயது சார்ந்து வேறுபடுகின்றன. சிறார்கள், அலுவலக வேலை செல்பவர்கள், தொழிலாளர்கள் பெரும்பாலும் நொறுக்குதீனிகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். காரணம் போதுமான மதிய உணவு எடுத்துக் கொள்ளவில்லை என்பதே காரணம். ஊருக்கு ஊர் பெருகிப் போன பார்களே நொறுக்குதீனிகள் அதிகம் விற்கபடும் இடம். குடிக்கு முக்கிய துணையே இந்த நொறுக்குதீனிகள்தான். தமிழர்களின் பாரம்பரியத்தில் நொறுக்குதீனிகள் என்று தனி வகைகள் இல்லை. அவலும் பொறியும், பால் திரட்டும், எள் உருண்டைகளும், மாவு உருண்டைகளும், கும்மாயமும் முந்தைய காலங்களில் விரும்பி சாப்பிட்டிருக்கிறார்கள்.

விஜயநகர பேரரசு வந்ததற்கு பிறகுதான் எண்ணெயில் போட்டு பொறித்து சாப்பிடும் இனிப்பு, காரம் முதலான நொறுக்கு தீனிகள் நமக்கு அறிமுகமாகின. இன்று பலர் டீயும் பிஸ்கட்டும் சாப்பி
டுகிறார்கள், இந்த பழக்கமும் நம் முன்னோர்களிடையே இல்லை. பிரிட்டீஷ்காரர்களால் அறிமுகம் செய்யப்பட்ட பழக்கம். குளிர் தேசத்தில் தங்களது உடலை வெப்பபடுத்திகொள்ள டீயும், பிஸ்கட்டும் சாப்பிடுவார்கள். ஆனால் வெப்ப தேசமான நமக்கு அடிக்கடி டீ குடிக்க வேண்டிய அவசியமே கிடையாது.

பன்னாட்டு நிறுவனங்களின் சந்தைபடுத்துதல் மூலமாக உடலுக்கு ஒவ்வாத சிப்ஸ், ப்ரைம்ஸ் என பல்வேறு நொறுக்குதீனிகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. நொறுக்குதீனிகளை வாங்கி சாப்பிடும் முன்பு இரண்டு விஷயங்களை யோசித்து வாங்க வேண்டும். ஒன்று, அதில் என்ன ரசாயனங்கள், சுவையூட்டிகள் சேர்க்கபட்டுள்ளது. மற்றொன்று, தயாரிக்கபடும் முறை மற்றும் தரம் எப்படி உள்ளது. இதை விடுத்து வெறும் விளம்பரத்தை மட்டும் நம்பி வாங்கி சாப்பிட்டால் நோயை விலை கொடுத்து வாங்கியதாகவே அர்த்தம்.

இந்தியாவில் நொறுக்கு தீனிகள் குறைவாக பயன்படுத்துவது கேரளா தான். காரணம் கேரளாவில் வாழைப்பழமும், கிழங்கு வகைகளும் மீன்களும் அதிகமாக சாப்பிடுவார்கள். எனவே சந்தையில் விற்கபடும் நொறுக்கு தீனிகளின் தேவை குறைவாக இருக்கின்றன.

ஜப்பானில் அரிசியில் இருந்து விதவிதமான நொறுக்குதீனிகள் செய்கிறார்கள். கேப்பை, கம்பு, ராகு, சோளம் போன்ற பல்வேறு தானியங்களை பயன்படுத்தி நாம் விதவிதமாக நொறுக்குதீனிகள் செய்து சாப்பிடலாம். அவித்த வேர்கடலை, பொரி, சுண்டல், முளைவிட்ட பட்டாணி, பயிறு வகைகளைச் சாப்பிடலாம். எந்த நொறுக்குத்தீனி சாப்பிடுவதாக இருந்தாலும், அதில் இனிப்பு, உப்பு, கொழுப்பு சத்துகள் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். போதுமான உணவை தவிர்ப்பதால் தான் நொறுக்குத் தீனிகளின் தேவை அதிகமாகிறது. எனவே ஆரோக்கியம் தரும சரிவிகித உணவு அவசியமானது. நொறுக்குதீனிகளை கட்டுபடுத்துவதே ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முதற்படி.

Related posts

முடி உதிர்வை தடுக்க எழிய வழிமுறைகள்..!தலைக்கு எண்ணெய்யை ஒரு போதும் இப்படி தேய்காதீர்கள்..

nathan

உங்களுக்கு தெரியுமா காகம் தலையில் கொட்டினால் இந்த ஆபத்து ஏற்படுமா?..

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு

nathan

ஆரோக்கியமற்ற உணவை நிராகரிக்க உங்கள் மூளையை பழக்க இதோ சில வழிகள்!….

sangika

உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவும் ஜூஸ்கள்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ள 5 வழிகள்:

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்.. விறைப்பின்மைப் பிரச்சனை உள்ள ஆண்களுக்கு ..

nathan

கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

nathan

90% கேன் வாட்டர் அபாயமானது!தெரிஞ்சிக்கங்க…

nathan