இரவில் செய்த இட்லி மீதம் உள்ளதா? அப்படியானால், அதனை தூக்கிப் போட வேண்டாம். மாறாக அதனை காலையில் எழுந்து சரவண பவன் ஸ்பெஷலான கைமா இட்லியை செய்யுங்கள். இந்த கைமா இட்லியானது குழந்தைகளால் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் மதிய வேளையில் சாப்பிடுவதற்கு கூட ஏற்றதாக இருக்கும்.
இங்கு அந்த சரவண பவன் கைமா இட்லியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
இட்லி – 6
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தக்காளி – 2 (அரைத்தது)
பச்சை பட்டாணி – 1/4 கப்
குடைமிளகாய் – 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சோம்பு பொடி – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் இட்லிகளை துண்டுகளாக்கிக் கொண்டு, வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த எண்ணெயில் இட்லிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்க வேண்டும்.
பின்பு வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்த தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும்.
அதற்குள் பட்டாணியை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு வேக வைத்த பட்டாணி மற்றும் குடைமிளகாயை வாணலியில் போட்டு கிளறி, பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் பொரித்து வைத்துள்ள இட்லியை வாணலியில் போட்டு நன்கு கிளறி இறக்கி, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறினால், சரவண பவன் கைமா இட்லி ரெடி!!!