ஆண்கள் கவலைக் கொள்ளும் விஷயத்தில் முதன்மையானவை அவர்களின் முடி பற்றி தான். முடி சிறிது கொட்ட ஆரம்பித்தாலும், ஆண்கள் புலம்பித் தள்ளுவார்கள். ஆனால் ஆண்களுக்கு முடி கொட்டுவதற்கு முக்கிய காரணம், மன அழுத்தம், அதிகமாக ஊர் சுற்றுவது, முடிக்கு ஆரம்பத்தில் இருந்து சரியான பராமரிப்பு கொடுக்காமல் இருப்பது, உணவுப் பழக்கம் போன்றவை.
அதற்காக ஆண்கள் தங்கள் முடிக்கு பராமரிப்பு கொடுப்பதில்லை என்று அர்த்தமில்லை. ஆனால் தங்களுக்கு பிரச்சனை வந்த பின்னரே எந்த ஒரு முறையான பராமரிப்பையும் கொடுக்கிறார்கள். ஆகவே எப்போதும் ஒரு பிரச்சனை வந்த பின் தீர்வு காண்பதை விட, பிரச்சனை வருவதைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டியவைகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றைப் பின்பற்றிலாம் அல்லவா!
எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஆண்களின் முடி ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டியவைகளைக் கொடுத்துள்ளது. அவற்றைப் படித்து பின்பற்றினால், நிச்சயம் முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
உலர வைப்பதில் மாற்றம் தேவை
தலைக்கு குளித்த பின்னர், டவல் கொண்டு முடியை தேய்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும். இல்லையெனில் முடி கையோடு வந்துவிடும். ஆகவே எப்போதும் கடுமையாக தேய்த்து துடைப்பதை நிறுத்தி, மென்மையாக முடியை உலர வைக்க வேண்டும்.
சுடுநீர் கூடாது
முடிக்கு ஆண்கள் செய்யும் தவறுகளில் முதன்மையானது சுடுநீரைப் பயன்படுத்துவது. சொல்லப்போனால், சுடுநீர் முடிக்கு எதிரி. அதில் முடியை அலசினால், முடி இன்னும் தான் கொட்டும். அதுமட்டுமின்றி, மிகவும் சூடான நீரில் ஆண்கள் குளித்தால், அவர்களின் விந்தணுக்களின் உற்பத்தியும் பாதிக்கப்படும். எனவே எப்போதும் ஆண்கள் சுடுநீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஷாம்பு கூடாது
தினமும் ஷாம்பு போட்டு குளித்து வந்தால், அதில் உள்ள கெமிக்கல்கள் ஸ்கால்ப்பில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை முற்றிலும் நீக்கி, ஸ்கால்ப்பை உலரச் செய்து, மயிர்கால்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, முடி உதிர்வு ஏற்படும். எனவே தினமும் ஷாம்பு போடுவதைத் தவிர்த்து, ஒருநாள் விட்டு ஒருநாள் ஷாம்பு போட்டு குளியுங்கள்.
சீப்பு
எப்போதும் அழுக்குகள் நிறைந்த சீப்புக்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுருட்டை முடி உள்ளவர்கள், நெருக்கமான பற்களைக் கொண்ட சீப்புக்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை முடியை பாதிக்கக்கூடும். எனவே ஆண்கள் அகலமான பற்களைக் கொண்ட சீப்புக்களை பயன்படுத்துவதே சிறந்தது.
தொப்பி
ஆம், தொப்பிகள் கூட முடியின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். எனவே தொப்பி பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் தொப்பி பயன்படுத்துவதன் மூலம், ஸ்கால்ப்பினால் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது.
ஹேர் கட்
முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், சீரான இடைவெளியில் முடியை வெட்டி விட வேண்டும். இதனால் முடி வெடிப்புக்கள் இருந்தால் அவை வெளியேற்றப்படும். மேலும் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
நேச்சுரல் கண்டிஷனர்
நேச்சுரல் கண்டிஷனர் என்பது வேறொன்றும் இல்லை. வாரம் ஒருமுறை தயிர் அல்லது ஆயில் மசாஜ் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். இதனால் முடிக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, முடி ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்கும்.
எண்ணெய் அவசியம்
தினமும் தவறாமல் தலைக்கு தேங்காய் எண்ணெய் வைத்துப் பழகுங்கள். இதனால் மயிர்கால்கள் ஆரோக்கியமாக இருந்து, ஸ்கால்ப் வறட்சியால் முடி உதிர்வது குறையும்.
ஹேர் ஜெல்
ஸ்டைல் செய்கிறேன் என்று பல ஆண்கள் ஹேர் ஜெல் பயன்படுத்துவார்கள். ஆனால் ஹேர் ஜெல் பயன்படுத்துவதால், ஸ்கால்ப்பில் அடைப்பு ஏற்பட்டு, ஸ்கால்ப்பினால் சரியாக சுவாசிக்க முடியாமல், முடி உதிர ஆரம்பிக்கும். எனவே ஹேர் ஜெல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.