செட்டிநாடு ஸ்டைல் உணவுகளுக்கு தனி பிரியர்களே உள்ளார்கள். ஏனெனில் செட்டிநாடு ஸ்டைல் உணவானது அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும். அதிலும் செட்டிநாடு ஸ்டைல் மீன் குழம்பு என்று சொன்னாலே பலரது நாஊறும். அந்த அளவில் மீன் குழம்பானது சுவையாக இருக்கும்.
உங்களுக்கு செட்டிநாடு மீன் குழம்பு செய்ய தெரியாதா? அப்படியானால் தொடர்ந்து படித்து வாருங்கள். ஏனென்றால் இங்கு செட்டிநாடு மீன் குழம்பின் செய்முறையை உங்களுக்காக தெளிவாக கொடுத்துள்ளோம்.
சுவையான வேறு: மண மணக்கும் செட்டிநாடு ரெசிபிக்கள்!!!
Chettinad Fish Curry
தேவையான பொருட்கள்:
வஞ்சிர மீன் – 8 துண்டுகள்
புளி – 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
அரைப்பதற்கு…
துருவிய தேங்காய் – 1/4 கப்
சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 2 டீஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு…
எண்ணெய் – 1 டீஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1/2 (நறுக்கியது)
சின்ன வெங்காயம் – 6
தாளிப்பதற்கு…
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 5 பல்
தக்காளி – 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, அதில் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைக்க கொடுத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு, அத்துடன் வதக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு வெதுவெதுப்பான நீரில் புளியை 1/2 மணிநேரம் ஊற வைத்து, 1/4 கப் சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பின் அதில் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து அதில் தக்காளியைப் போட்டு, பச்சை வாசனை போக நன்கு வதக்கி விட வேண்டும்.
பின் அத்துடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 20 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, பின் புளிச்சாறு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
எப்போது குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரிகிறதோ, அப்போது மீன் துண்டுகளை சேர்த்து மீன் நன்கு வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவி 1 மணிநேரம் கழித்து பரிமாறினால், செட்டிநாடு மீன் குழம்பு ரெடி!!!