நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைப்பதற்காக பல வழிகளிலும் முயற்சித்திருப்பீர்கள். ஆனால், அது முடியாமல் போயிருந்திருக்கலாம்.
எப்போதும் சாப்பிடுவதை விட மிகவும் குறைவாக உண்பது மட்டுமல்லாமல், சில முறை ‘உண்ணாவிரதம்’ கூட இருந்திருப்பீர்கள். அப்படி இருந்தும், உடம்பு எடை குறையவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா?
எடைக் குறைப்பிற்கு உணவுக் கட்டுப்பாடு மட்டும் போதாது. வேறு பல வழிகளும் உள்ளன. இவற்றில் கவனம் செலுத்திப் பாருங்களேன்!
தூக்கம் குறைவு
சரியான அளவுக்குத் தூக்கம் இல்லாமல் போனாலும் உடம்பின் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தூக்கம் குறைவதால் உணவு செரிக்காமல் அதனால் எடை அதிகரிக்கலாம். மேலும், இரவு தூங்காமல் ஸ்நாக்ஸ் மற்றும் காபி சாப்பிடுவதாலும் குண்டக்க மண்டக்க எடை அதிகரிக்கும். எனவே, போதுமான அளவுக்குத் தூங்கினால், எடை குறைய அதிகம் வாய்ப்புள்ளது.
மன உளைச்சல்
மன உளைச்சல் ஏற்படும் போது, சிலர் அதிகம் சாப்பிட விரும்புவார்கள். எனவே, மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் சந்தோஷமாக இருங்கள். அளவோடு சாப்பிடுங்கள். கொஞ்சம் உடலை வருத்தி வேலை செய்யுங்கள். தானாகவே எடை குறையும்.
மன அழுத்தம்
சில சமயம், கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டிருக்கும் போது, சிலர் வாழ்க்கையே வெறுத்துப் போய் மது அருந்துவதும், கண்ட கண்ட தின்பண்டங்களைக் கொறிப்பதும், உடம்புக்கு ஒவ்வாத உணவுகளைச் சாப்பிடுவதுமாக இருப்பார்கள். இதனால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும். இவற்றையெல்லாம் தவிர்த்தால், எடை குறையும்.
தைராய்டு
சிலருக்குத் தைராய்டு பிரச்சனை காரணமாக மெட்டபாலிசம் மளமளவென்று குறையும். இது தொடர்ச்சியாக நடக்கும் போது எடை அதிகரிக்கும். முறையான சிகிச்சைகள் மூலம் இதற்குத் தீர்வு காண வேண்டும்.
பி.சி.ஓ.எஸ்.
எடை அதிகமாக உள்ள பல பெண்களுக்கு பி.சி.ஓ.எஸ். என்ற கருப்பை பிரச்சனை ஏற்படும். இதனால் உருவாகும் சில ஹார்மோன் தொந்தரவுகள் காரணமாக இன்சுலின் தொடர்பான பிரச்சனைகளால் அவர்களுடைய எடை மளமளவென்று அதிகரிக்கும். மருத்துவரிடம் சென்று உரிய காலத்தில் சிகிச்சை எடுத்து வந்தால், எடை குறையும்.
தாமதமாக உணவு உட்கொள்ளல்
தினமும் இரவு தாமதமாக சாப்பிடுவதால், பெரும்பாலான கலோரிகள் கொழுப்பாக மாறி, கண்டிப்பாக உடல் எடை அதிகரிக்கும். தூங்கச் செல்வதற்கு சுமார் இரண்டு மணிநேரத்திற்கு முன்பாகவே இரவு உணவை முடித்து விட வேண்டும்.
அதிக கார்போஹைட்ரேட்
உடலில் கார்போஹைட்ரேட்டின் அளவு அதிகரிக்க அதிகரிக்க எடையும் கூடிக் கொண்டே போகும். ஆகவே இது அதிகமாக உள்ள உணவுகளுக்கு ‘குட்பை’ சொன்னாலே, எடையைக் குறைத்து ஸ்லிம்மாகி விடலாம்.